Ad

புதன், 10 மார்ச், 2021

வெடி பொருட்களுடன் அம்பானி வீடு அருகே நின்ற காரின் உரிமையாளர் கொலை! -போலீஸ் அதிகாரிக்கு தொடர்பா?!

மும்பையின் தென்பகுதியில் உள்ள தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டிற்கு வெளியில் சமீபத்தில் வெடிகுண்டுகளுடன் கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இக்கார் கிரண் என்பவருக்கு சொந்தமானது என்று விசாரணையில் தெரிய வந்தது. போலீஸார் கிரணிடம் விசாரித்த போது அம்பானியின் வீட்டிற்கு அருகில் வெடிகுண்டுகளுடன் நிறுத்தப்பட்ட கார் தன்னிடமிருந்து திருடப்பட்டுவிட்டதாக தெரிவித்திருந்தார். அவர் போலீஸாரிடம் வாக்குமூலம் கொடுத்த ஓரிரு நாட்களில் மும்பை அருகில் உள்ள கல்வா கழிமுகப்பகுதியில் இறந்து கிடந்தார். ஆரம்பத்தில் தற்கொலை செய்து கொண்டார் என்று கருதப்பட்ட நிலையில் உடலை மீட்டு பரிசோதனை செய்ததில் அவர் கடலில் விழுவதற்கு முன்பே கொலை செய்யபட்டது தெரிய வந்தது.

அனில் தேஷ்முக்

போலீஸாரின் விசாரணையில் குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரி சச்சின் வாக், கொலை செய்யப்பட்ட கிரணுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். அதோடு சில மாதங்களாக காணாமல் போன காரையும் சச்சின் தான் பயன்படுத்தி வந்திருக்கிறார். சச்சின் வாக் தான், தனது கணவரை கொலை செய்து கடலில் வீசியதாக கிரண் மனைவி குற்றம் சாட்டியிருக்கிறார். இதையடுத்து சச்சினை கைது செய்யவேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்நவிஸ் கோரிக்கை விடுத்தார்.

இவ்வழக்கை மத்திய அரசு திடீரென தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரிக்கும் என்று தெரிவித்தது. ஆனால் மும்பை போலீஸார்தான் இதனை விசாரிப்பார்கள் என்று மாநில அரசு தெரிவித்தது. அதோடு சமீபத்தில் மும்பையில் எம்.பி.ஒருவர் தற்கொலை செய்து கொண்ட வழக்கு விசாரணையையும் மும்பை போலீஸார் தீவிரப்படுத்தப்போவதாக தெரிவித்தனர்.

இந்த தற்கொலையில் பா.ஜ.க பிரமுகர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக தற்கொலை செய்து கொண்ட எம்.பி.மோகன் தனது கடிதத்தில் எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார். மும்பை போலீஸார் இவ்வழக்கை கையில் எடுத்தவுடன், அம்பானி வீட்டு அருகே நின்ற கார் உரிமையாளர் கொலை வழக்கு விசாரணையில் இருந்து தேசிய புலனாய்வு ஏஜென்சி பின்வாங்கியது. இப்பிரச்னை மகாராஷ்டிரா சட்டமன்றத்திலும் எழுப்பப்பட்டது. பா.ஜ.க-வின் பிரவின் எழுந்து ``போலீஸ் அதிகாரி சச்சின் விசயத்தில் அரசு என்ன முடிவு செய்துள்ளது?” என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், ``விசாரணை பாரபட்சம் இல்லாமல் நடக்கவேண்டும் என்பதற்காக சச்சின் குற்றப்பிரிவில் இருந்து வேறு ஒரு துறைக்கு இடமாற்றம் செய்யப்படுவார்” என்று குறிப்பிட்டார். இதையடுத்து குறுக்கிட்ட பிரவின், `மாநில அரசின் முடிவில் எங்களுக்கு திருப்தியில்லை. அரசு சச்சினை பாதுகாக்க நினைக்கிறது.

அம்பானி வீட்டின் நுழைவு வாயில்

சச்சினை இடமாற்றம் செய்தால் மட்டும் போதாது. அவரை சஸ்பெண்ட் செய்து கைது செய்யவேண்டும். கொலை குற்றத்திற்கு ஆளாகும் போலீஸ் அதிகாரியை இடமாற்றம் செய்வது தீர்வாகாது. அப்படி செய்தால் போலீஸாரின் மதிப்பு பாதிக்கப்படும். எனவே சச்சின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று குறிப்பிட்டார். குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் சச்சின் ஒரு என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் ஆவார். இதற்கு முன்பு மும்பையில் மாஃபியாக்கள் அதிகமாக இருந்த போது 60க்கும் மேற்பட்ட கிரிமினல்களை என்கவுண்டர் செய்துள்ளார். போலீஸ் காவலில் கைதி ஒருவர் இறந்தது தொடர்பாக 2004ம் ஆண்டு பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு, பின்னர் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டார். அதோடு 2008ம் ஆண்டு தன்னை சிவசேனாவிலும் இணைத்துக்கொண்டார். எனவேதான் மாநில அரசு அவரை காப்பாற்ற முயற்சிப்பதாக பா.ஜ.க குற்றம் சாட்டிக்கொண்டிருக்கிறது.



source https://www.vikatan.com/news/crime/is-police-officer-involved-in-murder-of-car-owner-parked-near-ambanis-house

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக