Ad

சனி, 20 மார்ச், 2021

`மக்களை ஏமாற்றுவதில் நம்பர்-ஒன்; ஸ்டாலினுக்கு பொய்தான் மூலதனம்!’ - எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு

தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. நேற்றூ (20.03.2021) கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டத்தில் தனது கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். விழுப்புரத்தில், சி.வி.சண்முகத்தை ஆதரித்து பிரசாரம் செய்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அப்போது பேசிய அவர்,

“இன்று, திமுக தலைவர் தோல்வி பயத்தால் ஏதோ பிதற்றி கொண்டிருக்கிறார். அதிமுக கூட்டணியை வெல்ல முடியாது என்று அவர் தெரிந்து கொண்டார். அதிமுக-வுடன் அமைக்கப்பட்ட கூட்டணி வலிமையான கூட்டணி. மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் கூட்டணி. திமுக தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணி காலத்திற்கு ஏற்ப அமைக்கப்பட்ட சந்தர்ப்பவாத கூட்டணி. எம்.ஜி.ஆர் 10 ஆண்டு காலமும், புரட்சித்தலைவி 15 ஆண்டுகாலமும் சிறப்பான ஆட்சியை தந்தார்கள். அதனைத் தொடர்ந்து எனது தலைமையிலே சிறப்பான ஆட்சியை தந்து கொண்டிருக்கிறோம். இந்த மண்ணில் அதிக நாள் ஆண்ட கட்சி அதிமுக. இறுதிவரை மக்களுக்காக உழைத்தவர் புரட்சித்தலைவி. அவருடைய வழியில் இந்த அரசு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டுள்ளது. அதை பொறுத்துக்கொள்ள முடியாத திமுக தலைவர் ஸ்டாலின் ஏதேதோ பிதற்றிக் கொண்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம்

இன்றைக்கு அவர் எதை சொன்னாலும் பொய்தான் சொல்வார். உண்மை என்ற வார்த்தையே அவர் அகராதியில் வந்தது கிடையாது. பொய்தான் மூலதனம். அந்தப் பொய் மூலதனத்தை வைத்து, இன்று தமிழகம் முழுவதும் பிரசாரம் துவங்கி அரசு மீது, கட்சியின் மீது, கூட்டணிக் கட்சிகள் மீது குற்றம் கூறி வருகிறார். ஆக, இது திமுகவிற்கு மூடுவிழா காணும் தேர்தல். 10 ஆண்டுகாலம் வனவாசம் போயிருந்தார்கள். திமுக இன்னும் திருந்தவில்லை. இந்த தேர்தலோடு அவர்களுக்கு இறுதி தேர்தல் என்று மக்கள் நல்ல தீர்ப்பு வழங்குவார்கள். திமுக நல்லது செய்தால் பரவாயில்லை. நல்லது செய்யவே அவர்களுக்கு மனம் கிடையாது. நல்ல மனம் படைத்தவர்கள் அல்ல, கொடும் உள்ளம் படைத்தவர்கள். அதிமுக தொண்டர்கள் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என எண்ணி எண்ணி நன்மை செய்வார்கள். திமுக அப்படி அல்ல, எதை செய்தாலும் மக்களுக்கு துரோக செயலை தான் செய்வார்கள். நல்ல எண்ணமே கிடையாது. தீய எண்ணம் படைத்தவர் திமுக தலைவர் ஸ்டாலின்.

அது ஒரு வாரிசு அரசியல் கட்சி. கருணாநிதியை தொடர்ந்து ஸ்டாலின் வந்தார். ஸ்டாலினை தொடர்ந்து அவர் மகன் உதயநிதி வந்துவிட்டார். தன் குடும்பத்திலிருந்து யாரும் வரமாட்டார்கள் என பச்சைப்பொய் சொன்னார் ஸ்டாலின். உதயநிதியோ, ‘என் அப்பா சொல்வதே முடிவு என்றார்’. அப்பா இவருக்கு சீட் கொடுத்துள்ளார். அவர் என்ன சொன்னாரோ அங்குதான் இவர் நிற்கிறார்… எவ்வளவு கில்லாடி தனம்! யாரை ஏமாற்றுகிறீர்கள்? விழிப்போடு இருப்பவர்கள் தமிழ்நாடு மக்கள். உங்களுடைய பேச்சை மக்கள் ஏற்றுக் கொள்வதாக இல்லை. நல்லதைச் சொன்னால் ஏற்றுக் கொள்வார்கள். நீங்கள் எந்த நல்லதையும் சொல்வது இல்லை. குடும்ப அரசியல், வாரிசு அரசியலை தான் நாங்கள் வேண்டாம் என்கிறோம். வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் இது. ‘கட்சி நிர்வாகிகளுடைய குழந்தைகள் எம்.எல்.ஏ, எம்.பி - யாக நிற்கலாம் தப்பில்லை. ஆனால், தலைவராவது தான் தப்பு’. உதயநிதி எப்போது அரசியலுக்கு வந்தார். அவர் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து திமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார். தமிழகம் முழுவதும் சுற்றி வருகிறார் என்றால் அது வாரிசு அரசியல் தானே. கலைஞரும் உங்களை இப்படித்தான் சுற்றவிட்டார். நீங்கள் திமுக தலைவர் ஆனீர்கள். உங்கள் பிள்ளையை அதே பாணியில் இப்போது சுற்ற விடுகிறீர்கள். நான் என்னுடைய சொந்தக்காரர்களுக்கு டெண்டர் கொடுத்துவிட்டேனாம் ஸ்டாலின் கூறியுள்ளார். இது என்ன கடையில் விற்கும் பொருளா… பொட்டலம் கட்டி போவதற்கு. அதை திமுக ஆட்சியில் செய்யலாம். அதிமுக ஆட்சி சிறப்பான ஆட்சி. எல்லாமே ஓபன் டென்டர் தான்.

எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம்

யாரோ எழுதிக் கொடுப்பதை வைத்து படித்து நீங்களே மாட்டிக்கொள்கிறாய். பேசுகிற பொய்யைக் கூட ஒழுங்காக பேசத் தெரியவில்லை உங்களுக்கு. தில்லுமுல்லு செய்து தேர்தலில் வெற்றி பெறலாம் எனும் நினைப்பில் இருப்பதை மறந்துவிடுங்கள். நேர்மையாக மக்களை சந்தியுங்கள் அப்போதுதான் எதிர்க்கட்சி என்பதாவது மிஞ்சும். இல்லை என்றால் அதுவும் போய்விடும். பெரும்பான்மையை நிரூபிக்க சட்டமன்றத்தில் நாங்கள் கூடியபோது, மேசையில் ஏறி டான்ஸ் ஆடினார்கள். எவ்வளவு அட்டூழியம்.. எவ்வளவு அராஜகம்… அந்த இடத்திலேயே ரெளடித்தனம் பண்ணினார்கள். அப்படிப்பட்ட உங்களிடம் ஆட்சியை கொடுத்தால் நாடு தாங்குமா..! இப்படி அராஜகம் பண்ணுகிற கட்சி திமுக. இந்திய நாட்டிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசாங்கம் திமுக அரசாங்கம். மக்களை ஏமாற்றுவதில் நம்பர்-ஒன் ஸ்டாலின். உண்மை, தர்மம், நீதி தான் வெல்லும். அது நம்மிடத்தில் உள்ளது. எனவே,நாம் தான் வெல்வோம்” என்றார்.

Also Read: `ஊர்ந்து சென்று முதல்வராவதற்கு நான் என்ன பாம்பா, பல்லியா?’ கடலூரில் கடுகடுத்த எடப்பாடி பழனிசாமி



source https://www.vikatan.com/government-and-politics/politics/edappadi-palanisamy-election-campaign-in-villupuram

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக