தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், தேசியக் கட்சிகள் தொடங்கி மாநில கட்சிகள் வரை கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வு என மும்முரமாக பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தி.மு.க-வில் அங்கம் வகிக்கும் தேசிய கட்சியான காங்கிரஸ் உடனான தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தை, தொடர்ந்து இழுபறியில் இருந்த நிலையில், ஞாயிறு(7-3-21) காலை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க - காங்கிரஸ் உடன்படிக்கை கையெழுத்தானது. 25 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு கொடுத்திருக்கிறது தி.மு.க.
தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கிய நாளில் இருந்தே, காங்கிரஸுக்கு, தி.மு.க ஒதுக்குவதாக கூறிய தொகுதிகளின் எண்ணிக்கையில் காங்கிரஸ் அதிருப்தியில் இருந்தது. காங்கிரஸ் கேட்ட 30 தொகுதிகளை வழங்க தி.மு.க தலைமை இறங்கி வராததால், காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் தொடர்ந்து மூன்று நாட்கள் காங்கிரஸ் தலைவர்கள் இது குறித்து பரபரப்பாக விவாதித்து வந்தனர்.
அந்த ஆலோசனைக் கூட்டத்தில் தான் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்கலங்கினார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின. `கூட்டணியை விட சுயமரியாதை முக்கியம்’ என்று கே.எஸ் அழகிரி பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறக் கூடும் என்ற நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் தான் தொகுதிப் பங்கீடு கையெழுத்தாகியிருக்கிறது.
தொகுதிப் பங்கீட்டு இழுபறி திடீரென முடிவுக்கு வர டெல்லி காங்கிரஸ் தலைமையுடன் நடந்த தொலைபேசி உரையாடல் தான் காரணம் என்கின்றனர். மார்ச் 6-ம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேசிய பின்னரே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எட்டப்பட்டு இருக்கிறது. சோனியா காந்தியுடன் நடந்த தொலைபேசி உரையாடலில் 25 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் வழங்குவதாக உறுதி அளித்து இருக்கிறார் ஸ்டாலின்.
அதன் பின்னர் தான் மார்ச் 6-ம் தேதி இரவு மு.க.ஸ்டாலினின் வீட்டுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர் காங்கிரஸ் நிர்வாகிகள். பேச்சுவார்த்தைக்கு பின், காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ், கே.எஸ். அழகிரி ஆகியோர் கூட்டணி பேச்சு வார்த்தை முடிந்தது என அறிவித்தனர் .
Also Read: தேர்தல் 2021: பிடியை இறுக்கும் தி.மு.க... 2011, 2016-ல் காங்கிரஸ் செய்ததும், 2021-ல் தவறியதும்?!
மார்ச் 7-ம் தேதி காலை அண்ணா அறிவாலயம் வந்த காங்கிரஸ் தலைவர்களை நுழைவு வாயிலுக்கே வந்து தி.மு.க தலைவர்கள் வரவேற்றுச் அழைத்துச் சென்றனர். 25 சட்டமன்ற தொகுதிகள், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குவது என அண்ணா அறிவாலயத்தில் கையெழுத்தானது . ஒரு ராஜ்யசபா இடம் வழங்குவது குறித்து ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படவில்லை. ஆனால், காங்கிரஸ் தலைமையிடம் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இழுபறியில் இருந்து வந்த பேச்சுவார்த்தையை முடிவுக்கு கொண்டு வந்ததில் தி.மு.க மகளிரணி செயலாளர் கனிமொழி முக்கிய பங்கு வகித்திருக்கிறார். 2019 நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி, தொகுதி பங்கீடு ஆகியவற்றை கனிமொழி பேசி முடித்த நிலையில், 2021 சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணியை இறுதி செய்து தொகுதி பங்கீட்டை பணியை சுமுகமாக செய்து முடித்திருக்கிறார். இது வரை தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை எதிலும் இடம்பெறாத கனிமொழி, தி.மு.க-காங்கிரஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தான நிகழ்வில் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
source https://www.vikatan.com/government-and-politics/politics/dmk-congress-seat-sharing-discussion-came-to-an-end-by-a-phone-call
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக