''என் தந்தையின் கொலை வழக்கில் தனிப்பட்ட முறையில் யார் மீதும் கோபம், வன்மம் எனக்கு இல்லை. அப்பாவை இழந்தது மிகவும் கடினமான தருணம். இதயமே பிளந்தது போன்ற உணர்வு அப்போது இருந்தது. அப்பாவை இழப்பது எவ்வளவு வேதனையாக இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். அதில் தொடர்புடையவர்களை நான் மன்னித்து விட்டேன்''
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி புதுச்சேரிக்கு தேர்தல் பிரசாரத்துக்காக வந்த, காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி பேசிய வார்த்தைகள் இவை.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் ஒருசில மாதங்களில் தேர்தல் நடைபெறவிருக்கிறது. தமிழகத்தில் ராகுல்காந்தி, கடந்த மாதம் 23-ம் தேதி முதல் 3 நாட்கள், மேற்கு மாவட்டங்களான கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். தமிழகத்தில் 2-ம் கட்ட சுற்றுப்பயணத்தை ராகுல்காந்தி வரும் 27-ம் தேதி தொடங்குகிறார். தொடர்ந்து மூன்று நாட்கள் விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 5 தென் மாவட்டங்களில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவிருக்கிறார். இதற்கிடையில், புதனன்று புதுச்சேரியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் ராகுல்காந்தி. ஒருபுறம், காங்கிரஸ் கட்சியின் நான்கு எம்.எல்.ஏக்கள் ராஜினமா அதில் இரண்டுபேர் பா.ஜ.கவில் ஐக்கியம், துணை நிலை ஆளுநர் பதவில் இருந்த கிரண்பேடிக்குப் பதிலாக, தெலங்கானா ஆளுநர் தமிழிசை கூடுதல் பொறுப்பில் நியமனம் என பரபரப்பான காலக்கட்டத்தில் புதுச்சேரிக்கு வருகை தந்தார் ராகுல்காந்தி.
விமானம் மூலம் புதுச்சேரி வந்தடைந்த ராகுல்காந்தி, தொடர்ந்து அங்கிருந்து கார் மூலம் சோலை நகர் கடற்கரையோர மீனவ கிராமத்துக்குச் சென்று மீனவப் பெண்கள் மற்றும் மீனவ மக்களுடன் கலந்துரையாடினார். அதையடுத்து, பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது, அவரின் தந்தை ராஜீவ் காந்தியின் மரணம் குறித்து, மாணவி ஒருவர் கேட்ட கேள்விக்கு, அவர் அளித்த பதில்தான் நாம் மேற்கண்டது.
ஒருபுறம் ராகுல்காந்தியின் இந்தக் கருத்துக்கு பலத்த வரவேற்புக் கிடைத்திருந்தாலும் ‘தேர்தல் நேர ஸ்டன்ட்தான் இது’ என சில விமர்சனங்களையும் பார்க்கமுடிகிறது. ஜெயலலிதா ஏழு பேரையும் விடுதலை செய்ய முடிவெடுத்தபோது உடனடியாக, உச்சநீதிமன்றத்துக்குச் சென்று தடை வாங்கியது அப்போது மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசாங்கம்தான் என அதற்கான காரணங்களையும் முன்வைக்கின்றனர். எனில், ராகுல்காந்தியின் இந்த உணர்வுபூர்வமான வார்த்தைகளுக்குப் பின்னால் இருப்பது தேர்தல் நலனா இல்லை மனிதாபிமானா....காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவரிடம் பேசினோம்:
''கல்லூரி மாணவி ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலாகத்தான் ராகுல்காந்தி அப்படிப் பேசினார். ''உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, நான்கு நாள்களுக்குள் மத்திய அரசு விடுதலை செய்யாவிட்டால், நான் விடுதலை செய்வேன்'' என அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சொன்னார். மத்தியப் புலனாய்வுத்துறை சம்பந்தப்பட்ட, மத்திய சட்டங்கள் சம்பந்தப்பட்ட ஒரு வழக்கில், மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் மாநில அரசுக்கு விடுதலை செய்கிற உரிமை இல்லை என்கிற அடிப்படையிலேயே மத்திய அரசு அப்போது நீதிமன்றத்துக்குப் போனது. தற்போதைய பா.ஜ.க அரசும் அதே நிலையைத்தான் கடைபிடிக்கிறது. சி.பி.ஐ விசாரித்து தண்டிக்கப்பட்ட ஒரு வழக்கில், மாநில அரசுகள் தீர்மானம் நிறைவேற்றி விடுதலை செய்ய அனுமதித்தால் பயங்கரவாதத்தை ஒன்றும் செய்யமுடியாது என்பதே மத்திய அரசின் நிலை. காங்கிரஸ், பா.ஜ.க எந்த அரசு ஆட்சியில் இருந்தாலும் அதே நிலைப்பாடுதான்.
ஏழு பேர் விடுதலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிலைப்பாடு என்பது, நீதிமன்றமோ, சட்டமோ அவர்களை விடுவித்தால் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது. அவர்கள் தொடர்ந்து சிறையிலேயே வாடவேண்டும் என்பது எங்களின் கருத்தல்ல. அதேவேளை, அவர்கள் நிராபராதிகள் என்று சொல்வதை நாங்கள் ஏற்கவில்லை. அப்படிப் பேசும் திருச்சி வேலுச்சாமி போன்றவர்களிடம், அதற்கான எந்த அடிப்படை ஆதாரமும் கிடையாது. அவர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள். அவர்களை தமிழர்கள் என்று அழைப்பதையும் ஏற்கமுடியாது. தவறாக வாக்குமூலத்தை பதிவு செய்துவிட்டோம் என இப்போது பேசும் அதிகாரிகளை சிறையில் வைத்துவிட்டு, பேரறிவாளனை விடுதலை செய்யட்டும்.
நீண்ட காலம் சிறையில் இருந்த சிறைவாசிகள் என்கிற அனுதாபம் எங்களுக்கு உண்டு. அந்த அடிப்படையில் அவர்கள் விடுதலையை நீதிமன்றமும் சட்டமும் முடிவு செய்யட்டும். ஆனால், அரசியல் கட்சிகள் அதைச் செய்யமுடியாது'' என்கிறார்கள்.
ராகுலின் இந்தக் கருத்து குறித்து, தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் தியாகுவிடம் பேசினோம்,
''அவர்கள் குற்றமற்றவர்கள், குற்றத்துக்குத்தான் மன்னிப்பு. நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பவர்களை இனிமேல் மன்னிக்க என்ன இருக்கிறது? அப்படியே மன்னிப்பவராக இருந்தால் ஏழு பேரையும் விடுதலை செய்வதில் எனக்கு எந்த மறுப்பும் இல்லை, அவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்றுதானே சொல்லவேண்டும். ஆனால், மன்னிக்கிறேன் என்று மட்டும் சொல்வதில் என்ன ஜனநாயகம் இருக்கிறது? அவர் மன்னிக்கிறேன் என்று சொல்வதால் என்ன நடந்துவிடப்போகிறது. இஸ்லாமிய நாடுகளில் உள்ளதுபோல, மன்னித்துவிட்டேன் என்று சொன்னால் விடுதலை செய்ய சட்டம் ஏதும் நம் நாட்டில் இருக்கிறதா...
அவர் இப்படிச் சொல்கிறார், ஆனால், அவரின் கட்சிக்காரர்கள் ஏழு தமிழர்களையும் விடுதலை செய்யக்கூடாது என விவாதங்களில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமெரிக்கை நாராயணன் , ஏழு பேரையும் விடுதலை செய்யக்கூடாது என நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஜனாதிபதி இன்னும் முடிவெடுக்காமல் இருக்கிறார். அதுகுறித்து ராகுல் காந்தியின் பதில் என்ன... நாங்கள் மன்னித்துவிட்டோம் எனச் சொன்னால் அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா... தன்னை நல்ல பிள்ளையாகக் காட்டிக் கொள்வதைத் தவிர்த்து இதில் வேறொன்றும் இல்லை'' என்கிறார் அவர்.
Also Read: எழுவர் விடுதலை: `துச்சமாக நினைக்கிறார் கவர்னர்... அதிகாரமில்லை’- கட்சிகள், வல்லுநர்கள் சொல்வதென்ன?
ஏழு தமிழர்களின் விடுதலையை தொடர்ச்சியாக ஆதரித்துப் பேசிவரும், காங்கிரஸ் கட்சியின் திருச்சி வேலுச்சாமியிடம், ராகுலின் இந்தப் பேச்சு குறித்துப் பேசினோம்,
'' ராகுல் காந்தியின் உடலில் நல்ல காங்கிரஸ்காரரின் ரத்தம் ஓடுகிறது என்பதற்கு இதுவே அடையாளம். சுதந்திரத்துக்காகப் போராடியபோதுகூட வன்முறையைக் கையிலெடுக்காமல் போராடிய இயக்கம் காங்கிரஸ். ஏழு பேரும் குற்றவாளிகள் எனச் சொல்வதற்கு எப்படிச் சிலருக்கு உரிமை இருக்கிறதோ, அதேயளவுக்கு இந்த எழுவரையும் தாண்டி இந்தக் கொலைச்சதியில் பெரிய சக்திகள் இருந்திருக்கின்றன என்று சொல்வதற்கு எனக்கு உரிமை இருக்கிறது. காரணம் நான் அந்தக் குற்றச்சாட்டை பொத்தம்பொதுவாகச் சொல்லவில்லை, ஆதாரபூர்வமாகச் சொல்கிறேன். நான் சொல்வதில் உண்மை இல்லையென்றால் என்மீது நடவடிக்கை எடுக்கட்டும். உண்மைக் குற்றவாளிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று நான் சொல்லவில்லை, வழக்கை விசாரித்த ஜெயின் கமிஷன் சொல்லியிருக்கிறது.
இன்னும் 18 பேரிடம் விசாரிக்க வேண்டும் என்றும் அந்தக் கமிஷன் சொல்லியிருக்கிறது. அந்தவகையில், அந்த உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிந்து, அவர்களுக்குத் தண்டனை வாங்கி உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பெருமை காக்கப்பட வேண்டும். அதேபோல,. சிறையில் இருக்கும் ஏழு பேருக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி கிடைக்கவேண்டிய நியாயமான உரிமைகள் கிடைக்கவேண்டும். ஒரு காங்கிரஸ்காரனான அதற்கு நான் முதல் குரல் எழுப்புவேன்'' என்கிறார் அவர்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/reason-behind-rahuls-emotional-speech-in-puducherry
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக