Ad

புதன், 10 மார்ச், 2021

`முதல்வருக்கு கோயில் கட்டினேன், அவர் நாமத்தைப் போட்டுட்டாரு’ - வாய்ப்பில்லா எம்.எல்.ஏ-க்கள் குமுறல்

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அ.தி.மு.க வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதில் சிட்டிங் எம்.எல்.ஏக்கள் 41 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. முதல்வர் மாவட்டமான சேலத்தில் மட்டும் 7 சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இதில் சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியைத் தவிர மற்ற 10 சட்டமன்ற தொகுதிகளும் அ.தி.மு.க வசம் இருக்கிறது. கெங்கவல்லி சட்டமன்ற உறுப்பினர் மருதமுத்து, ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னதம்பி, சேலம் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் சக்திவேல், ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் செம்மலை, சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் ராஜா, வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் மனோன்மணி ஆகிய 7 சட்டமன்ற உறுப்பினர்கள் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக அந்த சட்டமன்ற உறுப்பினர்களிடம் கருத்து கேட்டோம்.

ஆத்தூர் சின்னதம்பி

கெங்கவல்லி தொகுதி - மருதமுத்து

'' நான் கட்சிக்கும், ஆட்சிக்கும் மட்டுமல்ல அண்ணன் எடப்பாடியாருக்கும் விசுவாசமாக இருந்தேன். வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட எனக்கு ஏன் சீட் கொடுக்கவில்லையென்று தெரியவில்லை. எம்.எல்.ஏவாக என்னுடையை பணியை சிறப்பாக செய்தும் எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் வருத்தமாக இருக்கிறது. மேற்கொண்டு பேச விரும்பவில்லை'' என்றார்.

ஆத்தூர் தொகுதி - சின்னத்தம்பி,

''பழைய ஆட்கள் வேண்டாம். புதிய ஆட்கள் நிறுத்தலாமென முதல்வர் முடிவு பண்ணியிருக்கிறார். நான் முதல்வருக்கு எல்லா இடத்திலும் ஆதரவாகவும், உறுதுணையாகவும் இருந்துள்ளேன். முதல்வரின் அன்பு தோழனாக விளங்கியுள்ளேன். அவர் முதல்வராக வேண்டுமென கோயிலில் யாகம் வளர்த்தேன். அவர் முதல்வர் ஆனதும் அவருக்கே கோயிலும் கட்டினேன். கோயில் கட்டிய எனக்கு நாமத்தைப் போட்டுட்டார். விசுவாசத்திற்கு கிடைத்த சான்றாகவே பார்க்கிறேன்'' என்றார்.

கெங்கவல்லி மருதமுத்து

வீரபாண்டி தொகுதி - மனோன்மணி

''என்ன காரணத்திற்காக எனக்கு சீட் கொடுக்கவில்லை என்று தெரியவில்லை. புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சி தலைவி ஜெயலலிதா ஆகியோர், எங்கள் குடும்பத்திற்கு தொடர்ந்து சீட் கொடுத்து வந்தார்கள். ஆனால் முதலமைச்சர் பழனிசாமி சீட் கொடுக்கவில்லை. அதற்கு என்ன காரணமென்றும் தெரியவில்லை. ஆனால் நாங்கள் கட்சியை உயிராக நினைக்கக் கூடியவர்கள். எதையும் வெளியில் சொல்லுவதற்கு விருப்பமில்லை'' என உச் கொட்டினார்.

சங்ககிரி தொகுதி - ராஜா,

''கட்சி தலைமை என்ன முடிவு செய்கிறதோ அதற்கு நான் கட்டுப்பட்டு தேர்தல் பணி ஆற்ற இருக்கிறேன். எனக்கு சீட் கிடைத்த போது மற்றவர்கள் எனக்காக பணியாற்றினார்கள். அதுபோல தற்போது யாருக்கு சீட் கிடைத்திருக்கிறதோ அவருக்காக நான் தேர்தல் பணியாற்றுவேன்'' என்றார்.

சேலம் தெற்கு: சக்திவேல்,

''அடிமட்ட தொண்டனுக்கும் சீட் வழங்கப்பட வேண்டுமென்பதே அ.தி.மு.கவின் அடிப்படை கொள்கை. கட்சிக்காக உழைப்பவர்கள் அனைவரும் மேன்மை அடைய வேண்டுமென்பதற்காக எங்களுக்கு சீட் மறுக்கப்பட்டிருக்கலாம். நான் சாமி தரிசனம் செய்து கொண்டிருப்பதால் பிறகு பேசுகிறேன்'' என்றார். மேட்டூர் எம்.எல்.ஏ செம்மலையிடமும், ஓமலூர் எம்.எல்.ஏ வெற்றிவேலிடமும் பேசுவதற்கு பல முறை முயற்சித்தும் பேச முடியவில்லை.

வீரபாண்டி: மனோன்மணி

இதுபற்றி சேலம் மாநகர் மாவட்ட பொறுப்பாளரும், தற்போதைய சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏவும், வரும் சட்டமன்ற தேர்தலில் சேலம் வடக்கு தொகுதி வேட்பாளருமான வெங்கடாசலத்திடம் கேட்டதற்கு, '' முதல்வரை நம்பினோர் கை விடப்படார். வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு அண்ணன் இதை விட பெரிய பதவி கொடுக்க நினைத்திருப்பார். அதனால் இதில் யாரும் வருத்தப்பட வேண்டியதில்லை. தலைமைக்கு கட்டுப்பட்டு பணியாற்ற வேண்டும்'' என்றார்.



source https://cinema.vikatan.com/politics/salem-district-admk-mlas-who-dint-get-chance-confess-their-feeling

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக