Ad

செவ்வாய், 9 மார்ச், 2021

''சிஸ்டம் சரியாக வேண்டும்... அரசியல் பேசுவேன்'' - மெளனம் கலைக்கிறார் ரஜினி... 'வாய்ஸ்' யாருக்கு?

அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்ட ரஜினி 2021 தேர்தலில் யாருக்கு 'வாய்ஸ்' தரப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு சில கட்சிகளிடையே எழுந்திருக்கிறது.

ரஜினி தனிக்கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் 1996 முதல் தொடர்ந்து பல தேர்தல்களில் தன்னுடைய ஆதரவு யாருக்கு என்பதை நேரடியாகவும், மறைமுகமாகவும் சொல்லிவந்திருக்கிறார்.

1996 தேர்தலின்போது திமுக- தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணிக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்த ரஜினிகாந்த், 2004 பொதுத்தேர்தலின்போது பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவு தெரிவித்தார். அதன்பிறகு எந்தத் தேர்தலிலும் நேரடியாக அவர் எந்தக்கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை.

இந்நிலையில்தான் 2017 டிசம்பர் 31-ம் தேதி தமிழ்நாட்டில் ''சிஸ்டம் சரியில்லை'' என்றும் "இதனால் நான் நேரடி அரசியலுக்கு வருவேன்" என்றும் அறிவித்தார். ஆனால், அதன்பிறகு கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் கட்சி ஆரம்பிக்காமலேயே அமைதிகாத்த ரஜினிகாந்த், கடந்தாண்டு இறுதியில் 2021-ல் கட்சி அறிவிப்பு வெளியாகும் என அறிவித்தார். இதற்கிடையே 'அண்ணாத்த' ஷூட்டிங்கின்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், பின்னர் ஒரு உருக்கமான அறிக்கை மூலம் "அரசியல் வருகை சாத்தியமில்லை" என அறிவித்தார்.

ரஜினிகாந்த்

ஆனால், ரஜினி இந்தத்தேர்தலில் தன்னுடைய பாதிப்பு இருக்கவேண்டும் என முடிவெடுத்திருக்கிறார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். தன்னுடைய நாயக பிம்பத்தை தமிழ்நாட்டின் மிக முக்கியமானக் கட்சி ஒன்று வேண்டுமென்றே திட்டமிட்டு சிதைத்தாக நண்பர்களிடம் கலங்கியிருக்கிறார் ரஜினிகாந்த. ''அவர்களுக்கு பாடம் புகட்டுவேன். என்னுடைய ரசிகர்கள் யாருக்கு ஆதரவளிக்கவேண்டும் என்பதை சில குறிப்புகள் மூலம் உணர்த்துவேன். ஏப்ரல் 6-ம் தேதி தேர்தலுக்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பாக பத்திரிகையாளர்களை சந்தித்து வெளிப்படையாக அரசியல் பேசுவேன்'' என்று சொல்லியிருக்கிறார் ரஜினிகாந்த்.

சமீபத்தில் ரகசிய சந்திப்பாக ரஜினியை நேரில் சென்று சந்தித்துவிட்டுவந்தார் அவரது நண்பரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன். இந்த சந்திப்பு குறித்து ரஜினி - கமல் தரப்பில் இருந்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை. இதனால் ரஜினி யாருக்கு ஆதரவளிக்கப்போகிறார் என்கிற பரபரப்பு தமிழக அரசியல் களத்தில் எழுந்திருக்கிறது!

எப்போதும்போல ரஜினியின் போயஸ் கார்டன் வாசல் பேட்டிக்காக காத்திருப்போம்!



source https://cinema.vikatan.com/politics/rajnikanth-to-give-support-for-a-political-party-before-election-date

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக