Ad

சனி, 20 மார்ச், 2021

மகாராஷ்டிரா: `மாதம் ரூ.100 கோடி டார்கெட்!’ -போலீஸ் அதிகாரியை நிர்ப்பந்தித்த உள்துறை அமைச்சர்?

மும்பையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி இல்லத்திற்கு அருகில் கடந்த மாதம் கார் ஒன்று வெடிபொருள்களுடன் நிறுத்தப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவத்தையடுத்து அடுத்த இரண்டு நாட்களில் கார் உரிமையாளர் கிரண் கொலை செய்யப்பட்டு கடலில் வீசப்பட்டார். இது தொடர்பாக குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரி சச்சின் வாஸ், தேசிய புலனாய்வு ஏஜென்சியால் கைது செய்யப்பட்டுள்ளார். அதோடு முகேஷ் அம்பானி இல்லப்பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் இடமாற்றம் செய்யப்பட்டார்.

அனில் தேஷ்முக்

பரம்பீர் சிங் இப்போது மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீது பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியிருக்கிறார். அனில்தேஷ்முக் மீது ஊழல் குற்றம் சாட்டி 9 பக்கம் கொண்ட கடிதம் ஒன்றை மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே-க்கு அனுப்பி இருக்கிறார். அக்கடிதத்தில் பரம்பீர் சிங் கூறியிருப்பதாவது: ``மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சச்சின் வாஸிடம் ஒவ்வொரு மாதமும் ஓட்டல்கள், பார்கள் மற்றும் இதர நிறுவனங்களிடமிருந்து ரூ.100 கோடியை வசூலித்து கொடுக்கும்படி நிர்ப்பந்தம் செய்தார்.

சச்சின் வாஸை அமைச்சர் அனில் தேஷ்முக் தனது வீட்டிற்கு வரவழைத்து மாதம், 100 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டும். அதற்கு தேவையானவற்றை செய்யும்படி கேட்டுக்கொண்டார். ரூ.100 கோடி இலக்கை எட்ட மும்பையில் உள்ள 1,750 பார்கள், ஓட்டல்கள் மற்றும் இதர நிறுவனங்களிடமிருந்து பணத்தை வசூலிக்கும்படி கேட்டுக்கொண்டார். ஒவ்வொரு பார் மற்றும் ஓட்டல்களிடமிருந்து தலா 2 முதல் 3 லட்சம் வசூலித்தாலே 40 முதல் 50 கோடி ரூபாயை எட்டி விட முடியும். எஞ்சிய தொகையை வேறு வழிகளில் ஏற்பாடு செய்யும்படி அனில் தேஷ்முக் சச்சின் வாசிடம் தெரிவித்துள்ளார். சச்சின் வாஸ் அலுவலகத்திற்கு வந்த போது இதனை என்னிடம் தெரிவித்தார். இந்த பிரச்னையை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் இருந்தேன். போலீஸ் அதிகாரிகளை அடிக்கடி அமைச்சர் அனில் தேஷ்முக் தனது அலுவலகத்திற்கு அழைத்து லஞ்சம் வசூலிக்க சொல்வார். இதனை என்னிடம் சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அனில்தேஷ்முக் தனது எதிர்பார்ப்புக்கு தக்கபடி அதிகாரிகளிடம் லஞ்ச பணம் வசூலிக்கும் வேலையை கொடுத்து குறிப்பிட்ட தொகையை வசூலிக்கும்படி இலக்கு நிர்ணயிப்பார்” என்று தெரிவித்துள்ளார்

அம்பானி வீட்டின் நுழைவு வாயில்

அனில் தேஷ்முக், தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டு பாதுகாப்பு குளறுபடியில் கமிஷனர் அலுவலகத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு தவறு காரணமாகவே கமிஷனர் பரம்பீர் சிங் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள பரம்பீர் சிங், இவ்விவகாரத்தில் அமைச்சர் அனில் தேஷ்முக் தரப்பில் பல தவறுகள் நடந்துள்ளது. இது குறித்து துணை முதல்வர், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மற்றும் மூத்த அமைச்சர்களிடம் தெரிவித்தேன். நான் தெரிவித்த தகவல்கள் ஏற்கனவே சில அமைச்சர்களுக்கு தெரிந்திருந்தது என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இது தவிர மும்பையில் எம்.பி.ஒருவர் தற்கொலை செய்து கொண்டதிலும் அமைச்சர் அனில் தேஷ்முக் தவறு செய்ததாக பரம்பீர் சிங் தெரிவித்துள்ளார்.

பரம்பீர்சிங்கின் இக்குற்றச்சாட்டை தொடர்ந்து அனில்தேஷ்முக் உடனே பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும், அப்படி ராஜினாமா செய்யவில்லையெனில் அவரை முதல்வர் உத்தவ் தாக்கரே டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் கோரிக்கை விடுத்துள்ளார். பரம்பீர்சிங் குற்றச்சாட்டு குறித்து பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்றும் பட்நவிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

பரம்பீர் சிங்கின் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள அனில் தேஷ்முக், சட்டநடவடிக்கையில் இருந்து தப்பித்துக்கொள்ள பரம்பீர் சிங் என் மீது இது போன்ற குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார. இக்குற்றச்சாட்டுக்களால் அனில் தேஷ்முக் பதவி பறிக்கப்படும் என்று தெரிகிறது. இது குறித்து சரத்பவார் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பார் என்று தெரிகிறது.



source https://www.vikatan.com/news/india/maharashtra-home-minister-forced-police-to-pay-rs-100-crore-a-month-former-police-commissioner

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக