Ad

செவ்வாய், 9 மார்ச், 2021

கால் நீட்டி படுக்க முடியாத வீடு; தத்தளித்த முதியவருக்கு புது வாழ்வு ஏற்படுத்தித் தந்த தஞ்சை கலெக்டர்

தஞ்சாவூரில் முழுசாக கால் நீட்டி படுக்க முடியாத சிறிய குடிசை வீட்டில் முடங்கியபடி வாழ்க்கையினை ஓட்டி வந்த முதியவர் ஒருவருக்கு அரசு சார்பில் சிறிய வீடு ஒன்றை கட்டிக் கொடுக்கவும், முதியோர் உதவித் தொகை கிடைக்கவும் ஏற்பாடு செய்துள்ளார் மாவட்ட ஆட்சியர். அவரின் இந்த செயலை எண்ணி மனம் நெகிழ்ந்த அப்பகுதியினர் மனதார பாராட்டி வருகின்றனர்.

கலெக்டர் கோவிந்தராவ்

தஞ்சாவூர் கீழவாசல் அருகே உள்ள குயவர் தெருவில் வசிப்பவர் தங்கராசு. இவருக்கு வயது 80. மண் பானை மற்றும் அடுப்பு செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி கமலம் சுமார் 10 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு பிறந்த ஒரே மகனும் சிறு வயதிலேயே இறந்து விட்டார்.

இந்நிலையில் தங்கராசு மட்டும் அப்பகுதியில் பள்ளி வாசல் ஒன்றுக்கு சொந்தமான இடத்தில் நான்கு அடி உயரம் மூன்று அடி நீளத்தில் கூரையிலான குடிசை வீடு ஒன்றை அமைத்து இரண்டு வருடங்களுக்கு மேலாக தனியாக வசித்து வருகிறார். இதன் நுழைவாயில் இரண்டரை அடி உயரம் மட்டுமே இருப்பதால் தங்கராசு தவழ்ந்த படியே உள்ளே சென்று வெளியே வரும் நிலை. சொல்லப் போனால் முழுசாக கால் நீட்டிப் படுக்க முடியாத அளவில் உள்ள அந்த குடிசையில் அவருடைய வாழ்க்கை முடங்கியிருந்தது.

முதியவர் வீடு

குடிசைக்குள் இருக்கும் சமையலுக்கு பயன்படுத்த கூடிய பாத்திரங்களை விரல் விட்டு எண்ணி விடலாம் இது தான் அவருடைய பெரும் சொத்து. வீடு என சொல்ல முடியாத குடிசை, மண்பாண்டத் தொழிலில் போதுமான வருமானமும் இல்லை. இதனால் ஒழுகும் நிலையில் இருந்த அந்த வீட்டின் மேற் கூரையினை புதிய கீற்றினால் சீரமைப்பதற்கும் வழியில்லாமல் தவித்துள்ளார். இதையடுத்து சாலையில் கிடந்த வேஸ்ட் பிளக்ஸை எடுத்து வந்து அதனை கொண்டே மேற்கூரை அமைத்துள்ளார். இத்தனை துயரங்களுக்கு மத்தியிலும் `யார் கிட்டேயும் கை நீட்டி ஒத்த பைசா காசு வாங்க கூடாது, சாப்பாடு போடுங்கண்ணு யாரிடமும் கேட்கக் கூடாது’ என்ற வைராக்கியம் மனம் முழுக்க இருந்ததால் தள்ளாத வயதிலும் உழைத்தே வாழ்கிறார்.

மண்பாணை மற்றும் அடுப்பு செய்து அதில் வரும் சொற்ப வருமானத்திலேயே முதியவரின் குடிசை வீட்டின் அடுப்பு எரிகிறது. நம்பிக்கைக்கு எடுத்து காட்டாக வாழ்ந்த அந்த முதியவர் மீது கலெக்டரின் பார்வை பட, அவரின் இறுதிக் காலம் எந்த சிரமும் இல்லாமல் நகர்வதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

வெளியே வரும் முதியவர்

ஒரே நாளில் முதியோர் உதவித் தொகை, மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சிறிய அளவில் வீடு அமைத்து கொடுப்பதற்கான ஏற்பாட்டை கலெக்டர் கோவிந்தராவ் செய்துள்ளார். இதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. கலெக்டரின் மனித நேயமிக்க இந்த செயலை தங்கராசு கொண்டாடுகிறாரோ இல்லையோ அப்பகுதியினர் முகம் மலர பேசி பாராட்டி வருகின்றனர்.

இது குறித்து அப்பகுதியினரிடம் பேசினோம், ``கலெக்டர் கோவிந்தராவ் சார் வயது முதிர்ந்த வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக எங்க ஏரியாவுக்கு வந்தார். அப்போது அந்த பகுதியிலிருந்த முதியவர்களின் வீடுகளுக்கே சென்று நீங்க வாக்கு சாவடிக்கு வராமலேயே தபால் முறையில் ஓட்டு போடலாம் என எடுத்து கூறினார்.

முதியவர் தங்கராசு

அப்போது தங்கராசுவின் வீட்டை அதிகாரிகள் காண்பிக்க அதிர்ந்த கலெக்டர் ` என்னது இந்த வீட்டுக்குள்ள ஆள் இருக்காரா?’ எனக் கேட்டு மனம் வெதும்பினார். அப்போது முட்டி போட்டு தவழ்ந்த படி தங்கராசு வெளியே வர பதறிய கலெக்டரின் கண்களில் லேசாக கண்ணீர் எட்டி பார்த்தது. `என்னய்யா இங்கதான் இருக்கீங்களா’ என கேட்க ஆமாங்கய்யா என்றார் தங்கராசு. `எப்படி இந்த சின்ன வீட்டுக்குள்ள உங்களால இருக்க முடியுது முழுசா கால் நீட்டி படுக்க கூட முடியாதே’ என கேட்க தனக்கான இயலாமையையும், தனக்கென யாரும் இல்லை என்பதையும் நா தழு தழுக்க கூறினார் முதியவர்.

சாப்பாட்டிற்கு என்ன செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு,` ரேஷன் கார்டு இருக்கு. அதுல இலவச அரிசி கிடைக்குது. நான் அடுப்பு, மண் பானை, தண்ணி தொட்டி செஞ்சு விக்கிறேன். இதுல அப்பப்ப கொஞ்சம் காசு கிடைக்கும். அத மத்த செலவுக்கு வச்சுக்கிட்டு, ரேஷன் அரிசியை பொங்கி சாப்பிடுறேன் என சொல்ல அத்தனையும் பொறுமையாக கேட்டார் கலெக்டர். பின்னர் உடனடியாக தன்னுடன் ஆய்விற்கு வந்த மற்ற அதிகாரிகளை அழைத்து `உடனே இவருக்கு முதியோர் உதவித் தொகை கிடைக்க ஏற்பாடு செய்ங்க. அதோட இருக்கப் போற கொஞ்ச காலத்துல அந்த பெரியவர் சொந்த வீட்ல நிம்மதியாக வாழணும்.

வீடு

மாநகராட்சிக்கு சொந்தமான இடத்துல சின்ன அளவு வீடு கட்டவும் ஏற்பாடு செய்திடுங்க’, என உத்தரவிட அந்த பணிகள் தற்போது வேகமெடுத்துள்ளன. இதனை கலெக்டர் கோவிந்தராவ் தங்கராசுவிடம் சொல்ல.` இந்த குடிசை வீட்டுக்குள்ளேயே என் வாழ்க்கை முடிஞ்சுடுமோன்னு பல ராத்திரிகள் நெனச்சு தவிச்சுருக்கேன். ஒரே நாள்ல என் கனவிற்கான கதவை திறந்துட்டீங்கய்யா அந்த வீட்டுக்குள்ள நான் நிமிர்ந்து போற மாதிரி மட்டும் கட்டி கொடுங்கய்யா’ எனக் கேட்டார். சட்டென கலெக்டர் பெரியவரின் கைகளை பற்றிக் கொண்டார். அத்துடன் கலெக்டர் உடனடியாக இதற்கான ஏற்பாட்டினை செய்வார் என நாங்க கொஞ்சமும் எதிர்பார்க்கல.

அவர் பட்ட கஷ்டத்த நாங்க நேர்ல பாத்து அப்பப்ப சின்ன உதவி செய்வோம். ஆனா வைராக்கியமாக இருக்க வேண்டும் என்பதால அவ்வளவு சீக்கிரமா ஏத்துக்க மாட்டார். இப்போ அவரோட கஷ்டம் நிரந்தரமா தீரப்போறத நெனச்சு எங்களுக்கு சந்தோஷம் தாங்கல. ரொம்ப நன்றிங்க சார் என கலெக்டர்கிட்டே எங்க மகிழ்ச்சியை வெளிப்படுத்தினோம். `நான் என்னோட கடமையை தான் செஞ்சிருக்கேன்’ எனக் கூறிவிட்டு அவர் சென்றதாக தெரிவித்தனர்.

தங்சராசு

தங்கராசுவிடம் பேசினோம், ``ஓட்டு போடுற பத்தி சொல்றதுக்காக என்னோட வீட்டுக்கு வந்த கலெக்டரய்யா என்னோட நெலைய பாத்துட்டு கலங்கிட்டார். உடனே முதியோர் பணம் கிடைக்க ஏற்பாடு செஞ்சார். சின்ன வீடு ஒன்னு கட்டி தரதாவும் சொல்லியிருக்கார்.

என் உடம்புல எந்த நோவும் இல்ல. மருந்து மாத்திரைன்னு எதுவும் சாப்பிட்டது கிடையாது. யார்க்கிட்டேயும் எதுவும் கேட்டு நின்னதில்ல. வேலை செஞ்சு அதுல வர்ற காசுலதான் என் வண்டி ஓடுது. முன்ன மாதிரி பானை செய்ய முடியல வியாபாரமும் சரியில்ல. இனி என்னடா செய்யப் போறோம்ன்னு தவிச்சு நின்னேன். ஒரு நாள்ல என்னோட உலகத்த கலெக்டர் மாத்திட்டார். உடம்புல உசுரு இருக்குற வரை, அவர மறக்க மாட்டேன்.

கலெக்டர் கோவிந்தராவ்

கொஞ்ச நாளா என் ரெண்டு கண்ணும் மங்கி போய் எதையும் தெளிவா பார்க்க முடியல. ஒத்தாசைக்கு யாரும் இல்லங்கிறதால ஆஸ்பத்திரிக்கு போகவும் பயமா இருக்கு. என்னோட ரெண்டு கண்ணையும் சரி செஞ்சுட்டா இருக்குற சொச்ச காலத்த நிம்மதியா ஓட்டிப்புடுவேன்” என வெள்ளந்தியாக தெரிவித்தார்.



source https://www.vikatan.com/lifestyle/collector

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக