Ad

செவ்வாய், 9 மார்ச், 2021

சீனாவின் சைபர் தாக்குதல்கள்... சைபர் போருக்கான அறிகுறியா?

இரண்டாம் உலகப் போரை அடுத்து, உலகில் பெரும் சேதத்தை விளைவிக்கும் வகையில் எந்தப் போரும் நிகழவில்லை. போர் என்று வந்துவிட்டால் அது அதைத் தொடர்புடைய அனைத்து நாடுகளையும் பாதிக்கும். இரண்டாம் உலகப் போர் மாதிரியான இன்னொரு போர் உலகில் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறு குறைவுதான். ஏனெனில் அதனால் ஏற்படக்கூடிய சேதங்களையும், பாதிப்புகளையும் அனைத்து நாடுகளும் அறிந்திருக்கின்றன. மேலும், அணு ஆயுதங்கள் பெருகி இருக்கும் இந்த நூற்றாண்டில், ஒரு போர் என்பது மனித இனத்திற்கே ஆபத்தாகக் கூட முடியலாம். ஆனால், அதற்கு மாற்றான ஒன்று எப்போதோ உருவாகிவிட்டது. அது தான் 'சைபர் போர்' (Cyber War).

சைபர் போர்

கடந்த சில வாரங்களாகவே, இந்தியாவின் மீதான சைபர் தாக்குதல்களுக்கான தலைப்புச் செய்திகளில் சீனா அதிகமாக இடம்பெற்று வருகிறது. இந்தியாவின் கொரோனா தடுப்பு மருந்து தொடர்பான தகவல்களைத் திருடுவதில் இருந்து மும்பை மின்தடை வரை பல சம்பவங்களுக்கும் சீனாவே காரணம் எனப் பல பக்கங்களிலும் இருந்தும் குற்றச்சாட்டுகள் பறக்கின்றன. ஆனால், இவை அனைத்தையும் மறுத்து வருகிறது சீனா. மேலும் நடக்குமா, நடக்காதா எனத் தெரியாத சைபர் போருக்கு ஏன் இந்தியா கவலை கொள்ள வேண்டும்?

Also Read: மும்பை மின்தடை.. சைபர் தாக்குதலை நடத்தியது சீனாவா?

அக்டோபர் 12 அன்று திடீரென்று மும்பை மாநகரம் முழுவதும் மின்தடை ஏற்படுகிறது. டிராஃபிக் சிக்னல்கள் முதல் ரயில் சேவைகள் வரை அனைத்தும் பாதிக்கப்படுகிறது. மாநகரமே ஸ்தம்பிக்கிறது. அந்த நேரத்தில், வேலையாட்கள் கோளாறு காரணமாகவே இந்தப் பிரச்னை ஏற்பட்டதாகச் சொன்னது மாநகராட்சி நிர்வாகம். நான்கு மாதங்கள் கழித்து Recorded Future என்ற சைபர் பாதுகாப்பு நிறுவனத்தின் அறிக்கையைக் கொண்டு அமெரிக்கப் பத்திரிகையான நியூயார்க் டைம்ஸ் இதழ் ஒரு செய்தியை வெளியிடுகிறது. மும்பையில் நடந்த மின்தடைக்குச் சீனாவைச் சேர்ந்த நிறுவனங்களின் சைபர் தாக்குதல்தான் காரணம் என்று. அதனைத் தொடர்ந்து மகாராஷ்டிராவின் சைபர் செல்லும் இந்தப் பிரச்னை குறித்து விசாரித்து சீனா காரணமாக இருக்கலாம் என்ற அறிக்கையைச் சமர்ப்பிக்கிறது.

Cyber War

உலகளவில் அதிகமாக கொரோனா தடுப்பூசியைத் தயாரித்து ஏற்றுமதி மற்றும் விற்பனை செய்யும் நாடுகளில் இந்தியாவும் சீனாவும் முதல் இரண்டு இடங்களில் இருக்கின்றன. அதிலும், உலக அளவில் விற்பனையாகும் தடுப்பு மருந்துகளில் இந்தியாவைச் சேர்ந்த தடுப்பு மருந்துகள்தான் 60 சதவிகிதம். இந்தியாவைச் சேர்ந்த தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களான பாரத் பயோடெக் மற்றும் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா, ஆகிய நிறுவனங்களில் சைபர் தாக்குதல்கள் நிகழ்ந்ததாகவும் அதனைச் சீனாவைச் சேர்ந்த APT10 என்ற நிறுவனமே நிகழ்த்தியிருப்பதாகவும் மற்றொரு சைபர் பாதுகாப்பு நிறுவனமான சைபிர்மா கண்டறிந்து தெரிவித்தது. இது குறித்த தகவல்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தெரிவிக்க மறுத்துவிட்டன.

CERT-In (Indian Computer Emergency Response Team) என்ற அமைப்புதான் இந்தியாவின் சைபர் பாதுகாப்பு தொடர்பான சம்பவங்கள் நிகழ்ந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், சைபர் தாக்குதல்கள் தொடர்பான விஷயங்களைப் பார்த்துக் கொள்ளவும் செய்கிறது. தெலங்கானாவின் மின்வாரியத்திலும் இதுபோன்ற சைபர் தாக்குதல் நிகழவிருப்பதாக CERT-In-க்குக் கிடைத்த தகவல்களையடுத்து, தெலங்கான மின்வாரியத்தில் அதனைத் தடுப்பதற்கு உண்டான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனைப் பற்றி தெரிவித்த Ts-Transco-வின் (Transmission Corporation of Telangana) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநருமான பிரபாகர் ராவ், "சீனாவைச் சேர்ந்த நிறுவனம் TSSLDC (Telangana State Load Dispatch Centre) மற்றும் Ts-Transco-வின் சர்வர்களுடன் தொடர்பு கொள்ள முயல்கிறது என CERT-In-க்கு தகவல் கிடைத்ததையடுத்து பல்வேறு விதமான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன் மூலம் அந்தத் தாக்குதல் தடுக்கப்பட்டது" எனத் தெரிவித்திருக்கிறார். மும்பையில் ஏற்பட்ட மின்தடை சீனாவின் சைபர் தாக்குதலாக இருக்கலாம் என்று வெளியான செய்திகளையொட்டி இந்த நிகழ்வும் தற்போது வெளிவந்திருக்கிறது.

Cyber Warfare
கொரோனா தடுப்பூசி தகவல்களைத் திருடுவதில் கூட சீனாவிற்குக் கொஞ்சம் ஆதாயம் இருக்கிறது. ஆனால், மும்பையில் ஏற்பட்ட மின்தடையில் சீனாவிற்கு நேரடியான ஆதாயம் எதுவும் இல்லை. இந்தக் குற்றச்சாட்டை முழுவதுமாக சீனா மறுத்துள்ளது. ஒருவேளை சீனா இதனைச் செய்திருந்தால் இதனை சைபர் போருக்கான ஒரு புள்ளியாகப் பார்ப்பதைத் தவிர வேறு வழியில்லை.

Recorded Future நிறுவனத்தின் அறிக்கையின்படி, இந்தியாவில் மும்பை மட்டுமல்லாது அது போன்ற ஐந்துக்கும் மேற்பட்ட மின் விநியோக அமைப்புகள் மற்றும் இந்தியாவின் இரண்டு துறைமுகங்களிலும் சைபர் தாக்குதல் நிகழ்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவின் தனியார் மற்றும் அரசுத் துறைகளில் தொடர்ந்து சீனாவைச் சேர்ந்த நிறுவனங்களின் சைபர் தாக்குதல்கள் அதிகமாகவே இருந்து வருகிறது. சீனாவின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் தொடர்ந்து சீனா மறுத்து வருகிறது.

அமெரிக்கா, சீனா, மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் தான் தொழில்நுட்பத்தில் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்த முயன்று கொண்டிருக்கின்றன. ஆசியப் பிராந்தியத்தில் தனிப்பெரும் ஆளுமையாக உருவாக நினைக்கும் சீனாவிற்கு வளர்ந்து வரும் இந்தியா எப்போதுமே ஒரு தடைதான். எனவே, தொழில்நுட்பத்தைக் கொண்டு தாங்கள் எதையும் செய்ய முடியும் என எச்சரிக்கை விடுக்கும் தொனியிலேயே சீனா இதனைச் செய்து கொண்டிருக்கிறது. மற்றொரு பக்கம் அமெரிக்காவிற்கும், ரஷ்யாவிற்குமான இடையேயான பிரச்னைகளும் தீவிரமடைந்து கொண்டே வருகின்றன. சமீபத்தில் அமெரிக்காவின் சோலார் விண்ட்ஸ் சைபர் தாக்குதல் அதற்கு ஓர் உதாரணம்.

Cyber War

சீனா தொழில்நுட்பத்தில் தன்னிறைவை அடைய முயன்று கொண்டிருக்கிறது. மென்பொருளில் (Software) இருந்து வன்பொருள் (Hardware) வரை அனைத்தையும் சொந்தமாக தங்கள் நாட்டிற்குள்ளேயே தயாரிக்கிறது. ஆனால், மறுபுறம் இந்தியாவோ, பெரும்பாலான தொழில்நுட்ப சேவைகளுக்குப் பிற நாடுகளைச் சார்ந்தே இருக்கிறது. மேலும் இந்திய மொபைல்போன் மற்றும் லேப்டாப் சந்தையிலும் சீன நிறுவனங்களின் ஆதிக்கமே அதிகமாக இருக்கிறது. இந்தியா தொழில்நுட்பத்தில் இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டியிருக்கிறது.

தங்கள் நாட்டு எல்லையில் சீனப் பெருஞ்சுவரைக் கட்டியெழுப்பியிருப்பதைப் போல, தங்கள் நாட்டு இணையத்தைச் சுற்றியும் Great Firewall of China-வை உருவாக்கியிருக்கிறது. ஆனால், இந்தியாவிடமோ எந்த தற்காப்புத் திட்டமோ அல்லது தாக்குதல் திட்டமோ இல்லை. இந்தியா விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது.


source https://www.vikatan.com/technology/tech-news/chinas-cyber-attacks-is-this-an-alarm-for-cyber-war

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக