சென்னை வேளச்சேரி காவல் நிலைய பகுதியில் 10-ம் தேதி தலைமைக் காவலர் வினோத் மற்றும் காவலர் ராஜன் ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது தண்டீஸ்வரம் பகுதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிஎம்-ல் இரண்டு நபர்கள் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்வதாக அந்த வங்கியின் மும்பை கட்டுபாட்டு அறையிலிருந்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தகவல், காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து வேளச்சேரி ரோந்து போலீஸாருக்கு கூறப்பட்டது.
Also Read: சென்னை: 2 ஏடிஎம் இயந்திரங்களுடன் மல்லுக்கட்டிய கொத்தனார் - லாக்கரை உடைக்க முடியாததால் தப்பிய பணம்!
உடனடியாக போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். அப்போது இரண்டு இளைஞர்கள் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துக் கொண்டிருந்தனர். அதைப்பார்த்த போலீஸார் உடனடியாக ஏடிஎம் மையத்தில் ஷட்டரை பூட்டினர். அதனால் இளைஞர்கள் வசமாக உள்ளுக்குள் சிக்கிக் கொண்டனர். பின்னர் அவர்களை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் விசாரித்தபோது மிசோரம் பகுதியைச் சேர்ந்த ரேம்ளல்ங்கக (29), ஜானி லால்ரூடிகிமா (28) எனத் தெரியவந்தது.
இவர்கள் இருவரும் ஏடிஎம் திருடர்களாக மாறியது எப்படி என போலீஸார் கூறுகையில், ``கடந்த ஓராண்டுக்கு முன் வேலை தேடி ரேம்ளல்ங்கக, ஜானி லால்ரூடிகிமா ஆகிய இருவரும் சென்னை வந்து காரம்பாக்கம் பகுதி கந்தசாமி நகர், 3-வது குறுக்கு தெருவில் தங்கியிருந்திருக்கின்றனர். ஆனால் வேலை கிடைக்கவில்லை. அதனால் பண தேவைக்காக ஏடிஎம் மையத்தை உடைத்து பணத்தை திருட முயற்சி செய்திருக்கின்றனர்.
ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்றபோது அங்கிருந்த சிசிடிவியில் அந்தக் காட்சி பதிவாகியிருக்கிறது. அதை வங்கியின் தலைமை அலுவலக கட்டுபாட்டிலிருந்த ஊழியர்கள் பார்த்து, உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதிகாலை 2 மணியளவில் சம்பவ இடத்துக்குச் சென்று ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வடமாநில இளைஞர்களைப் பிடித்து கைது செய்திருக்கிறோம். அதனால் ஏடிஎம் இயந்திரத்திலிருந்த லட்சக்கணக்கான ரூபாய் தப்பியிருக்கிறது" என்றனர்.
ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்றது தொடர்பாக வங்கி மேலாளர் ராஜேஷ் கண்ணன் வேளச்சேரி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் ரேம்ளல்ங்கக, ஜானி லால்ரூடிகிமா ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருக்கின்றனர்.
source https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-2-youths-in-velachery
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக