Ad

சனி, 20 மார்ச், 2021

"பழங்குடியினருக்கென தனிப் பல்கலைக்கழகம் வேண்டும்!" - தேர்தல் அறிக்கை வெளியிட்ட அமைப்பு

இந்தியாவில் இன்றைக்குப் பழங்குடிகளின் நிலை என்பது நின்றுவிட்ட கடிகார முள்ளாகவே இருக்கிறது. அரசின் கவனமும், செயல்திட்டங்களும் நவீன மனிதர்களையே மையப்படுத்தியே இருப்பதால், அனைத்து வகையிலும் பழங்குடிகள் புறக்கணிப்புக்கு ஆளாகின்றனர்.

இந்தப் பின்னணியில், தமிழகத்தின் 16-வது சட்டமன்றத்துக்கான பொதுத் தேர்தலை முன்னிட்டு, பூர்வகுடி - பழங்குடி மக்களுக்குச் செய்யப்பட வேண்டிய முக்கியமான கோரிக்கைகள் அடங்கிய தேர்தல் அறிக்கையைத் தமிழ்நாடு ஏக்தா பரிசத் வெளியிட்டுள்ளது.

பழங்குடிகளுக்கான தேர்தல் அறிக்கை

“பழங்குடிகளின் வளர்ச்சி என்பது அம்மக்களின் கலாச்சார-பாரம்பரியத் தன்மைகளைச் சிதைக்காமல் நிலைத்து - நீடித்து இருக்கும் வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும். ஆனால், குரலற்ற பூர்வகுடி - பழங்குடி மக்களின் வளர்ச்சி, முன்னேற்றம் குறித்து புரிதலற்ற இன்றைய அரசுகள், அவர்களுக்குப் போதிய முக்கியத்துவம் அளிப்பதில்லை” என்கிறார் இந்த அறிக்கையை உருவாக்கியிருக்கும் பழங்குடிகள் செயற்பாட்டாளர் ச.தனராஜ்.

“பழங்குடிகள் தங்களுக்கென்று சுய ஆளுகை, பொருளாதாரம், நிர்வாகம், ஒழுங்கு உடையவர்கள். தனித்தன்மையுடன் சிறப்பான, மகிழ்வான வாழ்வைச் சுதந்திரமாக வாழ்ந்தவர்கள். ஆனால், அரசு கட்டமைப்புக்குள் இணைக்கப்பட்ட பின்பு அவர்களுடைய வாழ்நிலையில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. பாரம்பரிய உரிமைகள் பறிக்கப்பட்டு நிம்மதி இழந்து வாடுகின்றனர்” என்று பழங்குடிகளின் இன்றைய நிலை குறித்து வேதனை தெரிவிக்கும் தனராஜ், பழங்குடித் தலைவர்கள், செயற்பாட்டாளர்கள் ஆகியோருடன் இணைந்து பழங்குடியினருக்கான இந்தத் தேர்தல் அறிக்கையை உருவாக்கியுள்ளார்.

இனக் குழு அடையாளம், நில உரிமை, கல்வி-வேலைவாய்ப்பு, நிர்வாகம் என்ற நான்கு முதன்மைப் பிரிவுகளில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த அறிக்கையின் மூலம், “பழங்குடியினரின் சிறந்த வாழ்வும், மண்ணுரிமையும், மாண்புரிமையும் பாதுகாக்கப்பட இச்சிறிய முயற்சி துணை நிற்கும் என்று உறுதியாக நம்புகிறேன்” என்கிறார் தனராஜ்.
ச. தனராஜ்

ஏக்தா பரிசத் அறிக்கையின் சில சிறப்பம்சங்கள்!

* இன்றைக்கும் ஏராளமான பூர்வகுடியினர் பழங்குடியினருக்கு உரித்தான சமூக, பொருளாதார, கலாச்சார வாழ்வியல் தன்மைகளைக் கொண்டிருந்தாலும் அவர்கள் அரசால் பட்டியல் பழங்குடிகளாக (Scheduled Tribes) அங்கீகரிக்கப்படவில்லை. வாழ்நாள் முழுவதும் பழங்குடி அடையாளத்துக்காகப் போராடி வருகின்றனர். அரசு இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* சமுதாயச் சான்றிதழுக்காகப் பழங்குடிகள் நீண்டகாலம் போராடுவதை மாற்றி, விண்ணப்பித்த ஒரு வாரக் காலத்துக்குள் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.

நில உரிமை

* வன நில உரிமை அங்கீகாரச் சட்டம் 2006 தமிழ்நாட்டில் நிறைவேற்றிட வேண்டும்.

* பழங்குடியினர் நிலங்களைப் பழங்குடியினர் அல்லாதோர் வாங்குவது தடை செய்யப்பட வேண்டும்.

கல்வி - வேலைவாய்ப்பு

* வனத்தில் வாழும் பழங்குடியினர் குழந்தைகளுக்கு அவர்கள்தம் தாய்மொழியிலேயே தொடக்க நிலைக் கல்வி அளிக்கப்பட வேண்டும். இம்மாணவர்களுக்கு உயர்நிலை படிப்புகளிலும் தனி பாடத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.

* பழங்குடிகளின் கல்வி முன்னேற்றத்துக்காக ஒருங்கிணைந்த பழங்குடியினர் பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும்.

* தமிழ் தாய்மொழியாக அல்லாத பழங்குடியினர் மொழிகள் அழியாமல் பாதுகாத்திட வேண்டும். குறிப்பாக வரி வடிவம் இல்லாத காடர், முதுவர், மலைமலசர், இருளர், குரும்பர், பணியர், சோளகர், காட்டு நாயக்கர் ஆகிய மொழிகளுக்கு வரி வடிவம் அளிக்க நிதி ஒதுக்கீடு செய்து பணிகளைத் துவங்க வேண்டும்.

காடர் பழங்குடி

நிர்வாகம்

* வன நில உரிமை அங்கீகாரச் சட்டம் 2006-ன் படி அனைத்து வன கிராமங்களையும் வருவாய் கிராமங்களாக மாற்றம் செய்ய வேண்டும்.

* வனத்திற்குள் மின்சார வேலி அமைத்தல் உள்ளிட்டவற்றைத் தடை செய்ய வேண்டும். மனித-விலங்கு மோதலுக்குக் காரணமான வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு, வன நிலங்கள் ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற வேண்டும்.

* பழங்குடியினரின் விவசாய உற்பத்திப் பொருட்கள், தேன், குங்கிலியம், மிளகு ஆகியவற்றை அரசின் நியாய விலைக் கடைகள் மூலம் விற்பனை செய்ய வழிவகை செய்ய வேண்டும்.

* பழங்குடியினரின் கலாசாரம், மொழி, பண்பாட்டைப் பாதுகாத்து வளர்த்திடப் பழங்குடியினர் கலாசார வளர்ச்சிக் கழகம் உருவாக்கப்பட வேண்டும்.

பழங்குடியினருக்கான தேர்தல் அறிக்கையை முழுமையாக வாசிக்க:



source https://www.vikatan.com/government-and-politics/policies/ekta-parishad-releases-tribal-manifesto

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக