ஆள்கள் இல்லாத நிதி நிறுவனங்கள், மாட்டுத்தீவனக் கடைகள் என்று பல இடங்களில் பூட்டுகளை உடைத்து, மூன்று இளைஞர்கள் திருடியச் சம்பவம் நடந்திருக்கிறது.
Also Read: நாமக்கல்: `கோயிலில் கொள்ளை; காட்டில் பங்கு பிரிப்பு!’ - மொத்தமாக மாட்டிய கொள்ளையர்கள்
ஈரோடு மாவட்டம், சோலார் பாலுசாமி நகர் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரன் (20), ராஜேஷ் (23), பெருமாள்( 20), குமார்( 20 ) ஆகிய நான்கு பேரும் ஒரு மோட்டார் பைக்கில் ஈரோட்டிலிருந்து ஜேடர்பாளையம் சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது வரும் வழியில் உள்ள ஆள்கள் இல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் மாட்டுத்தீவனக் கடைகளில் பூட்டை உடைத்து கல்லாவில் இருந்த பணத்தை திருடிக்கொண்டு வந்துள்ளனர். அதன்பிறகு, அந்த நான்கு பேரும் பிலிக்கல்பாளையம் பகுதியில் உள்ள ஒரு கோழி கடை அருகில் இருந்த நிதி நிறுவனத்தின் பூட்டை உடைத்து, உள்ளே சென்று திருட முயன்றுள்ளனர். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு தம்பதி, நிதிநிறுவனத்திற்குள் பூட்டை உடைத்துகொண்டு, நான்கு இளைஞர்கள் செல்வதைப் பார்த்து வாகனத்தை நிறுத்திவிட்டு, அந்த நிதிநிறுவனத்தின் அருகில் சென்றுள்ளனர். இதனால், பதட்டமான அந்த இளைஞர்கள், இவர்களை கத்தியைக் காட்டி குத்த வந்துள்ளனர். இதனால், இருவரும் சத்தம் போட்டுள்ளனர்.
அப்போது, அருகில் இருந்தவர்கள் ஓடி வரவே, அந்த இளைஞர்களில் மூன்று பேர் மோட்டார் பைக்கில் எடுத்துக்கொண்டு, தப்பி விட்டனர். ஒருவர் மட்டும் பைக்கில் ஏற முடியாததால், அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்குள் ஓட முயற்சி செய்து, அங்கிருந்த சுவரை தாண்டியுள்ளான். அப்போது, பொதுமக்கள் விவசாய நிலத்தை சுற்றி நின்றுள்ளனர். அந்த இளைஞர் சுவரை தாண்டியபோது, சுற்றி நின்றவர்கள் வளைத்துப் பிடித்து, அங்கு உள்ள கம்பத்தில் கட்டி வைத்து, அவருக்கு தர்மஅடி கொடுத்தனர். இது குறித்து, ஜேடர்பாளையம் காவல் நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், அந்த இளைஞரை விசாரித்தனர். ஈரோடு மாவட்டம், சோலார் பாலுசாமி நகரைச் சேர்ந்த காளியப்பன் மகன் மகேஸ்வரன் அந்த இளைஞர் என்பதை அறிந்தனர். அதோடு, அந்த இளைஞரை அழைத்துக்கொண்டு காவல் நிலையத்திற்கு சென்றனர்.
அங்கு அவனிடம் தீவிர விசாரணை நடத்தியதில், 'நாங்கள் நான்கு பேரும் ஈரோடு பகுதியில் இருந்து திருடுவதற்காக, ஜேடர்பாளையம் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தோம். அப்போது, சாப்பாட்டு நேரம் என்பதால் கொத்தமங்கலம் பகுதியில் நெடுகிலும் அப்பகுதியில் இருந்த நிதி நிறுவனங்கள் மற்றும் மாட்டுத்தீவன கடைகள் பூட்டப்பட்டு இருந்தன. அதோடு, அங்கே ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்ததால், நாங்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று பணத்தை எடுக்க முடிவு செய்தோம். அப்படி, ஒவ்வொரு கடையின் கல்லாவில் இருந்த பணத்தையும் வரிசையாக திருடினோம். அதேபோல், பிலிக்கல்பாளையம் பகுதிக்கு வந்தபோது அங்குள்ள நிதிநிறுவனம் பூட்டப்பட்டிருந்தது. அங்கே ஆள் நடமாட்டம் இல்லாததால், அந்த நிறுவனத்தின் பூட்டையும் உடைத்து உள்ளே சென்றோம். ஆனால், அந்த வழியாக வந்த இருவர் எங்களைப் பார்த்து சத்தம் போட்டதால், ஆள்கள் ஓடி வருவதைப் பார்த்து என்னுடன் வந்த மூவரும் பைக்கில் ஏறி தப்பி விட்டனர். நான் பைக்கில் ஏறுவதற்குள் அவர்கள் பைக்கை எடுத்துக் கொண்டு தப்பிவிட்டனர். நான் தப்பி ஓடும்போது, பொதுமக்கள் சுற்றி வளைத்து என்னை பிடித்து விட்டனர்' என்று கூறியுள்ளார்.
இது குறித்து, ஜேடர்பாளையம் காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்டவர்கள் புகார் கொடுத்தனர். அதன்பேரில், மகேஸ்வரனை கைது செய்த போலீஸார், தப்பியோடிய மற்ற மூன்று பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில், பரமத்திவேலூர் துணை காவல் கண்காணிப்பாளர் ராஜாரணவீரன் உத்தரவின் பேரில், குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சகாயத்திடம் மகேஸ்வரனை ஒப்படைத்தனர். பின்னர், குற்றப்பிரிவு போலீஸார் மகேஸ்வரனிடம், வேறு எங்கெல்லாம் இதுபோல திருடி இருக்கிறார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில், 'இந்த திருட்டு கும்பல் வேறு எங்கெல்லாம் திருடி இருக்கிறார்கள் என்பதன் முழு விவரம் தெரியவரும்' என குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதற்கிடையில், "பரமத்தி வேலூர் பகுதிதியில் தொடர்ச்சியாக கொள்ளை, திருட்டுச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. ஒரு வாரத்துக்கு முன்பு, பரமத்தி சந்தைப் பகுதியில் உள்ள சேற்றுக்கால் மாரியம்மன் கோயில் பூசாரியைத் தாக்கிவிட்டு, மதுரையைச் சேர்ந்த மூன்று பிரபலக் கொள்ளையர்கள், அம்மனின் அரை பவுன் பொட்டுத் தாலி, வெள்ளி கலசம், உண்டியலில் இருந்த பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு போனாங்க. அதோடு, அங்கிருந்த காட்டுப்பகுதியில் அவர்கள் பங்குபிரித்தபோது, அதைப் பார்த்த மக்கள் அவர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவங்க 'நாங்க யார் தெரியுமா?. எங்களை அடித்தால், உங்களை கொன்றுவிடுவோம். கத்தி இருந்தால், உங்களை குத்தி கிழித்துவிடுவோம். நாங்க கல்லூரி மாணவர்கள். எங்க மேல கைவச்சா, அவ்வளவுதான்'னு பேசி, பொதுமக்களை அதிர வச்சாங்க. இப்போது, இந்த சம்பவம். இப்படி, தொடர்ந்து இந்த பகுதியில் குற்றச்சம்பவங்கள் நடக்குது. காவல் துறை இரும்புக்கரம் கொண்டு குற்றவாளிகளை ஒடுக்க வேண்டும்" என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
Also Read: நாமக்கல்: `கோயிலில் கொள்ளை; காட்டில் பங்கு பிரிப்பு!’ - மொத்தமாக மாட்டிய கொள்ளையர்கள்
source https://www.vikatan.com/news/crime/4-thieves-caught-in-theft-case-in-finance-companies
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக