Ad

ஞாயிறு, 7 மார்ச், 2021

காரைக்குடி : தி.மு.க பிரமுகரின் கந்துவட்டி வசூல்... தற்கொலைக்கு முயன்ற குடும்பம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ளது பள்ளத்தூர் கிராமம். பள்ளத்தூர் கிராமத்தினர் பலர், தமிழகம் முழுவதும் சென்று, சுபநிகழ்ச்சிகளில் செட்டிநாடு சமையல் செய்யும் சமையல் கலைஞர்களாக உள்ளனர்.

பள்ளத்தூரில், சமையலுக்கான பாத்திரங்கள் உட்பட விசேசத்திற்கு தேவையான அனைத்து பொருள்களையும் வாடகைக்கு விடும் தொழில் செய்துவருகிறார் ராமநாதன். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், தன்னுடைய தொழில் தேவைக்காக, பலரிடமும் ராமநாதன் கடன் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில், பள்ளத்தூரைச் சேர்ந்த தி.மு.க பிரமுகர் ரவி என்பவரிடமும், ராமநாதன், 18 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருப்பதாகவும், அதற்கான வட்டித் தொகையை தவறாமல் ராமநாதன் செலுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

ராமநாதன்

Also Read: காரைக்குடி: `வெடிகுண்டு வீசிவிடுவேன்!’- முன்னாள் ஊராட்சித் தலைவரைப் பணம் கேட்டு மிரட்டிய நபர்

கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர், உடல்நிலைக் கோளாறு காரணமாக அவதியுற்ற ராமநாதன், தன்னுடைய தொழிலை சரிவர கவனிக்க முடியாமல், ரவிக்கு செலுத்த வேண்டிய வட்டித் தொகையை கொடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். ஒரு கட்டத்தில், தீவிர உடல்நலக் குறைவு காரணமாக, காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதனை அறிந்த தி.மு.க பிரமுகர் ரவி, தன்னுடைய பணத்தை பெற முடியாமல் போய்விடுமே என்ற அச்சத்தில், ராமநாதனின் கடையில் இருந்த, சமையல் பாத்திரங்கள், டேபிள், சேர், வாட்டர் டேங், அடுப்புகள், பந்தல் ஜாமான், மின்சாதனங்கள் என சுமார் ரூ 7 லட்சம் மதிப்பிலானப் பொருள்களை அள்ளிச்சென்றுள்ளார்.

தி.மு.க பிரமுகர் ரவி

இதனை அறிந்த ராமநாதனின் மனைவி மீனாள், மகள் நாச்சம்மை (வயது 21) ஆகியோர், அவமானத்தில் எலி பேஸ்ட்டை, குளிர்பானத்தில் கலந்து குடித்துள்ளனர். அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல்சிகிச்சைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். சம்பவம் தொடர்பாக, ராமநாதனிடம் புகார் பெற்ற பள்ளத்தூர் காவல்துறையினர், ரவி, வைரவன், ஆனந்த், வடிவேல் ஆகிய நால்வர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

Also Read: காரைக்குடி: நடவடிக்கை எடுக்காத நகராட்சி! - அலுவலகம் முன்பு குப்பைகளைக் கொட்டிய சமூக ஆர்வலர்கள்

இது தொடர்பாக தி.மு.க பிரமுகர் ரவியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினோம். “எனக்கு 18 லட்ச ரூபாய் வரை அவர்கள் கொடுக்க வேண்டும். வாடகை பாத்திர கடையை காலி செய்யும்போது, 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களை அவர்களே எனக்குக் கொடுத்து அது தொடர்பாக கைப்பட எழுதுதியும் கொடுத்தனர். கடந்த 2-ம் தேதிக்கு பிறகு அவர்கள் பக்கமே நான் போகவில்லை. ஆனால் வேறு சிலர் அவர்களிடம் கடன் கேட்டு சென்றுள்ளனர். அதற்கு நான் பணம் கேட்டு மிரட்டுவதாக பொய்யான குற்றச்சாட்டை என்மீது சுமத்துகின்றனர். தேர்தல் நேரத்தில் என் பெயரை கெடுக்க வேண்டும் என்று செயல்படுகின்றனர். என்னிடம் அவர்கள் எழுதிக் கொடுத்தது, போன் ரெக்கார்டு என, எல்லா ஆவணங்களும் உள்ளது. அதனை நிரூபிப்பேன்.” என்றார்.

கந்துவட்டி கொடுமையால், தாய் மகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம், அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/news/general-news/family-members-attempted-suicide-in-karaikudi-due-to-debt-pressure

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக