Ad

திங்கள், 8 மார்ச், 2021

மதுரை : விதிமுறைகளை மீறி ஓ.பி.எஸ்-ன் இளைய மகனுக்கு மீனாட்சியம்மன் கோயிலில் சிறப்பு மரியாதை!

துணை முதலமைச்சரின் இரண்டாவது மகனுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி மதுரை மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம் மரியாதை செய்து வரவேற்ற சம்பவம் சர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயபிரதீப்

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மூத்த மகன் ரவீந்திரநாத் எம்.பி-யாக இருக்கிறார். பல துறைகளில் ஒப்பந்தம் எடுத்து தொழில்கள் செய்து வரும் இரண்டாவது மகன் ஜெயபிரதீப்பும் அரசியலில் காலடி எடுத்து வைக்க திட்டமிட்டு வருகிறார். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தேனி அல்லது மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு தொகுதியில், அவர் போட்டியிடுவார் என்று சொல்லப்படுகிறது.

ஆன்மிக விஷயங்களில் அதிக நாட்டமுள்ள இவர் பல்வேறு கோயில்களுக்கு சென்று வழிபடுவதில் ஆர்வம் காட்டி வரும் நிலையில் நேற்று மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வழிபட வந்தார்.

மரியாதை செய்த கோயில் அலுவலர்கள்

தற்போது தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளதால், எந்தவொரு முன்னுரிமையும் கொடுக்கக் கூடாது முடியாத என்ற விதி உள்ள நிலையில், எந்தவொரு அரசு பொறுப்பிலும் இல்லாத ஜெயபிரதீப்புக்கு மீனாட்சியம்மன் கோயில் அலுவலர்கள், பட்டர்கள் சால்வை அணிவித்து மரியாதை செய்து அவர் வழிபாடு செய்ய சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரை மீனாட்சியம்மன் கோயில், காவல்துறை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. பக்தர்கள் மொபைல் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. அதிகாரிகள் அனுமதிக்கும்போதுதான், பத்திரிகையாளர்கள் கேமரா கொண்டு செல்ல முடியும். அப்படியுள்ள சூழலில் மீனாட்சியம்மன் கோயில் உள்ளே, ஜெயபிரதீப் படங்கள் எடுத்துள்ளார்.

கோயிலுக்குள் ஜெயபிரதீப் எடுத்த படம்

தேர்தல் நடத்தை விதிகளை மீறி மீனாட்சியம்மன் கோயில் அலுவலர்கள் ஜெயபிரதீப்புக்கு வரவேற்பு கொடுத்துள்ளது, கோயில் உள்ளே படங்கள் எடுக்க அனுமதித்தது சர்ச்சையாகியுள்ளது. இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும் மதுரை கலெக்டருமான அன்பழகனிடம் கேட்டோம், 'இது பற்றி விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக' நம்மிடம் தெரிவித்தார்.



source https://www.vikatan.com/news/politics/ops-son-visit-at-madurai-temple

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக