ஒரு காலத்தில் தங்கத்தின் விலையைவிட அதிகமாக இருந்தது பிளாட்டினத்தின் விலை. பிற்பாடு தங்கம் விலை ஏகத்துக்கும் உயர்ந்ததால், பிளாட்டினம் விலை பின்தங்கியது. இன்று ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1,769 டாலர். ஆனால், ஒரு அவுன்ஸ் பிளாட்டினத்தின் விலை 1,300 டாலர்தான். கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக விலை உயராமலே இருந்த பிளாட்டினத்தின் விலை தற்போதுதான் 1,300 டாலரைத் தாண்டிச் சென்றிருக்கிறது.
விலை உயர்வுக்கான காரணங்கள்
பிளாட்டினத்தின் விலை இப்போது திடீரென உயர பலவிதமான காரணங்களைச் சொல்கிறார்கள்.
தொழில் துறையில் பிளாட்டினத்தின் பயன்பாடு அதிகரித்ததைத் தொடர்ந்து அதன் விலை உயரத் தொடங்கியிருக்கிறது. ஆட்டோ துறையில் பிளாட்டினத்தின் பயன்பாடு வெகுவாக அதிகரித்திருக்கிறது. வாகனங்களில் பயன்படுத்தப்படும் ஆட்டோகேட்டலிட்டிக் கன்வர்ட்டர்ஸில் பிளாட்டினம் பயன் படுத்தப்படுகிறது. சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்க பிளாட்டினம் மிகச் சிறந்த சாதனமாக இருக்கிறது. இது தவிர, ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்ஸ்களைத் தயாரிக்கவும் பிளாட்டினம் பயன்படுத்தப்படுகிறது.
அதிகரிக்கும் தேவை
தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகமாகவே இருந்துவருவதால், பிளாட்டினத்தை இப்போது பலரும் வாங்க ஆரம்பித்திருக் கிறார்கள். பிளாட்டினத்தை நகைகளாக வாங்குவது ஒரு வழி, ஆனால், இப்போது டி.இ.டி.எஃப் எனப்படும் எக்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட் மூலம் வாங்குவதும் அதிகரித்து வருகிறது. நம் நாட்டில் கோல்ட் இ.டி.எஃப்.கள் இருப்பதுபோல, அமெரிக்காவில் பிளாட்டின இ.டி.எஃப்கள் உள்ளன. கடந்த மாத முடிவில் பிளாட்டின இ.டி.எஃப்பில் 3.4 மில்லியன் அவுன்ஸ் பிளாட்டினம் மட்டுமே இருந்தது. அது இப்போது 3.9 மில்லியன் அவுன்ஸ் பிளாட்டினமாக உயர்ந்திருக்கிறது.
இப்படித் தேவை அதிகரிப்பது ஒருபக்கம் என்றால், பிளாட்டினத்தின் உற்பத்தியும் குறைந்துவருவது இன்னொரு பக்கம். உலகளவில் பெரும்பகுதி பிளாட்டினம் தென் ஆப்பிரிக்காவில்தான் எடுக்கப்படுகிறது. கோவிட் நோய்த் தொற்று காரணமாகப் பல சுரங்கங்கள் மூடப்பட்டதால், பிளாட்டினம் உற்பத்தி குறைந்துவருவதும் அதன் விலை உயர்வதற்கு முக்கியமான காரணம் ஆகும்.
எப்படி வாங்குவது?
பிளாட்டினம் வாங்க நினைப்பவர்களுக்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று, பிளாட்டினத்தை நகைகளாக வாங்குவது. தங்க நகைகளைப் போல பிளாட்டினத்தில் வாங்கும் நகைகளுக்கும் செய்கூலி, சேதாரம் உண்டு. நம் நாட்டு மக்கள் தங்க நகைகளையே அணிய விரும்புவார்கள். எனவே, பிளாட்டினம் நகை வேண்டாம் என்கிறவர்கள் பிளாட்டின இ.டி.எஃப்-களில் முதலீடு செய்யலாம். நம் நாட்டில் இருக்கும் சில புரோக்கிங் நிறுவனங்கள் மூலம் வெளிநாடுகளில் இருக்கும் இந்த பிளாட்டின இ.டி.எஃப்-களில் முதலீடு செய்யலாம்.
நம்மிடம் இருக்கும் மொத்த பணத்தையும் பிளாட்டினத்தில் முதலீடு செய்யாமல், 5% - 10% வரை மட்டுமே முதலீடு செய்வது சரியாக இருக்கும்!
source https://www.vikatan.com/business/finance/platinum-price-is-at-six-years-high-things-you-should-know
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக