Ad

புதன், 10 மார்ச், 2021

`தேனியில் இருந்தாலும், நான் எடப்பாடியின் ஆள்..!’ - ஜக்கையனை பழிவாங்கினாரா ஓ.பி.எஸ்?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பிற்கு பின்னர், கட்சிக்குள் நடந்த களேபரங்களில், தர்மயுத்தம் தொடங்கினார் ஓ.பி.எஸ்., தொடர்ந்து எடப்பாடியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்துகொள்ள, டிடிவி தினகரன் கூடாரத்தில் இருந்த கம்பம் எம்.எல்.ஏ., எஸ்.டி.கே. ஜக்கையன், மீண்டும் அ.தி.மு.க’விற்கு தாவினார். தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு எம்.எல்.ஏ என்பதால், ஓ.பன்னீர்செல்வத்தின் பக்கம் தான் இருப்பார் என அனைவரும் நினைத்திருந்த நேரத்தில், ‘எடப்பாடி பழனிசாமிக்கு தான் என் ஆதரவு’ என கூறி, ஓ.பன்னீர்செல்வத்திற்கு அதிர்ச்சி கொடுத்தார் ஜக்கையன்.

ஜக்கையன் - எடப்பாடி பழனிசாமி

’தேனியில் இருந்தாலும், நான் எடப்பாடியின் ஆள்.!’ என அடிக்கடி காட்டிக்கொள்வது ஜக்கையனின் வழக்கம். அந்த வகையில், தனது மகன் பாலமணிமார்பனை வைத்து, ‘எடப்பாடியார் நிரந்தர முதல்வர்’ என தேனி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டினார் ஜக்கையன். இதனால் கொதித்துப் போன ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள், ஜக்கையன் மீதும், அவரது மகன் மீதும் கடும் கோபத்தில் இருந்தனர். தனது ஆதரவாளர்களை சமாதனப்படுத்திய ஓ.பி.எஸ்., ஜக்கையன் தரப்பின் மீது எந்த அதிருப்தியையும் காட்டிக்கொள்ளவில்லை.

போஸ்டர்

Also Read: ``அதிகமா கொடுக்கணும்!" − ஓ.பி.எஸ் Vs ஜக்கையன்

அணையில் நீர் திறப்பது முதல், கட்சி நிகழ்ச்சிகள் வரை ஜக்கையனுக்கு தவறாமல் அழைப்பு சென்றுவிடும். ஜக்கையனும் ஓ.பன்னீர்செல்வத்தின் எந்த நிகழ்ச்சிகளையும் தவிர்க்காமல் வந்துவிடுவார். மேடையில் குட்டித் தூக்கம் போடும் பழக்கம் கொண்ட ஜக்கையன்., ஓ.பி.எஸ் பேச ஆரம்பித்தால் தூங்கிவிடுவார். சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால், நடந்துவந்த பனிப்போரை இருவருமே, வெளியே தெரியாமல் பார்த்துக்கொண்டனர். இந்நிலையில் தான் அ.தி.மு.க வேட்பாளர் பட்டியலில் ஜக்கையன் பெயர் இடம்பெறவில்லை.

ஓ.பி.எஸ் - ஜக்கையன்

இது தொடர்பாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறும் போது, “கட்சி வளர பாடுபட்ட நிர்வாகிகளில் ஜக்கையனும் ஒருவர். சீனியர் என்ற முறையில் அவருக்கான மரியாதை எப்போதும் கட்சி கொடுக்கும். ஓ.பன்னீர்செல்வத்திற்கும், அவருக்குமான பிரச்னைகள் என்று குறிப்பிட்டு எதையும் சொல்லிவிட முடியாது. மீண்டும் தனக்கு சீட் வேண்டும் என ஜக்கையன் கேட்டார். அல்லது அவரது மகனுக்காவது சீட் கொடுங்கள் என கூறினார். இரண்டும் இப்போது நடக்கவில்லை. கட்சிப் பணிகளைப் பார்த்துக்கொள்ளுங்கள் என ஜக்கையனிடம் தலைமை கூறிவிட்டதாக சொல்லப்படுகிறது. இதில் ஓ.பி.எஸ் பழிவாங்க எதுவும் இல்லை” என்றனர்.

கம்பம் சட்டமன்றத் தொகுதியை தேனி அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் சையதுகானுக்கு ஒதுக்கியுள்ளனர். கம்பம் தொகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் வாக்குகளை கவர, சையதுகான் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றனர்.

Also Read: தேனி: இட ஒதுக்கீட்டில் அதிருப்தி; அ.தி.மு.க-வுக்கு எதிராக சீர்மரபினர் நலச்சங்கம் பிரசாரம்



source https://www.vikatan.com/news/politics/is-the-issue-with-ops-is-the-reason-for-jackaiyan-name-removed-from-candidate-list

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக