'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற நிகழ்ச்சிக்காக, இரண்டு நாள் சுற்றுப்பயணமாக கரூர் வருகைதந்துள்ளார், தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின். முதல்நாள் சுற்றுப்பயணத்தில், விவசாயிகளுடன் சந்திப்பு, விவசாயிகளுடன் செஃல்பி, ஆட்டுக்குட்டியுடன் போஸ் என்று பல நிகழ்வுகளில் கலந்துகொண்டு, அதிரடி கிளப்பியிருக்கிறார்.
ஆடுகள் வளர்க்கும் விவசாயியை சந்தித்து உரையாடிய உதயநிதி, ஆட்டுக்குட்டியை தூக்கியபடி போஸ் கொடுத்தார்.
கரூர் மாவட்டப் பொறுப்பாளரான செந்தில் பாலாஜி, உதயநிதி ஸ்டாலினை வைத்து, 'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற பெயரில், 07, 08 ஆகிய இரண்டு நாள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். சமீபத்தில், கரூர் எம்.பி ஜோதிமணி, ராகுல் காந்தியை அழைத்து வந்து, சாமான்யர்களை சந்திக்க வைத்ததும், சமையல் சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல் நடத்தும் இளைஞர்களை சந்திக்க வைத்து, அப்போது ராகுல் காட்டிய எளிமையும் வைரலானது அதனால், தான் ஏற்பாடும் செய்யும் நிகழ்ச்சியில், உதயநிதியை வைத்து வைரல் செய்ய வேண்டும் என்று செந்தில் பாலாஜி முடிவெடுத்ததாக சொல்கிறார்கள்.
அதன்படிதான், முதல்நாளான 7 -ம் தேதி, தொடர்ச்சியாக உதயநிதி ஸ்டாலினை பல்வேறு விவசாயம் செய்யும் விவசாயிகளை சந்திக்க வைத்தார். 6 -ம் தேதி இரவு, கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் பேனர் வைப்பது சம்பந்தமாக தி.மு.கவினர்களுக்கும், அ.தி.மு.கவினர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தி.மு.கவினர் சாலைமறியல் செய்தனர். போலீஸார் வந்து, பிரச்னையை சுமூகமாக்கினர்.
Also Read: `சொன்னது மண்பானை உணவகம்; புதுக்கோட்டை டீம் படுரகசியம்!’ - `குக் ராகுல்’ ரகசியம் பகிரும் ஜோதிமணி
7 ஆம் தேதி காலை, திண்டுக்கல் மாவட்டம், பாச்சலூர் அணையில் இருந்து இடையக்கோட்டை வழியாக நங்காஞ்சி ஆற்றுக்கு வரும் உபரிநீரை, உதயநிதி பார்வையிட்டார். கடந்த 15 வருடங்களுக்கு பிறகு நங்காஞ்சி ஆற்றில் தண்ணீர் வரும் மகிழ்ச்சியில் இருக்கும் விவசாயிகளுடன் உரையாடினார். அதேபோல், அரவக்குறிச்சி அருகே உள்ள பெத்தான்கோட்டை பகுதியில் 6 ஏக்கர் பரப்பளவில் செங்காந்தள் மலரைப் பயிர் செய்துள்ள ராஜா என்ற விவசாயியை சந்தித்துப் பேசினார். அங்குள்ள பெண்களுடனும், விவசாயிகளுடனும் செல்ஃபி எடுத்துக்கொண்டார். அதே பகுதியில், முருங்கை விவசாயம் செய்யும் விவசாயிகளையும், செம்மறி ஆடுகள் வளர்க்கும் விவசாயிகளையும் சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது, அங்கு நின்ற ஆட்டுக்குட்டி ஒன்றை தூக்கி அவர் கொஞ்ச, அந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது. அதேபோல், அரவக்குறிச்சி அருகில் உள்ள ஒத்தமாந்துறையில் அமராவதி ஆற்றின் கிளை வாய்க்காலை பார்வையிட்ட உதயநிதியிடம் விவசாயிகள், 'இந்த கிளை வாய்க்கால் தூர்வாரப்படாமல் உள்ளது' என்று புகார் சொன்னார்கள். 'தி.மு.க ஆட்சியில் இந்த வாய்க்கால் தூர்வாரப்படும்' என்று அவர்களிடம் உறுதியளித்தார்.
தொடர்ந்து, 'செந்தில் பாலாஜி பவுண்டேஷன்' சார்பில் கிராமபுற மாணவர்களின் அறிவியல் திறனை மேம்படுத்தும் வகையில், கரூர் நாவல் நகரில் உருவாக்கப்பட்டுள்ள, அப்துல்கலாம் ஆராய்ச்சி மையத்தை திறந்து வைத்தார். அதோடு, நாசா மூலம் விண்ணில் செலுத்தப்பட இருக்கும் கையடக்க சேட்டிலைட்டை உருவாக்கிய கரூர் மாணவர்களை சந்தித்து, அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து, தோட்டக்குறிச்சி வழியில் செல்லும் ராஜவாய்க்காலில் தமிழக அரசின் காகித ஆலையின் கழிவுநீர் கலந்து விவசாயத்தை பாழ்படுத்திவிட்டதாக, அங்கு திரண்டிருந்த விவசாயிகள் உதயநிதி ஸ்டாலினிடம் குமுறினார்கள்.
ஆலையின் கழிவுநீர் கலந்து வரும் ராஜவாய்க்காலின் மோசமான தண்ணீரை பாட்டிலில் அடைத்து வந்து, உதயநிதியிடம் விவசாயிகள் காட்டினர். அதைப்பார்த்த உதயநிதி, 'அடுத்து தி.மு.க ஆட்சிதான். அந்த ஆட்சி அமைந்ததும், இந்தப் பிரச்னை உடனடியாக தீர்க்கப்படும்' என்று வாக்குறுதி கொடுத்தார். சி.எஸ்.ஐ மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.
அதன்பிற்கு, தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் அவர் உரையாற்றினார். தனது பிரசாரப் பயணத்தில் பேசிய அவர்,
"நீங்கள் அத்தனை பேரும் ஒரு முடிவெடுத்திட்டீங்க. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட செந்தில் பாலாஜியை, எப்படி 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தீர்களோ, அதுபோல் வர்ற தேர்தலில் குறைந்தது ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவரை வெற்றிபெற வைக்கவேண்டும். நிச்சயம் வெற்றிபெற வைப்பீர்களா?. எப்படி கடந்த நாடாளும்னறத் தேர்தலில், நமது கூட்டணி கட்சி வேட்பாளர் ஜோதிமணியை நாலரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தீர்கள். அதேபோன்ற ஒரு பெரிய வெற்றியை சட்டமன்றத் தேர்தலில் நீங்க பெற்றுத்தரணும். மோடிக்கு, தமிழ்நாட்டு மக்கள் மீதும், உங்கள் மீதும் கடுமையான கோபம்.
அவர்மீது நாம கடும் கோபத்தில் இருக்கிறோம். ஏன் அவர்மீது நமக்கு கோபம்?. அவர்மீது உங்களுக்கு இருப்பது நியாயமான கோபம் தான். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க இந்தியா முழுக்க வெற்றி பெற்றுச்சு. மோடி அலை என்றெல்லாம் சொன்னாங்க. ஆனா, தமிழ்நாட்டுல மட்டும், அவங்களுக்கு பெரிய நாமத்தைப் போட்டு அனுப்புனீங்க. பா.ஜ.கவுக்கு தமிழகத்தில் ஆப்பு வச்சீங்க. ஆனா, தி.மு.க கூட்டணிக்கு பலமான ஆதரவு தந்தீங்க.
அந்த கோபத்துலதான் தமிழ்நாட்டுக்கு மோடி எதையும் பண்ணமாட்டேங்குறார். ஆனா,, நாம எதையெல்லாம் வேண்டாம்னு சொல்றோமோ, அதை மட்டுமே பண்றார். ஜி.எஸ்.டி வரி கட்டுனதுல, 15,000 கோடியை தமிழகத்துக்கு திருப்பி தரணும். அதை கேட்டதுக்கு, 'திருப்பியெல்லாம் தரமுடியாது. வேணும்னா, 5,000 கோடியை கடனா தர்றோம்'னு சொன்னாங்க. ஆனா, அதையும் போய் வாங்கிட்டு வந்திருக்கார், எடப்பாடி பழனிசாமி. இப்படியும் ஒரு முதல்வர். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 'கொரோனா காலத்துல 20 லட்சம் கோடி ஒதுக்கியிருக்கிறோம்'னு சொன்னாங்க. அப்படி நமக்கு கொடுத்தாங்களா?. இதையெல்லாம் முதல்வர் கேட்கணும். ஆனா, 'நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர். படிப்படியாக முன்னேறி வந்தேன்'னு சொல்றார். ஆனால், படிப்படியாகவா முன்னேறினார். முட்டிப் போட்டு, தரையோடு தரையாக ஊர்ந்துபோய், சசிகலா கால்ல விழுந்து தான் முதலமைச்சர் ஆனார்.
இப்படி பேசியதற்காக என்மீது வழக்குப் போட்டுள்ளார். சசிகலா வர்றாங்கனு தெரிஞ்சதும், ஜெயலலிதா சமாதியை இழுத்து மூடிட்டார். நேற்று ஒரு காமெடியான பிரஸ்மீட் நடந்துச்சு. தங்கமணி, ஜெயக்குமார், சண்முகம் மூணுபேரும், 'நீ பேசுப்பா', 'இல்லை நீ பேசுப்பா'னு மாறி மாறி சொல்லி, காமெடி பண்ணினாங்க. சசிகலா தயவுல முதலமைச்சர் ஆயிட்டு, இப்போ அவரை ஒதுக்க பார்க்கிறாங்க. கலைஞர் இருந்தவரை, நீட் தேர்வு தமிழகத்தில் இல்லை. என்ட்ரன்ஸ் தேர்வை ரத்து பண்ணினார்.
ஜெயலலிதா முதல்வராக இருந்தப்ப, அவரும் நீட்டை எதிர்த்தார். ஆனா, பிரதமருக்கு அடிமையா இருந்து, நீட்டை அனுமதிச்சுட்டாங்க. இதனால், கடந்த மூணு வருஷத்துல 14 மாணவர்கள் இறந்துட்டாங்க. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வை ரத்து செய்வோம். ஒரே ஒரு ரோடு கான்ட்ராக்ட்தான். தலைவர் ஆதாரத்தோடு கவர்னரிடம் புகார் அளித்தார். ரூ. 6,000 கோடி ஊழல். அந்த கான்ட்ராக்டை முதலமைச்சர் யாருக்கு கொடுத்திருக்கார்னு தெரியுமா?. அவரது சம்பந்திக்கு தூக்கி கொடுத்திருக்காரு. அதனால், இந்த ஊழல் ஆட்சியை மக்களாகிய நீங்கள் வர்ற தேர்தலில் வீட்டுக்கு அனுப்பனும். சிறுபான்மை இன மக்களை ஆதரிக்கும் கட்சி தி.மு.க. தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசிடம், தமிழக அரசு அடிமையாக இருக்கிறது. சி.சி.ஏ சட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசையும், அதற்குத் துணை நிற்கும் அடிமை பழனிசாமி அரசையும் வன்மையாக கண்டிக்கிறேன். இந்த ஆட்சியில், இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி உள்ளனர். அவர்களுக்கு போதிய வேலை வாய்ப்பு இல்லாத காரணதினால், கல்வி கடனை செலுத்த முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்கு, நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், கல்விகடன் முழுவதையும் ரத்து செய்வோம்" என்றார்.
தொடர்ந்து, தான்தோன்றிமலை அரசுக் கல்லூரி அருகில் பொதுமக்களிடையே உரையாற்றினார். அங்கே, 54 அடி உயர கொடிகம்பத்தில், தி.மு.க கொடியை ஏற்றிவைத்தார். 'முதல்வர், கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய பயிர்கடனை ரத்து செய்திருக்கிறார். அதனால், ஆளுங்கட்சிக்கு விவசாயிகள் மத்தியில் சிறிது, கவனம் விழுந்துள்ளது. அதனால் தான், உதயநிதியும் விவசாயிகளை சந்திப்பது, ஆட்டுக்குட்டியை தூக்கி கொஞ்சுவது என்று விவசாயிகளை தாஜா செய்ய ஆரம்பித்திருக்கிறார்' என்று உடன் பிறப்புகள் சிலர் கமெண்ட் அடிக்கவும் தவறவில்லை.
source https://www.vikatan.com/government-and-politics/politics/udhayanidhi-stalin-speech-against-edappadi-palanisami-in-karur
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக