Ad

சனி, 20 மார்ச், 2021

'நீயா நானா, பாட்டுக்கு பாட்டு’ ஸ்டாலின் - எடப்பாடி தேர்தல் பிரசார அட்ராசிட்டிகள்! முந்துவது யார்?

பதிலடி, குற்றச்சாட்டு, சவால் என கட்சிகளிடையேயான அதிரடி பிரசாரங்களால் தேர்தல் களம் அனல் பறக்கிறது. குறிப்பாக, ஆட்சியமைக்கும் வல்லமை - வாய்ப்பு கொண்ட இருபெரும் கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க முதல்வர் வேட்பாளர்களிடையேயான பிரசார உத்தியில் காரசாரம் தூக்கலாகி வருகிறது.

'தி.மு.க. தலைவர் எதைச் சொன்னாலும், அதனை மறுநாளே நிறைவேற்றிக் காட்டுபவராக பழனிசாமி இருக்கிறார்' என்று முரசொலி பட்டியலிட்டால், 'அரசு செய்யப்போவதை முன்கூட்டியே அறிந்துகொண்டு அறிக்கை வெளியிடுகிறார் மு.க.ஸ்டாலின்' என்று பதிலடி கொடுக்கிறது அ.தி.மு.க தரப்பு.

'ஜெயலலிதா மர்ம மரணத்தின் பின்னணியில் உள்ள உண்மைகளை கண்டறிவோம்' என்று மு.க.ஸ்டாலின், வெடிகுண்டு வீசினால் 'ஜெ. மரணத்துக்கு காரணமே ஸ்டாலின்தான்' என்று தடாலடியாக வீசிய இடத்துக்கே திருப்பியடிக்கிறார் எடப்பாடி பழனிசாமி!

எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம்

'ஜெயலலிதா மரணத்திற்கு ஸ்டாலின்தான் காரணம் என்று எடப்பாடி சொல்லி வருகிறார். நான்தான் காரணம் என்றால் வழக்கு போடுங்கள். சந்திப்பதற்கு நான் தயார். ஸ்டாலின் ரெடி..; எடப்பாடி பழனிசாமி நீங்கள் ரெடியா’ என்று ரிட்டர்ன் சவால் விடுக்கிறார் ஸ்டாலின்.

'எடப்பாடி பழனிசாமி தலைமையில், வெற்றி நடை போடுகிறது' என்று ஆளுங்கட்சித் தரப்பில் விளம்பரங்கள் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் நேரத்திலேயே 'அ.தி.மு.க ஆட்சியில் தமிழகம் வெற்றி நடை போடவில்லை; வெற்று நடைதான் போட்டு வருகிறது! ஆட்சிப் பொறுப்புக்கு தி.மு.க வந்தால் மட்டுமே தமிழகம் கெத்து நடை போடமுடியும்!' என்றது எதிர்க்கட்சி.

' நான் விவசாயி! ஆனால், விவசாயத்தைப் பற்றி ஸ்டாலினுக்கு என்ன தெரியும்? ஏர் பிடித்து உழுபவர்களுக்குத்தான் கஷ்டம் தெரியும்...!' என்ற ஸ்டாலினை சீண்டினார் பழனிசாமி. பதிலுக்குப் பேசிய ஸ்டாலினோ, 'நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான் என்று வடிவேலு பாணியில் காமெடி செய்துவருகிறார் எடப்பாடி பழனிசாமி' என்று கிண்டலடித்தார்.

தி.மு.க-வின் கிராமசபைக் கூட்டத்தில் பொதுமக்களிடம் மனு வாங்கப்படுவதை குறிப்பிட்ட பழனிசாமி, ' ஸ்டாலின் ஊர் ஊராகச் சென்று தரையில் அமர்ந்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்று பெட்டியில் போட்டு பூட்டி வைக்கிறார். பெட்டி, பூட்டு என்று ஸ்டாலின் எந்தக் காலத்தில் இருக்கிறார்?' என்றார் நக்கலாக.

'எடப்பாடி பழனிசாமிக்கு சாதனைகள் செய்யத் தெரியாது. அவருக்கு ஊழல் செய்யத்தான் தெரியும். அல்லது ஊர்ந்து போகத்தான் தெரியும். மக்கள் கொடுத்த மனுக்களை குப்பைத் தொட்டியில் போடுபவர் அவர். ஆனால், நாங்கள் அந்த பழைய மனுக்களையும் தூசு தட்டி எடுத்து மக்களின் குறைகளைப் போக்குவோம்' என்று சமாளித்தார் ஸ்டாலின்.

மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்

'எங்கள் தேர்தல் அறிக்கையை அப்படியே காப்பியடித்துவிட்டனர்' என்று தி.மு.க குற்றம் சாட்டினால், 'நாங்கள் சட்டமன்றத்தில் சொன்னதையெல்லாம் தேர்தல் அறிக்கையாக காப்பியடித்துவிட்டது தி.மு.க' என்கிறது அ.தி.மு.க.

'அட இவங்க எப்பவுமே இப்படித்தான்...' என்றவாறே மக்கள் இதையெல்லாம் ரசிக்கும் மனநிலைக்கு வந்துவிட்டனர். இதற்கிடையே, தேர்தல் பிரசார உத்திகளில், மக்களிடையே மன மாற்றத்தை ஏற்படுத்துவதில் 'முந்தி நிற்பது யார்' என்ற அனல் பறக்கும் கேள்விக்கு விடை கேட்டு அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியிடம் பேசியபோது,

Also Read: புதுச்சேரி: தேர்தலில் போட்டியில்லை; காங்கிரஸ் தலைவராகிறாரா நாராயணசாமி?

``ஏற்கெனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்கள் மீண்டும் தேர்தல் களத்தில் போட்டியிடும்போதுதான் அவர்கள் இருவரில் யாருடைய பிரசார உத்தி எடுபடுகிறது அல்லது முந்திச் செல்கிறது என்பதையெல்லாம் கணக்கிட முடியும். தற்போதைய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியோ, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினோ இன்னும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தனிப்பெரும் தலைமைகள் அல்ல.

மற்றபடி இன்றைக்கு இவர்கள் இருவருமே தேர்தல் பிரசாரத்தில் ஒருவரையொருவர் தாக்கிப் பேசிக்கொள்ளும் லாவணி அரசியல் என்பது ஏற்கெனவே தி.மு.க - அ.தி.மு.க இடையே நிகழ்ந்துவருவதுதான். எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இருவருமே சளைக்காமல் தங்கள் கருத்துகளை முன்வைத்துச் செல்கிறார்கள். அவ்வளவுதான்.

கமல்ஹாசன் - டி.டி.வி தினகரன் - சீமான்

தமிழக அரசியல் வரலாற்றில், முன் எப்போதும் இல்லாத வகையில் முழுக்க மாறுபட்ட தேர்தலாக இந்த 2021 சட்டமன்றத் தேர்தல் இருக்கப் போகிறது. ஏனெனில், களத்தில் நிற்கும் 5 அணிகளின் தலைவர்களும் தங்களை ஒரு முதல் அமைச்சராக - ஆளுமைமிக்க தலைவராக நிரூபிக்கவே முயற்சி செய்துவருகிறார்கள். ஆக 2021 சட்டமன்றத் தேர்தல் என்பது தலைமைக்கான தேர்தல்! இதில் தனிப்பட்ட தலைவர்கள் மீதான ஈர்ப்பு சக்தியும், அவர்களது தலைமைப் பண்பும்தான் வாக்கு சதவிகிதத்தை தீர்மானிக்கப்போகிறது.

இதில், அ.தி.மு.க., தி.மு.க-வுக்கு கட்சி அமைப்பு பலம் இருந்தாலும் அப்படியான அமைப்பு பலம் இல்லாத கமல்ஹாசன், டி.டி.வி தினகரன், சீமான் ஆகியோர் தங்களது தனிப்பட்ட தலைமை பலத்தால், அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற வாய்ப்பு உள்ளது. அவை வெற்றி பெற்று ஆட்சி அமைக்கின்ற அளவுக்கு இல்லையென்றாலும் ஏற்கெனவே அவர்கள் பெற்றுவந்த வாக்கு விகிதத்தை விடவும் அதிகமானதாகவே இருக்கும். எனவே, ஒவ்வொரு அணிக்கும் கிடைக்கின்றன் வாக்கு என்பது, அந்த அணியின் தலைமைக்கு கிடைத்த வாக்காகத்தான் கருதப்படும்.

Also Read: ``ஒரு தாயின் போராட்டம் இது!" - பினராயி விஜயனுக்கு எதிராகப் போட்டியிடும் வாளையார் சிறுமிகளின் தாய்

நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவிகிதம் 4 % என்றாலும் சீமான் முதல் அமைச்சராக வரவேண்டும் என்று எண்ணுகிறவர்களால் அவர்களது வாக்கு சதவிகிதம் நான்கைத் தாண்டியும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதேபோல், ம.நீ.ம., அ.ம.மு.க உள்ளிட்ட அணிகளின் வாக்குகளும் பெருமளவில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, தி.மு.க., அ.தி.மு.க என இருபெரும் கட்சிகளின் நிலையான வாக்கு விகிதம் என்பது இந்தமுறை குறைவாகவே இருக்கும். அதாவது கட்சி அமைப்பு பலம் இல்லாத இந்தத் தலைவர்கள் ஏற்படுத்தவிருக்கும் தாக்கத்தால், கட்சி அமைப்பு பலம் கொண்ட கட்சிகளின் வாக்கு சதவிகிதம் குறையவே செய்யும்'' என்கிறார் திடமாக.

பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான 'தராசு' ஷ்யாம் பேசும்போது, ``தேர்தல் களம் என்பது இப்போது முற்றிலுமே மாறிவிட்டது. முன்பெல்லாம் தலைவர்களது பேச்சைக் கேட்பதற்காக காசு கொடுத்தெல்லாம் கூட்டங்களுக்கு சென்றிருக்கிறோம். உதாரணமாக அண்ணா காலத்தில் 'வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது' என்பதுபோன்ற மேடைப்பேச்சு மொழியலங்காரம் மக்களை ஈர்த்துவரச் செய்யும். அடுத்து கலைஞர், ஜெயலலிதா காலத்திலும்கூட 'டான்சிராணி - ஜான்ஸிராணி', 'சொன்னார்களே செய்தார்களா', 'மோடியா லேடியா' போன்ற தேர்தல் நேர சொல்லாடல்கள் மக்களிடையே ஆழமாக எதிரொலிக்கும்.

தராசு ஷ்யாம் - ரவீந்திரன் துரைசாமி

1967-ல் தி.மு.க வெற்றி பெற்றுவிட்டது. ஆனால், அடுத்து தென்காசி தொகுதிக்கு வந்த இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய அண்ணா, `தமிழக மக்கள் ஆட்சி என்ற அறுசுவை விருந்தையே படைத்துவிட்டார்கள். அதில் இந்த இடைத்தேர்தல் வெற்றி என்பது ஊறுகாய் போன்றது. அறுசுவை விருந்தில் ஊறுகாய் இல்லாவிட்டால் எப்படி இருக்கும்' என்று உவமை நயத்தோடு பேசினார். இன்றைக்கும் இது மனதில் நிற்கிறது. ஆனால், இன்றைக்கு மேடைப்பேச்சு என்பதே தொலைந்துபோய் தேர்தல் களமே டிஜிட்டல் மயமாக மாறிவிட்டதால், இப்படியான பேச்சாற்றலுக்கோ அல்லது உவமை நயத்துக்கோ வழி இல்லாமல் போய்விட்டது.

பிரசாரம் இன்றைக்கு டெக்னிக்கலாக மாறிவிட்டது; உணர்வுபூர்வமானதாக இல்லை. அதாவது வாக்காளர்களின் மனதுக்கு நெருக்கமான பிரசாரமாக இல்லாமல், வாக்காளர்களை பிரமிக்க வைக்கின்ற பிரசாரமாக மாறியிருக்கின்றன. இப்படியான சூழ்நிலையில், மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி இருவரில் யாருடைய பிரசார உத்தி அல்லது வாக்கு சேகரிப்பு மக்களைச் சென்றடைகிறது என்ற கேள்விக்கு இப்போதே விடை சொல்வதென்பது கடினம். ஏனெனில், 2 கட்சிகளுமே ஒருவரையொருவர் மாறி மாறி குற்றச்சாட்டுகள்தான் வைக்கின்றனர். அ.தி.மு.க., 10 ஆண்டுகளுக்கு முந்தைய தி.மு.க ஆட்சி மீது குற்றச்சாட்டு சொல்கிறது. தி.மு.க-வோ, கடந்த 10 ஆண்டு அ.தி.மு.க அரசு மீது குற்றச்சாட்டுகளைச் சொல்கிறது!'' என்கிறார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/stalin-edappadi-eletion-war-campaign

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக