Ad

சனி, 20 மார்ச், 2021

என் பெண் பிள்ளைகள்... வில்லனாக்கப்படும் கொழுந்தனின் ஆண் பிள்ளை... தினமும் கொல்லும் வீடு! #PennDiary

எனக்கும் என் கணவருக்கும் பெற்றோர் பார்த்து வைத்த திருமணம். மாமனார் மாமியார், கொழுந்தனார் எனக் கூட்டுக் குடும்பம். எங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தபோது, வீட்டின் சந்தோஷம் இரட்டிப்பானது. நாள்கள் சந்தோஷமாக நகர்ந்தன.

இந்நிலையில், நான் இரண்டாவதாகக் கருவுற்றேன். என் புகுந்த வீட்டிலும் பிறந்த வீட்டிலும், `ரெண்டாவது ஆம்பளப் புள்ள பொறக்கணும்' என்று சொல்லிக்கொண்டே இருந்தார்கள். என்னைப் பொறுத்தவரை, எனக்கு ஆண் குழந்தை, பெண் குழந்தை வேறுபாடு எல்லாம் இல்லை. என்றாலும், ஏற்கெனவே ஒரு பெண் குழந்தை இருப்பதால், அடுத்த குழந்தை ஆண் குழந்தையாகப் பிறந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் இருந்தது. ஒருவேளை மூத்த குழந்தை ஆண் குழந்தையாக இருந்திருந்தால், இரண்டாவது பெண் குழந்தை வேண்டும் என்றுதான் எண்ணியிருப்பேன். அப்படி, பாலின பேதம் தாண்டிய ஒரு விருப்பமாக அது இருந்தது.

Baby

சொல்லப்போனால், எங்கள் வீட்டில் நானும் என் தங்கையும் என இரண்டும் பெண் பிள்ளைகள். அதனால் என் அம்மா, அப்பாவை ஆண் பிள்ளை இல்லை என்று பரிகசித்த, பரிதாபமாகப் பார்த்த பார்வைகளை எல்லாம் கடந்து வளர்ந்தவள் நான் என்பதால், ஆண் குழந்தைதான் குடும்ப வாரிசு என்ற எண்ணத்தின் மீது கோபம் உண்டு எனக்கு.

எனக்கு இரண்டாவதாகப் பெண் குழந்தை பிறந்தது. கர்ப்பகாலத்தில், `ஆண் குழந்தை பிறந்தால் நன்றாக இருக்கும்' என்று எண்ணினேன்தான் என்றாலும், என் குழந்தை பிறந்த நொடியிலேயே அந்த எண்ணமெல்லாம் மறைந்துவிட்டது. 100% மகிழ்ச்சியுடன் என் குழந்தையை இந்தப் பூமிக்கு வரவேற்றேன்.

`ரெண்டும் பொண்ணா போச்சே', `ஒரு ஆம்பளப் புள்ள இருந்திருந்தா நல்லாயிருக்குமே' என்ற ரீதியில் புகுந்த வீடு, உறவுகள், நண்பர்கள் என்று யாராவது பேசினால், அவர்களை உடனடியாகக் கண்டித்தேன். என் பிள்ளைகளைப் பற்றி ஏமாற்றமாகப் பேசுவதை நான் அனுமதிக்க மாட்டேன் என்று அவர்களிடம் கோபப்பட்டேன். இரண்டு பெண் குழந்தைகளையும் ஆசை ஆசையாக வளர்த்தேன். என் கணவருக்கு ஆண் குழந்தை இல்லை என்பது குறித்த வருத்தம் இருந்தாலும், அதை வெளிக்காட்டாமல் இருக்கப் பழகிக்கொண்டார்.

இந்நிலையில், என் கொழுந்தனுக்குத் திருமணம் முடிந்தது. கொழுந்தனின் மனைவியும் நானும் தோழிகள்போல ஒருவருக்கு ஒருவர் புரிந்துணர்வுடனும் அன்புடனும் இருந்தோம். அவர் கருவுற்றபோது, எங்கள் வீட்டின் மகிழ்ச்சி இன்னும் அதிகரித்தது. ஆனால், அவரை வாழ்த்திய அனைவரும், `உனக்காச்சும் ஆம்பளப்புள்ள பொறக்கட்டும்' என்று சொல்லிவைத்தாற்போல பயன்படுத்திய வார்த்தைகளில் என் காயங்கள் ஆரம்பமாகின. `உனக்காச்சும்' என்பவர்களை எல்லாம் எப்போதும்போல நான் கண்டித்துவிடலாம்தான். ஆனால், அது என் கொழுந்தன் மனைவிக்கு சங்கடத்தைக் கொடுத்துவிடக் கூடாது என்பதால், பொறுமையாகச் செல்ல ஆரம்பித்தேன்.

Baby

Also Read: கணவரை பயன்படுத்திக் கொள்ளும் உறவுகள்... பறிபோகும் குடும்ப நிம்மதி! #PennDiary - 06

என் கொழுந்தன் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. உண்மையில், என் குழந்தைகள் பிறந்தபோதிருந்த சந்தோஷம்தான் எனக்கு அப்போதும் இருந்தது. ஆனால், அவர் ஆண் குழந்தை பெற்றுவிட்டதால் நான் சோகமாகிவிட்டது போன்றும், அவர் மீது பொறாமைப்படுவது போன்றும், நான் ஏதோ ஆண் குழந்தைக்கு ஏங்குவது போன்றும்... வீடு, உறவுகள், நண்பர்கள் என அனைவரின் பேச்சிலும் இதில் ஏதாவது ஒரு தொனியே தென்பட்டது. குழந்தை பிறந்த வீட்டில் நான் அவர்களுக்கு எல்லாம் விளக்கம் அளித்தோ, கோபப்பட்டு பதிலளித்தோ அந்தச் சூழலை சங்கடமாக்கிவிட வேண்டாம் என, இம்முறையும் அமைதியாகவே அனைத்தையும் கடந்தேன்.

நாள்கள் செல்லச் செல்ல, என் வீட்டில் என் இரண்டு மகள்களை மீறிய ஒரு முக்கியத்துவம் கொழுந்தன் மகனுக்குக் கிடைத்ததை உணர்ந்தேன். மாமியார் எங்கு சென்றாலும் கொழுந்தன் மகனை மட்டும் அழைத்துச் செல்ல ஆரம்பித்தார். மாமனார் எங்கு சென்று வந்தாலும், கொழுந்தன் மகனுக்கு மட்டுமே விளையாட்டுப் பொருள்கள், ஆடைகள் என்று வாங்கிவர ஆரம்பித்தார். என் பிள்ளைகள் அதைக் குறிப்பிட்டு அழுதால், இந்த வீட்டில் அதற்குக் கிடைக்காத பதிலுக்கு அர்த்தம், `அவன் ஆம்பளப்புள்ள' என்பதாகவே இருந்தது.

குலதெய்வக் கோயிலுக்குக் கொடுக்கும் காணிக்கை கொழுந்தன் மகன் பெயரில் கொடுக்கப்பட்டதில் தொடங்கி, `இவன்தான் இந்தக் குடும்பத்து வாரிசு' என்று அடிக்கடி சொல்லப்பட்டதுவரை, எங்கள் வீட்டில் என் மகள்கள் இரண்டாம்தரமாக நடத்தப்படுவதை சந்தேகத்துக்கு இடமின்றி நான் ஊர்ஜிதமாக உணர்ந்தேன்.

இன்னொரு பக்கம், என் கொழுந்தன் மனைவியின் நடவடிக்கைகளிலும் மாற்றம் தெரிய ஆரம்பித்தது. ஆண் குழந்தையைப் பெற்றுவிட்டதாலேயே அவரை வீடும் உறவும் உசுப்பேற்றிவிட்டிருந்த வார்த்தைகளும், கொடுத்த முக்கியத்துவமும், அவரை மாற்றிவிட்டிருந்தது. ஒரே வீட்டில் வாழும் இரண்டு மருமகள்கள் என்றாலும், குடும்பத்துக்கு வாரிசு(!) பெற்றவர் என்பதால் அவர் என்னைவிட மேல் என்று அவர் நம்பினார். அதை சில நடவடிக்கைகள் மூலம் என்னிடமும் திணிக்க ஆரம்பித்தார். கொழுந்தனுக்கு இதெல்லாம் தெரியும் என்றாலும், எதுவும் தெரியாததுபோல நகர்ந்தார்.

baby

இவற்றையெல்லாம் என் கணவரிடம் சொன்னபோது, ஆரம்பத்தில் என்னை பொறுமையாகப் போகச் சொன்னார். ஆனாலும் வீட்டின் சூழல் அதேபோல தொடர்ந்தது. அந்த ஆற்றாமையை நான் அவரிடம் வெளிப்படுத்தினால், `எனக்குக்கூடத்தான் நமக்கு ஒரு ஆம்பளப்புள்ள இல்லையேனு தோணுது... நான் உன்னை ஏதாச்சும் `குறை' சொல்றேனா? சரிதான்னு போறேன்ல... அதே மாதிரி நீயும் கண்டுக்காம போ' என்றபோது அதிர்ந்துபோனேன். பெண்ணின் கருமுட்டையில் இருக்கும் X குரோமோசோமுடன், ஆணின் Y குரோமோசோம் கொண்ட உயிரணு இணையும்போது ஆண் குழந்தையும், X குரோமோசோம் கொண்ட உயிரணு இணையும்போது பெண் குழந்தையும் உருவாகும்; இதைத் தீர்மானிப்பது ஆணின் கையிலோ, பெண்ணின் கையிலோ இல்லை என்பதெல்லாம் அவருக்கும் தெரியும்தான். இருந்தாலும், இந்த விஷயத்தில் படித்த ஆண்களும் பாமரர்களாக நடித்து மனைவியை குற்றம் சாட்டும் ஆதிக்கத்தை நேரடியாக உணர்ந்தேன்.

இன்னொரு பக்கம் வீட்டில் என் குழந்தைகளுக்கு பாரபட்சங்கள் தொடர்ந்துகொண்டே இருக்க, ஒரு கட்டத்தில், `ஆம்பளப்புள்ள இல்லைங்கிறதால நான் எந்த விதத்திலும் குறைஞ்சு போயிடல, என் பிள்ளைகளும் பொம்பளப் புள்ளைங்கங்கிறதாலேயே யாருக்கும் குறைஞ்சவங்க இல்ல, என்னைப் பொறுத்தவரை அவங்கதான் என் மகாராணிங்க' என்று நான் மாமனார், மாமியார், கொழுந்தன் மனைவி, கணவர் என்று அனைவரிடமும் வெடித்துவிட்டேன். அது நிலைமையை இன்னும் சிக்கலாக்கியது. நான் பொறாமையில் சண்டை போடுகிறேன் என்று அடுத்த அத்தியாயத்தை எழுதினார்கள்.

இப்படி என்னைச் சுற்றி `ஆம்பளப்புள்ள' அழுத்தங்கள் சூழ்ந்துகொண்டே இருக்க, ஒரு கட்டத்தில் வீட்டில் நான் இயல்பாக யாருடனும் பேசுவதையே நிறுத்திக்கொண்டேன். கேள்வி கேட்டால் பதில் என்ற அளவில் உரையாடல்களைச் சுருக்கிக்கொண்டேன். என் பிள்ளைகள் குறித்துப் பேசினால் முன்னர் சீறிய என் சுயமரியாதை, கோபம் எல்லாம் என்னைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்தது. `ரெண்டும் பொண்ணா', `பையன் ஒண்ணு பொறந்திருக்கலாம்' பேச்சுகளுக்கு எல்லாம் இப்போது எதிர்வினையற்ற ஜடமாக இருக்கப் பழகிவிட்டேன்.

இந்தச் சமூக, குடும்ப அழுத்தங்கள் எல்லாம், ஆண் குழந்தை இல்லையே என்ற ஏக்கத்தை எனக்கு இப்போதும் துளியும் ஏற்படுத்தவில்லை. எனக்கு என் மகள்கள் இருவரும் வரம், அவர்கள் போதும் எனக்கு. ஆனால், அதை இந்த உலகத்துக்குப் புரியவைக்கும் முயற்சியில் நான் சோர்வடைந்துவிட்டேன் என்பதை ஒப்புக்கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

woman (Representational Image)

Also Read: வீட்டுக்கு அழைத்த தோழியால் நடந்த விபத்து... கணவருடன் பழைய சந்தோஷம் திரும்புமா? #PennDiary - 05

`இப்பயுமா ஆம்பளப்புள்ள, பொம்பளப்புள்ள பாரபட்சம் எல்லாம் பார்க்குறாங்க' என்பவர்கள் எல்லாம் உங்கள் கழுத்தை சமூக வலைதளத்திலிருந்து வீடுகளுக்குள் திருப்பிப் பார்க்கவும் ப்ளீஸ். நான் ஒருத்தி அல்ல. லட்சம் பெண்களின் பிரதிநிதி.

மூன்றாவதாக ஓர் ஆண் குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணமெல்லாம் எனக்குத் துளியும் இல்லை. எனக்கு என் இரண்டு பெண் பிள்ளைகளே போதும்; அதுவே நிறைவு. மீண்டும் சொல்கிறேன்... மனதளவில் எனக்கு ஆண் பிள்ளை வருத்தமோ, ஏக்கமோ இல்லை. ஆனால், அதை என் மீது திணிக்க நினைக்கும் சுற்றம்தான் பிரச்னை.

மூத்தவளுக்கு இப்போது வயது 7, இளையவளுக்கு 5. 4 வயது தம்பிக்கு இந்த வீட்டில் இருக்கும் அதிகாரம், செல்லம், உரிமை எல்லாம் தங்களுக்கு ஏன் இல்லை என்று யோசிக்க ஆரம்பிக்கிற வயதுகளுக்கு வந்துவிட்டார்கள். இந்த வீடு அதற்குச் சொல்லும் அசிங்கமான பதிலை அவர்களைச் சந்திக்கவைக்க, உணரவைக்க எனக்கு விருப்பமில்லை. எனவே, தனிக்குடித்தனம் போய்விடலாம் என்று கேட்கிறேன் என் கணவரிடம். `போயிட்டா மட்டும் எல்லாம் சரி ஆகிடுமா? தம்பிகிட்ட அம்மா, அப்பாவை விட்டுட்டு நான் எப்படி வரமுடியும்?' என்கிறார் அவர்.

Family (representational image)

`உன் மகள்களுக்கு பெண்ணும் ஆணும் சமம் எனச் சொல்லிக்கொடுத்து, தன்னம்பிக்கையுடன் வளர்த்து வா' என்று சொல்லும் உங்களின் சில குரல்கள் எனக்குக் கேட்கின்றன. ஆனால், அதுதான் என் பிரச்னை. ஒரு பக்கம் வார்த்தைகளாக அதை அவர்களுக்குச் சொல்லி வளர்த்து, இன்னொரு பக்கம் நிதர்சனத்தில் அது நடைமுறை இல்லை என்று நினைக்க வைக்கும் பாரபட்ச சூழலில் அவர்களை ஏன் வளர்க்க வேண்டும் நான்? என்ன செய்வது?

வாசகியின் பிரச்னைக்கு உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் பதிவு செய்யலாமே..!
தோழிகளே... இதுபோல நீங்கள் சந்திக்கும் பிரச்னைகள், உறவுச் சிக்கல்களை அவள் விகடனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பமா? உங்கள் அனுபவங்களை எங்களுக்கு அனுப்பலாம். avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு Penn Diary என Subject-ல் குறிப்பிட்டு உங்கள் அனுபவங்களை அனுப்பி வையுங்கள். தேர்ந்தெடுக்கப்படும் அனுபவங்கள் விகடன் தளத்தில் வெளியாகும்.


source https://www.vikatan.com/lifestyle/women/woman-shares-about-how-family-discriminates-her-girl-children-and-humiliating

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக