மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று (புதன்கிழமை) நந்திகிராமில், சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்வதற்காக சென்றிருந்தார். மாலை 6.30 மணியளவில், அங்கே உள்ள கோயிலில் பிராத்தனை செய்தபின் அந்த பகுதியில் இரண்டு நாட்கள் சுற்று பயணம் மேற்கொள்ளவிருந்தார். இந்நிலையில், `கோயிலில் இருந்து காருக்கு செல்லும் வழியில் கூட்டத்தில் மக்களிடம் பேசிக்கொண்டு இருந்த நேரத்தில் தன்னை அடையாளம் தெரியாத நான்கு நபர்கள் தாக்கியதாகவும், இதனால் தன் காலில் அடிப்பட்டதாகவும்’ மம்தா கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் வெள்ளை துணியால் கட்டப்பட்டிருந்த தன் இடது காலை காட்டிய அவர், அடிபட்டு வீங்கியிருப்பதை சுட்டி காட்டினார். மேலும் அவர் அந்நேரத்தில் உள்ளூர் காவல் துறையினரோ, பாதுகாவலர்களோ உடன் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
இதுகுறித்து, `தேர்தல் ஆணையத்தில் தான் புகராளிக்க இருக்கிறேன், இது திட்டமிட்ட செயல்’ என்றும் மம்தா கூறினார். சமூக வலைத்தளங்களில் வெளியான மம்தா பானர்ஜியின் வீடியோவில் அவரை, அவரின் பாதுகாவலர்கள் தூக்கிச்சென்று காரின் பின் சீட்டில் அமர வைக்கின்றனர்.
இரண்டு நாட்கள் நந்திகிராமில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்த நிலையில் அதனை ரத்து செய்துவிட்டு கொல்கத்தா அழைத்துச்செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஐந்து பேர் கொண்ட மருத்துவக்குழுவினரால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மருத்துவமனை நிர்வாகம் வெளியுட்டுள்ள அறிக்கையில், “மம்தா பானர்ஜியின் இடது கணுக்கால், கால், வலது தோள்பட்டை, முன்கை மற்றும் கழுத்தில் கடுமையான எலும்பு காயங்கள் ஏற்பட்டுள்ளன என ஆரம்ப பரிசோதனையில் தெரிய வந்திருக்கிறது. மேலும் மார்பு வலி, மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். அவர் 48 மணி நேரம் கண்காணிக்கப்படுவார்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து கிழக்கு மிட்னாப்பூர் காவல்துறை அதிகாரி கூறுகையில், `தற்போது எதும் கூறமுடியாது. விசாரணை நடந்து கொண்டிருக்கிறது’ என்றார்.
source https://www.vikatan.com/news/politics/mamata-banerjee-injured-in-nandigram
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக