Ad

செவ்வாய், 9 மார்ச், 2021

`புற்றுநோயைத் தடுக்குமா புரொக்கோலி?' - பலன்கள் முதல் ரெசிபி வரை... பகிரும் நிபுணர்கள்!

சில வருடங்களுக்கு முன்பு வரை சூப்பர் மார்க்கெட்டுகளில் மட்டுமே கிடைத்து வந்த புரொக்கோலி இப்போது தெருவோர காய்கறிக் கடைகளிலும் கிடைக்க ஆரம்பித்துவிட்டது. விளைவு, குளிரூட்டப்பட்ட கடைகளில் காஸ்ட்லியாக இருந்து வந்த புரொக்கோலி எல்லோரும் சாப்பிடுகிற காய்கறிகளின் பட்டியலில் ஒன்றாகிவிட்டது. ருசியில் அசத்துகிற புரொக்கோலிக்கு புற்றுநோய் வராமல் தடுக்கிற இயல்பும் இருக்கிறது என்கிறது மருத்துவம். புரொக்கோலியின் மருத்துவ பலன்கள் குறித்து டயட்டீஷியன் கிருஷ்ணமூர்த்தி அவர்களிடமும், புரொக்கோலியை எப்படிச் சுத்தம் செய்து சமைக்க வேண்டும் என்பது குறித்து சமையற்கலை நிபுணர் ரேவதி சண்முகம் அவர்களிடமும் கேட்டோம்.

டயட்டீஷியன் கிருஷ்ணமூர்த்தி

``புரொக்கோலியும் சாப்பிடலாம், முட்டைகோஸும் சாப்பிடலாம்!''

புரொக்கோலியில் பீட்டா கரோட்டின், நார்ச்சத்து, வைட்டமின் சி, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் என்று எக்கச்சக்க சத்துகள் இருக்கின்றன. இதிலிருக்கிற ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் நம் செல்களில் சேர்கிற `ஃப்ரீ ரேடிக்கல்ஸ்' எனப்படுகிற கழிவுகளை நீர்க்கச் செய்து வெளியேற்றிவிடும். அந்த வகையில் புரொக்கோலி புற்றுநோய் வராமல் தடுக்கிற உணவுகளில் ஒன்றாக இருக்கிறது. அதே நேரம் காலிஃப்ளவர் போலவே புரொக்கோலியிலும் மருந்தடித்து இருப்பார்கள் என்பதால், அதைச் சிறிது நேரம் கல் உப்பு போட்ட தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். புரொக்கோலியில் `மைக்ரோ ஆர்கனிசம்' எனப்படுகிற நுண்ணுயிர்கள் இருப்பதால் கொஞ்ச நேரம் கொதிநீரில் போட்டு எடுக்க வேண்டும். அதிக நேரம் சமைத்தால், புரொக்கோலி யிலிருக்கிற `வைட்டமின் சி' சத்து போய்விடும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

புரொக்கோலியும் காலிஃப்ளவரும், முட்டைகோஸ் குடும்பத்தைச் சேர்ந்தவை என்பதால், புரொக்கோலிக்குப் பதிலாக இந்தக் காய்கறிகளையும் சாப்பிடலாம். குறிப்பாக, பிங்க் நிற முட்டைகோஸில் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் அதிகம் இருப்பதால், இதுவும் புற்றுநோய் வராமல் தடுக்கும். இதே மருத்துவ குணம் வெள்ளை நிற வெங்காயத்துக்கும் இருக்கிறது. சிறுநீரகப் பிரச்னை இருப்பவர்கள் மட்டும் புரொக்கோலியைத் தவிர்த்து விடுங்கள்.''

புரொக்கோலியை எப்படிச் சுத்தம் செய்ய வேண்டும்?

ரேவதி சண்முகம்

``காலிஃப்ளவர் அளவுக்கு புரொக்கோலியில் புழுக்கள் இருப்பதில்லை. நீரில் கைப்பிடியளவு கல் உப்பு போட்டு அதில் 10 நிமிடங்கள் புரொக்கோலித் துண்டுகளைப் போட்டு ஊற வைக்கவும். அடுத்து, ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து, உப்புத்தண்ணீரில் ஊற வைத்து அலசிய புரொக்கோலித் துண்டுகளை அதில் போடவும். கொதி நீரில் ஒரு நிமிடம் மட்டுமே புரொக்கோலி இருக்க வேண்டும். அதிலேயே அரை வேக்காடாக வெந்துவிடும்.

புரொக்கோலி பொரியல் 

புரொக்கோலி பொரியல்

மேலே சொன்ன முறையில் புரொக்கோலியை சுத்தம் செய்து, அரை வேக்காடாக வேக வைத்து, புரொக்கோலித் துண்டுகளை வடித்தெடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, தட்டியப் பூண்டு, காய்ந்த மிளகாய் தாளித்து இதில் வெந்த புரொக்கோலித்துண்டுகளைப் போட்டு ஒரு கிளறு கிளறி இறக்கவும்.

புரொக்கோலி குழம்பு மற்றும் மசாலா!

புரொக்கோலி சமையல்

புரொக்கோலியை குருமா, சாம்பார் போன்றவற்றிலும் சேர்க்கலாம். ஆனால், இரண்டையும் சமைத்து முடித்து அடுப்பிலிருந்து இறக்குவதற்கு இரண்டு நிமிடங்களுக்கு முன்னால்தான், சுத்தம் செய்த புரொக்கோலியைச் சேர்க்க வேண்டும். இல்லையென்றால் புரொக்கோலி குழைந்துவிடும்.

மற்ற காய்கறிப் பொரியலுடனோ அல்லது உருளைக்கிழங்கு மசாலாவுடனோ புரொக்கோலியைச் சேர்த்து சமைக்க வேண்டும் என்றால், அவற்றைச் சமைத்து முடித்து அடுப்பிலிருந்து இறக்குவதற்கு இரண்டு நிமிடங்களுக்கு முன்னால்தான் புரொக்கோலியைச் சேர்க்க வேண்டும்.

புரொக்கோலி சாலட்!

புரொக்கோலி சாலட்

புரொக்கோலி, கேரட், வெள்ளரிக்காய், தக்காளி ஆகியவற்றை வழக்கம்போல சுத்தம் செய்து மெல்லியக் கீற்றுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். தேவையான அளவு தேங்காய் எண்ணெய், மிளகுத்தூள், கல் உப்பு, நாட்டுச்சர்க்கரை ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்து நறுக்கி வைத்துள்ள காய்கறிகளுடன் கலந்தால் சாலட் ரெடி.

Also Read: பேக்கரி ஸ்டைலில் வீட்டிலேயே செய்யலாம் வெஜிடபுள் ஹாட் டாக் #Video

புரொக்கோலி சூப்!

புரொக்கோலி சூப்

Also Read: இனி வீட்டிலேயே செய்யலாம், ஈஸி அண்ட் டேஸ்டி புரொக்கோலி பரோட்டா! #Video

20 பாதாமை வெந்நீரில் போட்டு, பாதியைத் தோலுரித்து வைத்துக்கொள்ளவும். மீதியை மெல்லியதாகச் சீவி நெய்யில் வறுத்து வைக்கவும். ஒரு புரொக்கோலியை வழக்கம்போல சுத்தம் செய்து, கொதி நீரில் போட்டு அரைவேக்காடாக வேக வைத்துக்கொள்ளவும். இதனுடன் தோலுரித்த பாதாம், தேவையான அளவு உப்பு போட்டு மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். சூப் திக்காக வேண்டும் என்பவர்கள், வேக வைத்த ஒரு சிறிய உருளைக்கிழங்கையும் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். இதனுடன் காய்ச்சிய அரை லிட்டர் பாலையும் சேர்க்க வேண்டும். இரண்டு டீஸ்பூன் வெண்ணெய்யில் பொடியாக நறுக்கிய ஒரு டீஸ்பூன் பூண்டை வதக்கி சூப்புடன் சேர்க்க வேண்டும். அடுப்பில் வைத்து லேசாகக் கொதி வரும்போது இறக்கிவிட வேண்டும். பரிமாறும்போது வறுத்து வைத்துள்ள பாதாமை சூப்பின் மேலே தூவிக் கொள்ளவும்.



source https://www.vikatan.com/food/healthy/experts-shares-broccoli-health-benefits-and-recipes

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக