தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று மாலை தனது 2021 ஐபிஎல் சீசனுக்கான முதல் பயிற்சியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. அம்பதிராயுடு, ஜெகதீசன், ரித்துராஜ் கெய்க்வாட், சாய் கிஷோர் உள்ளிட்ட வீரர்கள் இதில் கலந்துகொண்டார்கள்.
கடந்த ஆண்டு விட்டதைப் பிடித்துவிடும் முனைப்பு சென்னை சூப்பர் கிங்ஸூக்குள் தெரிய ஆரம்பித்திருக்கிறது. கடுமையான பயிற்சி திட்டத்தை வகுத்திருக்கிறார்கள். எப்போதுமே ப்ராசஸை வலியுறுத்தும் கேப்டன் தோனி, பயிற்சிகளில் சிறு தொய்வுகூட ஏற்படக்கூடாது என வீரர்களிடம் சொல்லியிருக்கிறார். சென்னை வந்துவிட்ட சுரேஷ் ரெய்னா இன்னும் சில நாட்களில் பயிற்சியில் இறங்கிவிடுவார். விஜய் ஹசாரே தொடரில் கேரளாவுக்காக விளையாடிய ராபின் உத்தப்பாவும் இன்னும் சில நாட்களில் சென்னை கேம்ப்புக்குள் இணைந்துவிடுவார்.
ஆனால், தற்போது பயிற்சியைத் தொடங்கியிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸுக்குள் போதுமான பெளலர்கள் இல்லை. ஷர்துல் தாக்கூர், சஹார், எங்கிடி, மொயின் அலி, இம்ரான் தாஹிர், ஜோஷ் ஹேசல்வுட் உள்ளிட்ட சென்னை சூப்பர் கிங்ஸின் முக்கிய பெளலர்கள் பலரும் மார்ச் மாத இறுதியில்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் கேம்ப்புக்குள் இணைய இருக்கிறார்கள். இதனால் தற்போது சென்னையில் பயிற்சியில் இருக்கும் தோனி உள்ளிட்ட பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளிக்கக்கூடிய நெட் பெளலர்கள் இல்லை. இதனால் வெளியில் இருந்து ரிசர்வ் வீரர்களாக நெட் பெளலர்களை அழைக்கும் முடிவை எடுத்திருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம்.
மஹீஷ் தீக்ஷனா, மதீஷா பதிரனா எனும் இரண்டு இளம் இலங்கை பெளலர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் கேம்புக்குள் சேர அழைப்புவிடுக்கப்பட்டிருக்கிறது. ஆஃப் ஸ்பின்னரான மஹீஷ் தீக்ஷனா சமீபத்தில் இலங்கையில் நடந்த லங்கா பிரிமீயர் லீகில் ஜாஃப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்காக விளையாடியவர். இந்த அணிதான் லங்கா பிரிமியர் லீகை வென்றது. 20 வயதான மஹீஷ் தீக்ஷனா லங்கா பிரிமியர் லீகில் சிறப்பாகப் பந்துவீசியதோட, சமீபத்தில் நடந்து முடிந்த அபுதாபி டி10 தொடரிலும் விக்கெட் வேட்டை நிகழ்த்தினார். மிஸ்ட்ரி ஸ்பின்னராகக் கொண்டாடப்படுகிறார் தீக்ஷனா
மற்றொரு வீரரான 18 வயது மதிஷா பதிரனா 2019-ல் நடைபெற்ற ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் விளையாடியவர். அதில் இந்தியாவுக்கு எதிரானப் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு 175 கிமீட்டர் வேகத்தில் உலகின் வேகமானப் பந்தை வீசியதாகக் கொண்டாடப்பட்டவர் இந்த பதிரனா. வைடாக வீசப்பட்ட இந்தப்பந்து பின்னர் ஸ்பீட் மெஷினில் ஏற்பட்ட கோளாறால் 175கிமீட்டர் வேகம் எனக் காட்டியாதாகவும், தவறு நிகழ்ந்துவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் ஷோயப் அக்தர், பிரட் லீ வரிசையில் இவர் விரைவில் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளராக உருவாவார் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது. இலங்கை இவரை ஜூனியர் மலிங்கா எனக் கொண்டாடுகிறது. இவர்கள் இருவரும்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குள் விரைவில் ரிசர்வ் வீரர்களாக இணைய இருக்கிறார்கள்.
''இரண்டு இலங்கை வீரர்களும், இளம் வயதிலேயே மிகவும் திறமை வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். அதனால்தான் அவர்களை ரிசர்வ் வீரர்களாக சென்னை அணிக்குள் எடுக்க இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் அனுமதி கேட்டிருக்கிறோம். இலங்கை கிரிக்கெட் போர்டு இன்னும் No Objection Certificate கொடுக்கவில்லை. அது கிடைத்ததும் இலங்கை வீரர்கள் சென்னை வருவார்கள்'' என்றார் சிஎஸ்கேவின் சிஇஓ காசி விஸ்வநாதன்.
சென்னை சூப்பர் கிங்ஸின் முதல் 5 போட்டிகளும் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுவதால் சூப்பர் கிங்ஸின் கேம்ப் அங்கே மாற்றப்படுமா என விஸ்வநாதனிடம் கேட்டேன். ''இப்போதைக்கு அப்படி எந்த திட்டமும் இல்லை. ஏப்ரல் 10-ம் தேதிதான் மும்பையில் போட்டி. அதனால் இந்த மாத இறுதிவரை திட்டமிட்டப்படி சென்னையிலேயேதான் பயிற்சிகள் நடக்கும்'' என்றார்.
source https://sports.vikatan.com/ipl/chennai-super-kings-invited-srilankan-players-to-be-part-of-the-training-camp
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக