பா.ம.காவில் ஜெயங்கொண்டம் தொகுதியில் போட்டியிட சீட் கிடைக்காத அதிருப்தியில் வன்னியர் சங்க மாநில செயலாளரான வைத்தி என்பவர் `பா.ம.கவில் உழைப்புக்கு மதிப்பில்லை, நடிப்புக்கு மட்டுமே மதிப்பு’ என முகநூலில் பதவிட்டு பா.ம.க கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்திருப்பது அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க கூட்டணியில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்சட்டமன்ற தொகுதி பா.ம.கவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதுடன் அக்கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் பாலு வேட்பாளராகவும் அறிவிக்கப் பட்டுள்ளார். இதில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக வன்னியர் சங்க மாநில செயலாளரான வைத்தி அந்த பொறுப்பிலிருந்தும், பா.ம.கவிலிருந்தும் விலகுவதாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து விவரம் அறிந்தவர்கள் தரப்பில் விசாரித்தோம், வன்னியர் சங்க தலைவராக இருந்த காடுவெட்டி குருவால் வளர்க்கப்பட்டவர் வைத்தி. குரு மறைவிற்கு பிறகு ராமதாஸும், அன்பு மணியும் பா.ம.கவில் மாநில துணை பொதுச் செயலாளராக இருந்த வைத்திக்கு வன்னியர் சங்கத்தின் மாநில செயலாளர் பொறுப்பை வழங்கினர்.
பா.ம.கவிற்கும், ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோருக்கு விசுவாசமாக செயல்பட்டார் வைத்தி. இந்நிலையில் காடுவெட்டி குரு குடும்பத்தினர் ராமதாஸுக்கு எதிராக செயல்பட தொடங்கிய நிலையில் பா.ம.க தலைமை வைத்தியை வைத்தே அவர்களை எதிர்கொண்டது. அத்துடன் காடுவெட்டி குருவிற்கு மாற்றாக அப்பகுதியில் வைத்தியை வளர்த்தனர். காடுவெட்டி குரு மகன் கனலரசனுக்கும், பா.ம.க தரப்பிற்கும் ஏற்பட்ட மோதலின் போது காடுவெட்டி குருவின் அக்கா மகன் மதன் தாக்கப்பட்டார்.
அப்போது ராமதாஸ் தூண்டுதலின் பேரில் வைத்தி தலைமையிலானாவர்கள் கனலரசனை தாக்க வந்ததாக காடுவெட்டி குரு குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். அத்துடன் குரு தான் வைத்தியை வளர்த்தார். ஆனால் வைத்தி, காடுவெட்டி குருவிற்கு துரோகம் செய்து விட்டதாகவும் அப்போது கூறி வந்தனர்.
இதை எதையுமே கவனத்தில் கொள்ளாத வைத்தி, பா.ம.கவிற்கு விசுவாசமாக செயல்பட்டார். அன்புமணியும் வைத்திக்கு பெரும் முக்கியத்துவத்தை அளித்தார். இந்நிலையில் வைத்தி ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்தார். தனக்குத்தான் சீட் கிடைக்கும் என நம்பிக்கையோடு எதிர்பார்த்து காத்திருந்தார்.
ஜெயங்கொண்டம் பகுதியில் வன்னியர் சங்கத்தை சேர்ந்தவர்கள், பா.ம.கவினர் என பலரும் வைத்திக்குத்தான் சீட் கிடைக்கும் எனவும் கூறி வந்தனர். ஆனால் இறுதி நேரத்தில் என்ன நடந்ததோ தெரியவில்லை ஜெயங்கொண்டம் தொகுதி வேட்பாளராக வழக்கறிஞர் பாலு அறிவிக்கப்பட்டார்.
தனக்கு சீட் கிடைக்கும் என எண்ணியிருந்த வைத்திக்கு இது பெரும் ஏமாற்றத்தை தந்தது. இதில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக உழைப்புக்கு மதிப்பில்லை நடிப்புக்கு மட்டுமே மதிப்பு என்ற தலைப்பில் வன்னியர் சங்க மாநில செயலாளர் பதவியிலிருந்தும்,, பா.ம.கவிலிருந்தும் விலகுகிறேன் இதுவரை எனக்கு ஆதரவு தந்த பா.ம.கவினருக்கும்,வன்னியர் சங்கத்தினருக்கும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் என தனது முக நூலில் பதிவிட்டுள்ள கட்சியை விலகியிருக்கிறார்.
சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அவரின் இந்த முடிவு பா.ம.கவை சேர்ந்த பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முகநூல் பதிவை பார்த்த பலரும், `இப்படி ஒரு முடிவை எடுக்காதீர்கள் பொறுமையாக இருங்கள்’ என சமாதானம் செய்யும் நோக்கத்தில் வைத்தியிடம் பேசினர். ஆனாலும் தன் முடிவில் மாற்றமில்லை என வைத்தி கூறியதாக தெரிகிறது.
ஏற்கெனவே காடுவெட்டி குரு குடும்பத்தினர் அவர் மறைவுக்கு பிறகு பா.ம.கவிற்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். குரு மகன் கனலரசன் மாவீரன் மஞ்சள் படை என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வருவதுடன் பா.ம.கவுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இப்போது வைத்தி கட்சியை விட்டு விலகி யிருக்கிறார் இது நிச்சயம் ஜெயங்கொண்டம் தொகுதியில் பா.ம.கவிற்கு பாதிப்பை உண்டாக்கும் என பேசப்படுகிறது. வேட்பாளராக போட்டியிடும் வழக்கறிஞர் பாலு பா.ம.கவிலும், வன்னியர் சங்கத்திலும் பிரபலமானவர். கட்சியிலும் தீவிரமாக செயல் பட கூடியவர். மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல அறிமுகம் இருக்கிறது.
இருந்தாலும் காடுவெட்டி குரு குடும்பத்தினர் பா.ம.கவிற்கு எதிராக இருப்பது, வைத்தி கட்சியிலிருந்து விலகியிருப்பது உள்ளிட்டவை அவருக்கு பெரும் சவாலாக முன் நிற்கின்றன. அ.தி.மு.கவுடன் கூட்டணி, வன்னியர் சங்கத்திற்கு ஒதுக்கியுள்ள 10.5 சதவீத இட ஒதுக்கீடு, இவை தனக்கு பெரும் பலமாக இருக்கும் தன்னுடைய வெற்றி நிர்ணயிக்கப்பட்டது என்ற நம்பிக்கையோடு வழக்கறிஞர் பாலு பிரசார பணிகளை தொடங்கியுள்ளார் என்றனர்.
பா.ம.க தரப்பில் பேசினோம்,வைத்திக்கு மக்கள் செல்வாக்கு கிடையாது. கட்சி தான் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து வைத்திருந்தது. அதனை அவர் நினைத்து பார்க்க தவறிவிட்டார். அவருடைய விலகல் எங்களுக்கு சிறு பாதிப்பை கூட ஏற்படுத்தாது” என்றனர்.
வைத்தியிடம் பேசுவதற்கு தொடர்பு கொண்டோம், அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை. `வைத்தி கட்சிக்கு விசுவாசமாக உழைத்தவர். ராமதாஸ், அன்புமணியின் கண் அசைவிற்கு ஏற்ப செயலபட்டவர் என்பது எல்லோருக்கும் தெரியும். கட்சி அவருக்கு சீட் வழங்கியிருக்க வேண்டும். சீட் கிடைக்காத அதிருப்தியில் வைத்தி பா.ம.க தலைமைக்கு எதிராக பேசுவார் என்பது அந்த பதிவு உணர்த்துவதாக’ அவருடைய ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
source https://www.vikatan.com/news/politics/pmk-cadre-walked-out-from-party-after-candidate-list-announcement
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக