Ad

வியாழன், 18 மார்ச், 2021

`சி.வி.சண்முகம் Vs முன்னாள் பி.ஏ; பாஜக கூட்டத்தை நிராகரித்த பாமக!’ - விழுப்புரம் மாவட்ட களநிலவரம்

தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குறுதிகளை அள்ளி வீசி அரசியல் கட்சியினர் தேர்தல் பிரசாரத்தை அனல்பறக்க நடத்தி வருகின்றனர். இதனால் ஒவ்வொரு தொகுதியும் பரபரப்பாகவே இருந்து வருகிறது. அந்த வரிசையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளும் பரபரப்பாகவே உள்ளது. விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக முதற்கட்ட பட்டியலிலேயே சி.வி.சண்முகத்தை அறிவித்தது அதிமுக தலைமை. அதைத் தொடர்ந்து திமுக ஆர்.லட்சுமணனையும், அமமுக ஆர்.பாலசுந்தரத்தையும் வேட்பாளர்களாக அறிவித்தது. சி.வி.சண்முகம், ஆர்.லட்சுமணன் மற்றும் ஆர்.பாலசுந்தரம் ஆகியோர் முற்காலத்தில் அதிமுக அணியில் இருந்தவர்கள்.

முன்னாள் அதிமுக விழுப்புரம் மாவட்ட செயலாளராக இருந்த ஆர்.லட்சுமணன் எவ்வாறு அதிமுக-வில் இருந்து பிரிந்து விழுப்புரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளரானார் என்பதைப் பற்றி சென்ற கட்டுரையில் குறிப்பிட்டு இருப்போம். (லிங்க் கீழே.)

Also Read: விழுப்புரம்: முன்னாள் அதிமுக மா.செ Vs இன்னாள் அதிமுக மா.செ... முந்துவது யார்?

சி.வி.சண்முகம்

தற்போது விழுப்புரம் தொகுதியில் அமமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் ஆர்.பாலசுந்தரம், சுமார் 10 வருடங்களுக்கு மேலாக சி.வி.சண்முகத்துடன் பயணித்தவர். சி.வி.சண்முகத்தின் நெருங்கிய விசுவாசி மற்றும் தனிப்பட்ட உதவியாளராக இருந்தவர். இவர், தனிப்பட்ட உதவியாளராக இருந்த போது அமைச்சரிடம் உதவியை நாடுபவர்கள் முதலில் இவரையே நாடுவார்களாம். சி.வி.சண்முகம் உடனான நெருங்கிய பயணத்தின் மூலம் அவரைப் பற்றி முழுமையாக அறிந்தவர் பாலசுந்தரம். அதிமுக இரண்டாக பிளவுற்ற போது அமமுக தரப்பில் ஐக்கியமானார் ஆர்.பாலசுந்தரம். தற்போது, அமமுக விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். இவருக்கு விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை வழங்கியுள்ளது அமமுக. முன்னாள் அதிமுக விழுப்புரம் மாவட்ட செயலாளராக இருந்து திமுக-வில் இணைந்து, தற்போது விழுப்புரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஆர்.லட்சுமணன், விழுப்புரம் தொகுதியில் அதிமுக - வில் தனக்கு நெருக்கமானவர்கள் மூலமாக குறிப்பிட்ட வாக்குகளை பிரிப்பார் என நெருங்கிய வட்டாரத்தில் கூறப்பட்டது.

தற்போது அமைச்சரின் தனிப்பட்ட உதவியாளராக இருந்த ஆர்.பாலசுந்தரம், அமமுக வேட்பாளராக விழுப்புரத்தில் அமைச்சருக்கு எதிராக போட்டியிடுவதன் மூலமாக வாக்குகள் சிதறுவதற்கு வாய்ப்புள்ளதால் அதிமுக தரப்பிற்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும்படியாக அமைந்துள்ளது. 'திமுகவை தோற்கடிப்பதே எங்கள் நோக்கம்' என பேசிய டிடிவி.தினகரன், அமைச்சருக்கு உதவியாளராக இருந்தவரையே தங்களுடைய வேட்பாளராக அதே தொகுதியில் நிறுத்தி மேலும் ஷாக் கொடுத்துள்ளார்.

VAT.கலிவரதன்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில், மூன்று இடங்களில் அதிமுகவின் கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன. அதில் ஒரு தொகுதியான திருக்கோவிலூரில் பாஜக போட்டியிடுகிறது. இந்த தொகுதி வேட்பாளராக வி.ஏ.டி.கலிவரதன் பாஜக-வால் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் சில வருடங்களுக்கு முன் பாமக-விலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். தற்போது விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவராக இருந்து வருகிறார். வேட்பாளராக தான் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சில தினங்களுக்கு முன்பாக தற்போதைய கூட்டணி கட்சியும், தான் முன்னாளில் பயணப்பட்ட கட்சியுமான பாமக- வின் தலைவர் ராமதாஸை காண்பதற்கு தைலாபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்றுள்ளார். கொரோனா காலம் என்பதினால் தன் தொண்டர்களுடனும் ஆன்லைன் மூலமாக மட்டுமே உரையாடி வரும் ராமதாஸ், VAT.கலிவரதனை உள்ளே அழைக்காமல் போன் மூலமாக வாழ்த்து கூறி அனுப்பியுள்ளார். இந்த தகவலை தன்னுடைய FB பக்கத்திலேயே பதிவிட்டுள்ளார் VAT.கலிவரதன்.

இது ஒருபுறம் இருக்க கடந்த 16.03.2021 அன்று திருக்கோவிலூர் தொகுதியில், பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள VAT.கலிவரதனை ஆதரித்து அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டணி கட்சிகள் பங்கு கொண்ட நிலையில், பாமகவை சேர்ந்த ஒருவரும் பங்கு கொள்ளவில்லையாம். இதனால் பாஜகவினர் ஒரே அப்செட் என்கின்றனர் கட்சியினர் வட்டாரத்தில்.

FB பதிவு

இதன் காரணம் அறிய கூட்டணி கட்சி வட்டாரத்தில் தொடர்புகொண்டு பேசினோம். "பாமகவினர் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது உண்மைதான். VAT.கலிவரதன் பாஜகவில் மாவட்ட தலைவராக இருப்பதற்கு முன்பாக பாமகவில் இருந்தவர். பாமகவில் இருந்து பிரிந்து வந்தவர் என்பதினால் அவர்கள் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். பின், அமைச்சர் பாமகவினரிடம் பேசியுள்ளார். எல்லாம் சரியாகிவிடும்" என்றனர். விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கும் இந்த அரசியல் சூழலில் யாருக்கு வெற்றி என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/villupuram-district-election-field-situation

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக