Ad

சனி, 20 மார்ச், 2021

கிங் கோலியின் 'Enjoy Enjaami... வாங்கோ வாங்கோ ஒன்னாகி'... என்ன குறை... இங்கிலாந்துக்கு என்ன குறை?!

உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கான முன்னோட்டம் என்கிற கணிப்புகளோடுத் தொடங்கிய இந்தியா - இங்கிலாந்துக்கு இடையேயான கடைசி டி20 போட்டி, உண்மையிலேயே இறுதிப்போட்டிக்கு உண்டான த்ரில்லோடு நடந்துமுடிந்திருக்கிறது. தனது ஒன் டவுன் இடத்தை இந்த சீரிஸில் விட்டுக்கொடுத்து இரண்டாவது இடத்தில் இறங்கிக்கொண்டிருந்த கோலி, நேற்று ஒப்பனிங் பேட்ஸ்மேனாக, இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களை விரட்ட, இந்தியா 3-2 என தொடரைக் கைப்பற்றியிருக்கிறது. இறுதிப்போட்டி அல்லது முக்கியமான நெருக்கடியான போட்டிகளில் எல்லாம் கோலி விளையாடமாட்டார் என்கிற விமர்சனங்களையும் ஒரே நாளில் அடித்து உடைத்திருக்கிறார் கோலி.

டாஸை வென்றால் மேட்ச்சை வெல்லலாம் என்கிற மேஜிக்கை மாற்றி, பவர்ப்ளேவில் அதிக ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற லாஜிக்கில் முயன்று இங்கிலாந்தை வெற்றிகொண்டுள்ளது இந்தியா. இத்தோடு டி20 போட்டிகளில் தொடர் வெற்றிகளைப் பெற்றுவந்த இங்கிலாந்தின் ஆதிக்கத்துக்கு முற்றிப்புள்ளிவைத்திருக்கிறது இந்தியா.

டாஸை வழக்கம்போல் தோற்ற கோலி முன்னால் நாங்கள் சேஸிங் செய்யப்போகிறோம் என்றார் மார்கன். ப்ளேயிங் லெவனில் எந்த மாற்றமுமின்றி இங்கிலாந்து களமிறங்க, இந்தியாவின் பக்கம் கேஎல் ராகுலுக்குப் பதிலாக நடராஜன் சேர்க்கப்பட்டிருந்தார். இஷான்தான் உள்ளே வருவார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், இந்த சீரிஸ் முழுக்க 'எதிர்பாராததை எதிர்பாருங்கள்' என்று சுற்றிக்கொண்டிருக்கும் கோலி நடராஜனை களமிறக்கினார்.

டாஸைத் தோற்றாலும், போனமுறை போல, ரன்களை டிஃபெண்ட் செய்ய, ஆறு பௌலிங் ஆப்ஷனோடு களமிறங்கியது, இந்தியாவின் புத்திசாலித்தனமான நகர்வாகவே பார்க்கப்பட்டது. அடுத்த ட்விஸ்ட்டை பேட்டிங் ஆர்டரில் வைத்திருந்தார் கோலி. ரோஹித்தோடு, கோலி ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இறங்கிவர பரவசமானார்கள் இந்திய ரசிகர்கள்.

வழக்கம்போல ஆதில் ரஷித்தின் ஸ்பின் அட்டாக்கோடு பெளலிங்கைத் தொடங்கியது இங்கிலாந்து. முதல் ஓவரை ரோஹித் - கோலி என இருவருமே பக்குவமாகக் கையாண்டனர். 3 ரன்களே கொடுத்தார் ஆதில். இரண்டாவது ஓவர் ஆர்ச்சரின் வேகத்தோடு தொடங்கியது. 140 வேகத்தில் வீச ஆரம்பித்தவர் மூன்றாவது பந்தில் 118கிமீட்டர் வேகம் என லெக்கட்டர் வேரியேஷன் காட்ட, இதற்காகவே காத்திருந்த கோலி கவர் திசையில் பவுண்டரி அடித்தார். இங்கிருந்துதான் இந்தியாவின் மிரட்டல் பேட்டிங் ஆரம்பமானது. ஆதில் ரஷீத்தின் அடுத்த ஓவரில் சிக்ஸரோடு ரோஹித் ஷர்மா ஹிட்மேட் மோடுக்கு மாற, இன்னொருபக்கம் கோலி பீஸ்ட் மோடில் பரபரக்க இந்திய ரசிகர்கள் 'ENJOY Enjaami' என கொண்டாட்ட மோடில் தாவிக்குதித்தார்கள்.

ரோஹித் - கோலி

முதல்முறையாக பவர்ப்ளே ஓவர்களில் 10 என்கிற ரன்ரேட்டோடு 60 ரன்களைத்தொட்டது இந்தியா. அதுவும் விக்கெட் இழப்பின்றி.

மிரண்டு போன இயான் மார்கன், ஓவருக்கு ஒரு பௌலர் என்கிற வியூகத்தோடு ஜோர்டனையும், சாம் கரணையும் அடுத்தடுத்து கொண்டுவந்தாலும், கோலி - ரோஹித்தின் தாக்குதல் தொடர்ந்தது.

சாம் கரணின் ஓவரில் ரோஹித்துக்கான கேட்ச் வாய்ப்பை உட் தவறவிட, அந்த ஓவரை சிக்ஸரோடும், தனது அரை சதத்தோடும் முடித்துவைத்தார் ரோஹித். 30 பந்துகளில். 50 ரன்கள் அடித்திருந்தார் ஹிட்மேட்.

தனது அபிமான புல்ஷாட் உட்பட பல ஷாட்டுகளையும், வழக்கத்திற்கும் அதிகமான நேர்த்தியோடு ரோஹித் ஆடிக் கொண்டிருந்தார். ரன்ரேட்டை ராக்கெட் வேகத்தில் எகிறச் செய்ய, அசைக்க முடியாத அடித்தளத்தை அமைத்துக் கொண்டது இந்தியா.

பார்ட்னர்ஷிப்பை உடைத்தே ஆகவேண்டும் என ஜோர்டன், சாம் கரணை அடுத்து ஸ்டோக்ஸ் கையில் ஒன்பதாவது ஓவரைக் கொடுத்தார் மார்கன். இரண்டாவது, மூன்றாவது பந்துகளில் சிக்ஸர், பவுண்டரி என மீண்டும் ரோஹித்தின் ஆட்டத்தில் அனல் பறந்தது. ஆனால், கடைசிப் பந்தை ஸ்லோ லெக் கட்டராக ஸ்டோக்ஸ் வீச, ரோஹித் பந்தைக் கணிக்கத் தவற, ஸ்டம்ப் பறந்தது. 188.24 ஸ்ட்ரைக் ரேட்டோடு, 64 ரன்களைச் சேர்த்திருந்த ரோஹித், ஆட்டமிழந்தார்.

சூர்யகுமார் உள்ளே வந்தார். சென்ற போட்டியில், முதல் பந்தை சிக்ஸருக்கு அனுப்பிய அவர், இந்தப் போட்டியில், ஆதில் ரஷீத்தின் ஓவரில் சந்தித்த இரண்டாவது மற்றும் மூன்றாவது பந்துகளை, சிக்ஸருக்குத் தூக்கி இந்திய ரசிகர்களை சிலிர்க்கவைத்தார். ஜோர்டனின் ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரிகள் எல்லாம் அடித்து லைக்ஸை அள்ளிக் கொண்டிருந்தார் சூர்யகுமார்.

இன்னொருபக்கம் கோலியோ, சூர்யகுமாரின் பேட்டிங்கைப் பெருமையோடு பார்த்துக்கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் அணியின் ஸ்கோர், 250-ஐ எட்டித் தொட்டுவிடும் அளவுக்கு எகிறிக் கொண்டிருந்தது ரன்ரேட் . இறுதியாக, சூர்யக்குமார், ரஷித் வீசிய கூக்லியை, லாங் ஆனில் சிக்ஸராக மாற்றமுயல, அதை பவுண்டரி லைனுக்குச் சற்றுமுன், கேட்ச் பிடித்த ஜோர்டன், தடுமாறிவிடுவோமென்ற பயத்தில், டீப்மிட் விக்கெட்டில் நின்றிருந்த ராயிடம் தூக்கியெறிய, அவர் அதை சரியாகப் பிடித்தார். 17 பந்துகளில், 32 ரன்களுடன் கேமியோ இன்னிங்ஸ் ஆடிக் கொண்டிருந்த சூர்யகுமாரின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

கோலி

இதற்கடுத்து பன்ட்டுக்கு பதிலாக பாண்டியா உள்ளே வந்தார். அத்துடன் கோலியின், அரைச்சதமும், 36 பந்துகளில் வந்துசேர்ந்தது. இந்தத் தொடரில் இது கோலியின் மூன்றாவது அரை சதம். தொடக்கத்தில், தன்னை நிலைநிறுத்திக் கொள்ள சில பந்துகளை எடுத்துக் கொண்ட பாண்டியா, அடுத்ததாக, அந்நியன் மோடுக்கு மாறி, ரன்களைக் குவிக்கத் தொடங்கினார். எல்லா பௌலர்களையும் பந்தாடிய இந்தக் கூட்டணியின் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப், கண்ணிமைக்கும் நேரத்தில் வந்து சேர்ந்தது. இவர்கள் மட்டுமல்ல, உட்டையும் பௌலிங்கில் அரைச்சதமடிக்க வைத்தது, இந்தக் கூட்டணி. நான்கு ஓவர்கள் வீசிய உட், 53 ரன்களை வாரி வழங்கி இருந்தார். ஜோர்டனின் ஓவரிலும் இரண்டு சிக்ஸர்களை, பாண்டியா விளாச, இறுதியாக, டி20-ல் இங்கிலாந்துக்கு எதிராக தங்களது அதிகமான ஸ்கோரான, 224-ஐ இந்தியா பதிவு செய்தது. ஃபார்மில் இல்லை என்ற ஏச்சுப்பேச்சுக்களை எதிர்கொண்ட கோலி, தொடரை, 231 ரன்களோடு முடித்துள்ளார். இரண்டு அணிகள் விளையாடும் ஐந்து போட்டிகளைக் கொண்ட தொடரொன்றில், பேட்ஸ்மேன் ஒருவர் எடுத்துள்ள, அதிகபட்ச ஸ்கோர் இதுவே. அதிரடி பேட்ஸ்மேனாக அசத்தியே பழகிய கோலியின் இன்றைய இன்னிங்ஸ், கொஞ்சம் வித்தியாசமானது. ப்ரஷர் கேம், டாஸ் தோல்வி, புதுப்பந்து என எல்லாம் அழுத்தமேற்றினாலும், கொஞ்சமும் அசராது, மிகப் பொறுப்பான, அதே நேரத்தில், வார்த்தையிலேயே வர்ணிக்க முடியாத, மிகச் சிறப்பானதொரு ஆட்டத்தைக் கோலி ஆடி கிங் கோலி என்பதை நிரூபித்தார். 52 பந்துகளில் 80 ரன்கள் அடித்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்தார் கோலி.

225 ரன்களைத் துரத்திய இங்கிலாந்துக்கு, இரண்டாவது பந்திலேயே, ராயின் விக்கெட்டை எடுத்து அதிர்ச்சி கொடுத்தார் புவனேஷ்வர். எனினும் அடுத்ததாக ஒன்றுசேர்ந்த, பட்லர்-மலான் கூட்டணி, பாண்டியா வீசிய போட்டியின் இரண்டாவது ஓவரிலேயே, 18 ரன்களைக் குவித்து, பயங்காட்டத் தொடங்கியது. சுந்தர், தாக்கூர் என பெளலர்களை மாற்றி, கோலியும் இந்த பார்ட்னர்ஷிப்பை உடைக்க முயன்றும், எதுவும் நடக்கவில்லை. ரன்மழையை இவர்கள் பொழிய வைக்க, ஐந்து ஓவர்களுக்குள்ளாகவே 50 ரன்களை எட்டி விட்டது, இந்தக் கூட்டணி. இந்தத் தொடரில் இதுவரை, சொல்லிக்கொள்ளும் அளவிலான ஆட்டத்தை வெளிப்படுத்தாத மலான், 'உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன்' என்பது பெயரளவில் மட்டுமல்ல என்பதனை, நேற்றைய ஆட்டத்தின் ஒவ்வொரு பந்திலும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். மறுமுனையில் பட்லரோ, இந்தியர்களின் ப்ரஷரை ஏற்றிக் கொண்டே இருந்தார். பந்துகளைத் திசைக்கொன்றாய்ப் பறக்கவிட்டார். முறிக்கவே முடியாதா இந்தக் கூட்டணியை, ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில், இங்கிலாந்து வெல்லப் போகிறதா என்ற ஏமாற்றம் எழுந்த நேரம், 75 பந்துகளில் 130 ரன்களைத் தொட்டு மிரட்டிக் கொண்டிருந்தது இந்த பார்ட்னர்ஷிப்.

வெறுத்துப் போன கோலி, ஓப்பனிங் ஓவரையே விக்கெட்டுடன் தொடங்கிய புவனேஷ்வரை உள்ளே கொண்டு வர, இந்தியா ஏங்கித் தவித்த அந்த விக்கெட் இறுதியாக விழுந்தது. புவனேஷ்வர் வீசிய பேக் ஆஃப் லென்த் பந்தை, லாங் ஆஃபில் பட்லர் அனுப்ப, அது பாண்டியா கையில் புகுந்தது. போட்டியின் போக்கை மாற்றிய ஓவர் இதுதான். ரன்கள் வெகுவேகமாக ஏறிக் கொண்டிருந்த தருணத்தில் இந்த ஓவரில் புவனேஷ்வர், மூன்று ரன்களை மட்டுமே கொடுத்திருந்தார்.

எனினும் போன போட்டியைப் போலவே, போட்டியை யூ டர்ன் போட்டு 180° கோணத்தில் திருப்பியது, தாக்கூரின் அந்த ஒற்றை ஓவர்தான். தன்னுடைய மூன்றாவது ஓவரை வீச வந்த தாக்கூர், ஒரு ஸ்லோ பாலில் பேர்ஸ்டோவையும், நக்கில் பால் வீசி, செட்டில் ஆகி ஆடிக் கொண்டிருந்த மலானையும் காலி செய்ய, இந்தியாவின் கைகளுக்குள் போட்டி வந்து அடைக்கலமானது.

இதற்கடுத்த ஓவரிலேயே, பாண்டியாவின் ஷார்ட் பாலில் புல்ஷாட் ஆட முயற்சித்து, மார்கன் ஒரு ரன்னில் வெளியேற, கடைசியாக வீசப்பட்ட 17 பந்துகளில், 4 விக்கெட்டுகளைப் பறி கொடுத்திருந்த இங்கிலாந்து, 12 ரன்களை மட்டுமே சேர்த்திருக்க, இந்தியாவின் வெற்றி உறுதியானது. நான்கு ஓவர்களில், வெறும், 15 ரன்களை மட்டுமே கொடுத்த புவனேஷ்வர் போட்டியையே புரட்டிப் போட்டார்.

புவனேஷ்வர்

ஸ்டோக்ஸும், ஜோர்டனும் அணியை மீட்டெடுக்கப் போராடியபோதும், அவர்களால் எந்த அதிசயத்தையும் நிகழ்த்திக் காட்ட முடியவில்லை. 19-வது ஓவரில், ஸ்டோக்ஸினை நடராஜன் ஆட்டமிழக்க வைக்க, அந்த ஓவரின் கடைசிப் பந்திலேயே ஆர்ச்சரும் ஆட்டமிழந்தார். தாக்கூர் வீசிய கடைசி ஓவரில், 20 ரன்களை ஆறுதல் பரிசாக இங்கிலாந்து பெற்றுக் கொள்ள, 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்திய அணி. ஆட்டநாயகனாக புவனேஷ்வரும், தொடர் நாயகனாக கோலியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

முதல்பாதியை இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாகத் தொடங்கி வைக்க, இரண்டாம் பாதியின் பின்பகுதியை இந்திய பௌலர்கள் மொத்தமாகத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, போட்டியை வென்றதோடு, 3/2 என தொடரையும் வென்று கோப்பையைக் கைப்பற்றியது இந்தியா. தொடர்ந்து ஏழு டி20 தொடர்களில் தோல்வியையே தொட்டதில்லை என்னும் இங்கிலாந்தின் வெற்றிச் சரித்திரம் மாற்றி எழுதப்பட்டுள்ளது. தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள இங்கிலாந்தை வீழ்த்தியதன் மூலமாக, சாம்பியன் யார் என்பதையும் உணர்த்தியுள்ளது இந்தியா.



source https://sports.vikatan.com/cricket/king-kohlis-team-india-finish-off-englands-winning-streak

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக