Ad

புதன், 10 மார்ச், 2021

ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள் கட்டமைக்கப்பட்டதன் பின்னணி என்ன?

தமிழகத்தின் பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வி மற்றும் சுகாதாரம், நகர்ப்புற வளர்ச்சி, ஊரக உட்கட்டமைப்பு, சமூக நீதி ஆகியவற்றை மேம்படுத்த ``ஸ்டாலினின் ஏழு உறுதிமொழிகள்” என்ற தலைப்பில் திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின். இதன் மூலம் தமிழகத்தை இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலமாக தி.மு.க மாற்றிக்காட்டும் என ஸ்டாலின் பேசியுள்ளார். ஐபேக், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு ஆகியவை இணைந்து தமிழகம் முழுவதும் மாவட்டவாரியாக கூட்டங்கள் நடத்தி, மக்களிடம் கருத்து கேட்டே இந்தத் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்று தி.மு.க கூறுகிறது.

தி.மு.க மாநாடு

தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையாக ஸ்டாலின் அறிவித்த அந்த ஏழு கொள்கைகளுள் சில மக்கள் நீதி மய்யத்தின் அறிவிப்பில் இருந்து காப்பி அடிக்கப்பட்டுள்ளன என்றும், பல திட்டங்கள் மத்திய பா.ஜ.க இந்தியா முழுவதும் செயல்படுத்திவரும் திட்டங்களின் மாற்றுவடிவம்தான் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த விமர்சனங்கள் குறித்து பா.ஜ.க நிர்வாகி நாராயணன் திருப்பதியிடம் பேசினோம்.

Also Read: `குடும்ப தலைவிக்கு ரூ.1,000; எழில்மிகு மாநகரங்கள்!’ - திருச்சி தி.மு.க கூட்டத்தின் ஹைலைட்ஸ்

“மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்கள் மூலம் தமிழகம் மிகச் சிறப்பான பயன்களை அடைய உள்ளது என்பதை உணர்ந்து அதை வேறு பெயர்களில் அறிவித்துள்ளார் ஸ்டாலின். இப்படி அவர் மத்திய அரசின் வெற்றித் திட்டங்களை, தான் ஆட்சிக்கு வந்தால் செயல்படுத்துவேன் என அறிவித்து பெருமை தேடிக்கொள்ள நினைக்கிறார். சொட்டுநீர்ப் பாசனத் திட்டத்தின் மூலம் 2,63,494 ஹெக்டேரில் விவசாயம் செய்ய 2019-20-ம் ஆண்டடுக்காக மட்டும் 2,635 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. அதுமட்டுமல்ல, விவசாயிகள் நலனுக்காக மண்வள அட்டை, விவசாயிகள் கடன் அட்டை, பயிர்க்காப்பீட்டுத் திட்டம், விவசாயிகளுக்கான கௌரவ நிதி என்று பல்வேறு திட்டங்களை மத்திய பா.ஜ.க அரசு அறிவித்து விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்கும்விதத்தில் மத்திய அரசு செயலாற்றிவருகிறது. அதேபோல ஜல் ஜீவன் என்ற தனி அமைச்சரவையை உருவாக்கி அதன் மூலம் தற்போது தாக்கல் செய்த மத்திய அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில்கூட தமிழகத்தில் 40 லட்சம் வீடுகளுக்கு தண்ணீர் வழங்க 3,014.26 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

நாராயணன் திருப்பதி

2023-க்குள்ளாக 1,04,96,000 வீடுகளுக்கு குடிநீர் வழங்க மேலும் 5,300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்ற அறிவிப்பையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இப்படி மத்திய அரசு குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர் கொடுக்க பல ஆயிரம் கோடியை ஒதுக்கி, அதை நோக்கிச் செயலாற்றிவருகிறது. ஆனால், தற்போது ஸ்டாலின் இவை எல்லாவற்றையும் அது ஏதோ தாங்கள் ஆட்சிக்கு வந்தால், தாங்கள் கொடுக்கவிருப்பதாகக் கூறுவது வேடிக்கையாக உள்ளது” என்றார்.

மேலும் அவர், ``கல்வி தொடர்பாக ஸ்டாலின் அறிவித்துள்ளவையெல்லாம் முழுக்க முழுக்கப் புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் சொல்லப்பட்டவைதான். சுகாதாரத்தைப் பொறுத்தவரை மத்திய அரசின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் அடிப்படையில் பல லட்சம் மக்கள் பலன் பெற்று வருகின்றனர். இந்த கொரோனா காலத்தில் மத்திய அரசின் சுகாதாரக் காப்பீடு சார்ந்த கொள்கைகள் சாதாரண மக்களுக்கு மிகப்பெரிய பலனை அளித்திருக்கின்றன. இதை உள்ளடக்கியதுதான் ஸ்டாலினின் சுகாதாரத் திட்டம் தொடர்பான அறிவிப்பு. இப்படியெல்லாம் ஸ்டாலின் பேசியிருப்பது தி.மு.க-வின் சிந்தனைத்திறன் குறைந்துவிட்டதையே உணர்த்துகிறது.

தி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு

அனைவருக்கும் வீடு என மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்து 2016-17 முதல் 2018-19 வரை 5,27,552 வீடுகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும், தமிழக நகரங்களில் 6,99,575 வீடுகள் கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. லைட் ஹவுஸ் திட்டங்கள் மூலம் 790.56 கோடி ரூபாய் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் மூலம் பலனைடையும் மாநிலங்களின் வரிசையில் இந்தியாவிலேயே தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதையெல்லாம் பார்த்துவிட்டுத்தான் கட்டமைப்பு தொடர்பான அறிவிப்பை தி.மு.க வெளியிட்டுள்ளது” என்றும் விமர்சனம் செய்கிறார்.

மு.க.ஸ்டாலின்

எப்படியும் மத்திய பா.ஜ.க அரசின் திட்டங்கள் மூலம் தமிழகம் முதன்மையான மாநிலமாக மாறிவிடும் என்பதை தி.மு.க தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் உணர்ந்துவிட்டனர். இப்படி மத்திய பா.ஜ.க-வின் திட்டங்களில் மயங்கி தயாரிக்கப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையைப் பார்க்கும்போது எதற்காக பிரசாந்த் கிஷோரை நியமித்தார்கள் என்பதும், தேர்தல் அறிக்கையை தயாரிக்கக் குழு ஏன் அமைத்தார்கள் என்பதும் புரியவில்லை. தி.மு.க-வின் மலிவான அரசியலையே அதன் தேர்தல் அறிக்கை காட்டுகிறது” என ஒட்டுமொத்த தேர்தல் அறிக்கையுமே பா.ஜ.க-வின் திட்டங்களைவைத்தே கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதாக முடித்துக்கொண்டார்.

தி.மு.க-வின் ஏழு கொள்கைகளும் மத்திய பா.ஜ.க அரசு வெற்றிகரமாக செயல்படுத்திவரும் திட்டங்களின் மாற்று வடிவம்தான் என்ற விமர்சனம் குறித்து தி.மு.க செய்தித் தொடர்பாளர் சரவணனிடம் பேசினோம்... “தமிழகத்துக்கான அனைத்து வளர்ச்சித் திட்டங்களையும் கொண்டுவந்ததில் முதன்மையாக இருந்தது தி.மு.க-தான். சமத்துவபுரம் என்று கலைஞர் அவர்கள் அப்போதே நகர கட்டமைப்பில் மாற்றத்தை செய்யத் தொடங்கிவிட்டார். அதுமட்டுமல்ல, விவசாயத்துக்கு இலவச மின்சாரம், விவசாயக் கடன் ரத்து, இலவச காஸ் சிலிண்டர் உள்ளிட்ட திட்டங்களைக் கொண்டுவந்தது தி.மு.க அரசுதான். கலைஞர் அவர்களால் தமிழகம் முழுவதும் பல்வேறு தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. தி.மு.க கொண்டு வந்த காலத்தில் அதைக் கேலி செய்து எதிர்த்தது பா.ஜ.க-தான். அதன் பின்னர் இந்தத் திட்டங்களின் வெற்றியைப் பார்த்து தாங்கள் ஆட்சிக்கு வந்தபோது அதைப் பின்பற்றி வேறு வடிவத்தில் கொடுத்தது பா.ஜ.க அரசு. தலைவர் அறிவித்து, அபார வெற்றிபெற்ற திட்டங்களை காப்பி அடித்துவிட்டு தற்போது நாங்கள் அவர்களைப் பார்த்து காப்பி அடிக்கிறோம் என்று பா.ஜ.க-வினர் சொன்னால் தமிழக மக்கள் நம்புவார்களா என்ன?

சரவணன்

பா.ஜ.க-வினர் சொல்லும் பொய்களெல்லாம் குஜராத், உத்தரப்பிரதேசத்தில் வேண்டுமானால் எடுபடலாம். ஏனென்றால் அரசியலில் பா.ஜ.க-வின் தாத்தாவுக்கெல்லாம் தாத்தா நாங்கள்... திட்டங்களை அறிவித்துவிட்டு அவற்றைச் செயல்படுத்த முடியாமல் திணறும் பா.ஜ.க-வுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் மக்களின் ஒப்புதலோடு செயல்படுத்தும் தி.மு.க-வைப் பற்றியோ தி.மு.க-வின் திட்டங்களைப் பற்றியோ குறை சொல்ல எந்த அறுகதையும் கிடையாது” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/what-are-the-background-there-for-stalins-7-promises-in-tn-election

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக