கரூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளில், மூன்று தொகுதிகளில் அ.தி.மு.க போட்டியிடுகிறது. மற்றொரு தொகுதியை பா.ஜ.கவுக்கு தாரை வார்த்திருக்கிறது. அ.தி.மு.க வேட்பாளர்களை பொறுத்தமட்டில், கடந்த 2016 - ம் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட இருவருக்கு மறுபடியும் சீட் கிடைத்திருக்கிறது. ஒருவருக்கு சீட் கிடைக்கவில்லை.
தமிழகத்தின் சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 6 - ம் தேதி நடைபெற இருக்கிறது. அதற்காக, பிரதானக் கட்சிகளான அ.தி.மு.கவும் தி.மு.கவும் தீவிர கூட்டணி பேச்சுவார்த்தையில் இறங்கின. தமிழக சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டு, மார்ச் 12 - ம் தேதி வேட்புமனு தாக்கல் துவங்கப்பட உள்ளது. இந்த நிலையில், கூட்டணிக் கட்சிகள், அவர்களுக்கான தொகுதி பங்கீடு என துரிதகதியில் முடித்த அ.தி.மு.க தலைமை, இரண்டு கட்டமாக அ.தி.மு.க வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்திருக்கிறது. அ.தி.மு.க கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு நிறைவடைந்ததால், மார்ச் 10 - ம் தேதி மாலை அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை, அந்த கட்சி தலைமை அறிவித்ததுள்ளது.
அந்த வகையில், கரூர் மாவட்டத்தில் மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் அ.தி.மு.க போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. மார்ச் 10 - ம் தேதி அ.தி.மு.க தலைமை வெளியிட்ட இரண்டாம்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில், கரூர் சட்டப்பேரவைத் தொகுதி, கிருஷ்ணராயபுரம் (தனி) சட்டப்பேரவை தொகுதி, குளித்தலை சட்டப்பேரவை தொகுதி ஆகிய மூன்று தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
Also Read: பணப்பட்டுவாடா; தேர்தல் ரத்து; `இந்த முறையும் அது நடக்கக் கூடாது’ - புலம்பும் அரவக்குறிச்சி மக்கள்
அரவக்குறிச்சி தொகுதி கூட்டணிக் கட்சியான பா.ஜ.கவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்தமுறை, கரூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் (தனி), அரவக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளிலும் அ.தி.மு.க போட்டியிட்டது. ஆனால், இந்தமுறை மூன்று தொகுதிகளில் மட்டும் அ.தி.மு.க போட்டியிட உள்ளது. கரூர் சட்டப்பேரவை தொகுதியில், தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும், தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருக்கும், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீண்டும் போட்டியிடுகிறார். எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளராகவும், அ.தி.மு.க அண்ணா தொழிற்சங்க மாநில செயலாளராகவும் உள்ளார்.
குளித்தலை சட்டப்பேரவை தொகுதியில் கடந்த 2016 - ம் ஆண்டு போட்டியிட்டு தோல்வியுற்ற என்.ஆர்.சந்திரசேகர், மீண்டும் குளித்தலை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், அ.தி.மு.கவின் தோகைமலை கிழக்கு ஒன்றிய செயலாளராக உள்ளார். முன்னாள் அமைச்சரான பாப்பாசுந்தரத்தின் மகனும், அ.தி.மு.க குளித்தலை கிழக்கு ஒன்றிய செயலாளருமான கருணாகரனுக்குதான் சீட் என்று சொல்லப்பட்டது.
குளித்தலை தொகுதி அ.தி.மு.கவினர் மட்டுமின்றி, கரூர் மாவட்டம் முழுக்க உள்ள அ.தி.மு.கவினர், 'கருணாகரனுக்கு தான் சீட்' என்று பேசிகொண்டனர். பாப்பாசுந்தரம், எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வளர்ச்சியில் ஒரு தூணாக இருந்தவர். அதனால், 'எம்.ஆர்.விஜயபாஸ்கர் பாப்பாசுந்தரம் மகனுக்குதான் சீட் வாங்கி தருவார்' என்று சொல்லப்பட்டது. ஆனால் அவர், கடந்த தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளராக இருந்த என்.ஆர்.சந்திரசேகரையே இந்தமுறையும் டிக் அடித்து, வேட்பாளராக்க வைத்துவிட்டார். இதனால், பாப்பாசுந்தரம் படு அப்செட் என்கிறார்கள் குளித்தலைப் தொகுதியில் உள்ள அ.தி.மு.கவினர்.
அதேபோல், கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதியின் தற்போதைய அ.தி.மு.க எம்.எல்.ஏ கீதா மணிவண்ணனுக்கு, இந்த முறை சீட் இல்லை. புதுமுகமான, அ.தி.மு.கவின் எம்.ஜி.ஆர் இளைஞரணி மாவட்ட செயலாளராகவும், மாவட்ட ஊராட்சிக் குழு துணை தலைவராகவும் இருக்கும் தானேஷ் என்கிற முத்துகுமாருக்கு சீட் கிடைத்திருக்கிறது. கீதா மணிவண்ணன் மறுபடியும் சீட் வாங்க கடுமையாக போராடினார். ஆனால், கீதாவின் கணவர் மணிவண்ணனுக்கும், எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும் சமீபத்தில் முட்டிக்கொண்டது.
அதோடு தானேஷ், அமைச்சர் மனம்போல் நடந்து கொண்டார். அதற்கு பரிசாக, எம்.ஆர்.விஜயபாஸ்கர், தானேஷை கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதியின் வேட்பாளராக வைத்திருக்கிறார் என்கிறார்கள். கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை, கடந்த சட்டமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில், குளித்தலை மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளை தி.மு.க கைப்பற்றியது. கரூர் மற்றும் கிருஷ்ணராயபுரம் (தனி) ஆகிய தொகுதிகளை .அ.தி.மு.க கைப்பற்றியது.
அதாவது, அ.தி.மு.கவும், தி.மு.கவும் சரிக்கு சமமாக தலா இரண்டு தொகுதிகளை வைத்திருக்கிறது. வரும் தேர்தலில் இந்த போட்டி அதேபோல் சரிக்கு சமமாக இருக்குமா அல்லது ஏதேனும் ஒரு கூட்டணிக்கு போகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதற்கிடையில், தி.மு.க தலைமை வேட்பாளர்களை அறிவிப்பதற்குள், அ.தி.மு.க தலைமை முந்திகொண்டு வேட்பாளர் பட்டியலை அறிவித்ததால், கரூர் மாவட்ட அ.தி.மு.க தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
source https://www.vikatan.com/news/politics/karur-admk-candidates-for-2021-assembly-election
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக