நீலகிரி மாவட்டம் ஊட்டி தொகுதிக்கு உட்பட்ட மஞ்சூர் பகுதியில் பா.ஜ.க சார்பில், பெண்களுக்கு இலவசமாக தையல் இயந்திரம் வழங்குவதாகவும், அதற்கான விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை நகல்,வாக்காளர் அடையாள அட்டை நகல்,வங்கி கணக்கு புத்தகத்தின் நகல், 3 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றை கரியமலையில் உள்ள ஒருவரது வீட்டில் கொடுக்க வேண்டும், என விண்ணப்பங்களை விநியோகம் செய்து பரப்புரையில் பா.ஜ.க நிர்வாகிகள் ஈடுபட்டனர்.
இதை அறிந்த மஞ்சூர் பெண்கள் பலரும் விண்ணப்ப படிவங்களை எடுத்துக் கொண்டு குறிப்பிட்ட அந்த இடத்துக்கு படை எடுக்கத் துவங்கினர்.
இதனை நோட்டமிட்ட தி.மு.க நிர்வாகிகள் சிலர் நேரில் சென்று, விசாரணை மேற்கொண்டதில் தேர்தல் விதிமுறைகளை மீறி பா.ஜ.கவினர் செயல்படுவதைக் கண்டறிந்து, தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதை அறிந்து வந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், பா.ஜ.க- வினர் வழங்கிய டோக்கன்கள் மற்றும் விண்ணப்பப் படிவங்களை பறிமுதல் செய்தனர். தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அவர்கள் மீது வழக்குப்பதிவும் செய்தனர்.
இது குறித்து நம்மிடம் பேசிய மஞ்சூர் தி.மு.க நிர்வாகி ஒருவர்,``நீலகிரி மாவட்டத்தின் தலைநகரான ஊட்டி தொகுதியை பா.ஜ.க-வினர் கைப்பற்ற போராடி வருகின்றனர். அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க-வின் பலத்தை நிரூபிக்க தேர்தல் விதிமுறை மீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
இது குறித்து பேசிய பா.ஜ.க நிர்வாகிகள்,``மஞ்சூர் பகுதியில் பா.ஜ.க மாவட்ட பிரதிநிதி தலைமையில் தொழில்துறை விண்ணப்ப படிவங்களை அளித்தோம்.தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் இலவசமாக தையல் மிஷின் வழங்கப்படும் என கூறி அனைவரிடமும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்தோம். மற்றபடி ஒன்றும் இல்லை" என்றனர்.
source https://www.vikatan.com/latest-news/bjp-breaks-election-code-of-conduct-sitribute-freebies-token
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக