அந்தக் காலத்துப் பெண்கள் என்றாலே சிக்கனத்துக்குப் பெயர் போனவர்கள். அவர்களுக்குக் கடன் வாங்குவது பிடிக்கவே பிடிக்காது. அதனால்தான் வருமானத்திலேயே எவ்வளவு சுருக்கமாகச் செலவு செய்ய முடியுமோ செய்து, பணத்தை மிச்சம் பிடித்து, அதில் கிடைக்கும் பணத்தைக்கொண்டு வீட்டுக்குத் தேவையான ஒரு பொருளை வாங்கிவிடுவார்கள்.
``சேத்த பணத்தைச் சிக்கனமா செலவு பண்ணப் பக்குவமா
அம்மா கையிலே கொடுத்துப்போடு சின்னக்கண்ணு
அவுங்க ஆறை நூறு ஆக்குவாங்க செல்லக்கண்ணு’’ என அன்றே பாடியிருக்கிறார் கவிஞர் மருதகாசி.
Also Read: `டிஜிட்டல்' தீபிகா, `பட்ஜெட்' நளினி... உங்கள் சம்பளத்தைப் பாதுகாக்க யார் ஃபார்முலா பெஸ்ட்? #HerMoney
முதலீட்டில் பெண்கள் எப்படி?
ஆனால், இன்றும் பெண்கள் சிக்கனமாகத்தான் செலவு செய்கிறார்களா, நிதி நிர்வாகத்தில் ஆண்களைவிட அவர்கள் புத்திசாலிகளாக இருக்கிறார்களா என்கிற கேள்விகளுக்கு பதில் சொல்கிற மாதிரி யூஎஸ் ஃபிடலிட்டி இன்வெஸ்ட்மென்ட்ஸ் (U.S.Fidelity Investments) நிறுவனம் `விமன் & மனி' என்ற சர்வே ஒன்றை நடத்தியது. இந்த சர்வேயில் பங்குபெற்றோரில் 9% பேரே பண விஷயத்தில் ஆண்களைவிட பெண்கள் திறமைசாலிகள் என்று கூறியுள்ளனர்.
85 ஆண்கள் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்டில் அல்லது பங்குச் சந்தையில் 15 பெண்களே முதலீடு செய்கிறார்கள். இதனால் பெண்களுக்கு முதலீடுகள் பற்றிய அறிவு குறைவு என்ற எண்ணம் எழுவது இயல்புதான். நன்கு கற்றறிந்த நவீன பெண்களுக்குக்கூட முதலீடு என்றால் ``ஐயையோ, தெரியாதே” என்று டென்ஷன் எகிறுகிறது. ஆனால், விஷயம் தெரிகிறதோ, இல்லையோ, ஆண்கள் முதலீடுகளை அநாயசமாகக் கையாளுகிறார்கள். இந்த நிலை ஏன் நிலவுகிறது?
முதலீட்டில் பெண் ஏன் பின்தங்குகிறாள்?
1. பாரம்பர்யமாகப் பெண் என்பவள் குடும்பத்தைக் கவனிப்பவளாகவும், ஆண் என்பவன் சம்பாத்தியம் மற்றும் முதலீடுகளைக் கவனிப்பவனாகவும் இருந்ததால் பெண்களுக்கு பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் போன்ற நவீன முதலீடு அறிவு கொஞ்சம் குறைவாக இருப்பதில் ஆச்சர்யமில்லை.
2. பெண்களுக்கு பல காலமாக சொத்துரிமை இருக்கவில்லை. சொத்தே இல்லை என்னும்போது அதைக் கையாளும் திறன் மட்டும் எப்படி வரும்?
3. பெண்களிடம் முதலீடு செய்யும் அளவு அதிக பணம் இருப்பதில்லை. அவர்களில் பலரும் வேலைக்குச் செல்வதில்லை. செல்பவர்களுக்கும் ஆண்களைவிட குறைவான சம்பளமே தரப்படுகிறது.
Also Read: இன்னும் தங்க நகைகள் மூலம்தான் தங்கத்தில் முதலீடு செய்கிறீர்களா? ஒரு நிமிஷம் ப்ளீஸ்! #HerMoney - 5
4. கையில் மீதமாகும் பணம் சிறிதே என்னும்போது பெண்கள் அதை இழக்க விரும்பாமல் மிக மிக பத்திரமான, தங்களுக்குப் புரியக்கூடிய இடங்களிலேயே முதலீடு செய்வதில் ஆச்சர்யம் இல்லை.
5. நடுத்தர குடும்பங்களில் பெண்கள் ரிஸ்க் எடுக்க விரும்புவதில்லை. இதனாலேயே வீடு, தங்கம் போன்ற ஃபிக்ஸட் முதலீடுகளையே தேர்ந்தெடுக்கிறார்கள். அவற்றிலிருந்து பெண்களுக்குக் கிடைக்கக்கூடிய வருமானம் குறைவாகவே இருக்கிறது.
மாறிவரும் அணுகுமுறை
ஆனால், இந்தப் போக்கு நம் நாட்டில் தற்போது வேகமாக மாறிவருகிறது. பெண்கள் தைரியமாக முதலீட்டுக் களத்தில் இறங்குவதோடு நில்லாமல், அதில் ஆண்களைவிட அதிகமாக வெற்றியும் பெறுவதாகப் பல சர்வேக்கள் தெரிவிக்கின்றன. மேற்கண்ட பலவீனங்களே அவர்களுக்குப் பலமாகவும் அமைந்திருப்பதே ஆச்சர்யம்.
தங்கள் திறமையின் மேல் நம்பிக்கையின்றி இருப்பதால், பெண்கள் தங்கள் நண்பர்கள், சக ஊழியர்கள் போன்றோரிடம் கலந்தாலோசிக்கிறார்கள். ஆழமாக ஆராய்ச்சி செய்து மிகுந்த எச்சரிக்கையுடனும் தயக்கத்துடனும் முதலீட்டில் காலடி எடுத்து வைக்கும் இவர்கள், சட்டென்று அவற்றை விட்டு விலகுவதில்லை. ஆர்.டி அல்லது SIP முதலீடுகளை எப்பாடுபட்டாவது தொடர்கிறார்கள். இதனால் ``பவர் ஆஃப் காம்பவுண்டிங்” (Power of Compounding) கோட்பாடு அவர்களுக்குச் சாதகமாக இருக்கிறது. மேலும், பங்குச் சந்தையைவிட மியூச்சுவல் ஃபண்ட் மீது பெண்கள் அதிக நம்பிக்கை கொள்வதால், அவர்களின் போர்ட்ஃபோலியோ பரவலாக அமைந்துவிடுகிறது.
Also Read: இன்னும் நகைச்சீட்டு மூலம்தான் தங்கம் சேமிக்கிறீர்களா? இந்தக் கட்டுரை உங்களுக்குத்தான்! #HerMoney - 2
பங்குச் சந்தையில் நுழையும் பெண்களும்கூட ஆண்களைவிட அதிகம் வெற்றி பெறுவதாக வார்விக் பிசினஸ் ஸ்கூலின் ஆய்வு தெரிவிக்கிறது.
பெண்களுக்கு வீட்டு பட்ஜெட்டை நிர்வாகம் செய்து பழக்கம் இருப்பதால், முதலீட்டிலும் அந்த ஒழுங்குமுறை தொடர்கிறது. குழந்தைகளைப் பேணி வளர்ப்பது, பேரம் பேசி வாங்கி லாபத்தை அதிகரிப்பது, செலவினங்களை நுணுக்கமாகக் கவனித்து கட்டுப்படுத்துவது போன்ற பாரம்பர்ய பழக்கங்கள் முதலீட்டுக் களத்தில் பெண்ணின் வெற்றியை உறுதிப்படுத்துகின்றன. ஒரு ஆண் வருடத்துக்கு சராசரியாக 13 முறை முதலீட்டை மாற்றினால், பெண் 9 முறை மட்டுமே மாற்றுகிறாள். ஒரு ஆண் தன் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை சராசரியாக 8.3 வருடங்கள் தொடர்ந்தால், பெண் 10.7 வருடங்கள் தொடர்கிறாள். இதனால் கமிஷன், வரி போன்ற செலவினங்கள் குறைந்து லாபம் அதிகரிக்கிறது.
முதலீட்டில் கலக்க என்ன செய்ய வேண்டும்?
இப்படி `ஸ்லோ அண்ட் ஸ்டெடி'யாக முதலீட்டுக் களத்திலும் பெண்கள் முன்னேறுவதை அனைத்து நாடுகளும் வரவேற்கின்றன. இன்னும் என்னென்ன முறைகளில் பெண்கள் தங்கள் பொருளாதார வெற்றியை உறுதிப்படுத்த முடியும் என்று பார்க்கலாம்.
1. முழு நேரமாகவோ, பகுதி நேரமாகவோ வேலை செய்து குடும்ப வருமானத்தைப் பெருக்கலாம்.
2. செலவு செய்வது தவறில்லை என்றாலும், எக்காரணம் கொண்டும், சேமிப்பைக் கைவிடக் கூடாது.
3. முதலீடுகள் தரும் டென்ஷனைவிட பணமாகவே வைத்துக் கொள்வது மேலெனப் பெண்கள் கருதுவதாக இங்கிலாந்தின் ஹெச்.எம்.ஆர்.சி புள்ளி விவரங்கள் கூறுகின்றன. வெறும் பணமாக இருக்கும்பட்சத்தில் அது வளர்வதற்கான சாத்தியக் கூறுகள் மிகக் குறைவு. ஆகவே, கூடிய விரைவில் முதலீட்டு சூத்திரங்களைக் கற்றுக்கொள்வது நல்லது.
Also Read: ஆயுள் காப்பீட்டை நல்ல முதலீடாக நினைக்கிறீர்களா? அந்தத் தவறை இனியும் செய்யாதீர்கள்! #HerMoney - 3
4. தங்கத்தில் முதலீடு செய்யும்போது, நகைகளாக வாங்க வேண்டியதில்லை என்கிறபோது, மத்திய அரசின் சாவரின் கோல்ட் பாண்ட் அல்லது கோல்ட் இ.டி.எஃப்-ல் முதலீடு செய்யலாம்.
5. குடும்பத்தாரின் உடல் நலத்துக்காக சமச்சீரான உணவு முறையைக் (Balanced Diet) கைக்கொள்வது போல், குடும்பத்தின் பொருள் நலத்துக்காக சமச்சீரான போர்ட்ஃபோலியோவை (Balanced Portfolio) அமைத்துக்கொள்வது நலம். அசையா சொத்துக்கள் வாங்குவதில் உள்ள ஆர்வத்தை மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை போன்ற சொத்துகள் வாங்குவதிலும் காட்டினால், சீரான வளர்ச்சி கிட்டும். அதிலும் மல்ட்டி அசெட் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது பரவலாக்கத்தைத் தரும்.
தன்னம்பிக்கை என்பது மிகப் பெரிய சொத்து. பெண்களின் இன்றைய தேவையும் அதுவே. தம் மீதான தாழ்வு எண்ணங்களை ஒதுக்கிவிட்டு, வெற்றிகரமான பெண்மணியாகக் கம்பீரமாக வலம் வர பொருளாதார சுதந்திரம் மிக அவசியம். அதுவே நம் அனைவரின் லட்சியம். லட்சியம் நிறைவேற வாழ்த்துகள்.
source https://www.vikatan.com/business/women/how-women-can-improve-their-investment-knowledge-a-guidance
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக