Ad

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021

மூர்க்கத்தனமாக தாக்கும் பாகன்கள்; கதறும் யானை! - கோவை யானைகள் முகாம் அதிர்ச்சி

தமிழக அரசின் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் ஒவ்வோர் ஆண்டும், கோயில் யானைகளுக்குப் புத்துணர்வு அளிக்கும் விதமாக நலவாழ்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டுக்கான யானைகள் புத்துணர்வு முகாம் கோவை மாவட்டம், தேக்கம்பட்டி பவானியற்றாடு படுகையில் கடந்த 8-ம் தேதி தொடங்கியது. இந்தாண்டு சுமார் 26 கோயில் யானைகள் முகாமில் கலந்து கொண்டுள்ளன.

யானைகள் முகாம்

Also Read: நீலகிரி: பிடிபட்ட `உடைந்த கொம்பன்’ யானை! - முடிவுக்கு வந்த இரண்டு மாதப் போராட்டம்

காடுகளில் சுதந்திரமாகச் சுற்றிக் கொண்டிருந்த யானைகள், மற்ற பணிகளில் ஈடுபடும்போது சற்று இறுக்கமான சூழ்நிலை உருவாகலாம்.

அதைப் போக்கும் விதமாகதான் யானைகள் புத்துணர்வு முகாம் நடத்தப்படுகிறது. நல்ல உணவுகள், ஷவர் குளியல், இதமான தட்வெப்ப சூழ்நிலையில் வாக்கிங் என்று யானைகளுக்கு உற்சாகம் அளிக்கும் விஷயங்கள் நிறையவே உள்ளன. யானைகள் முகாம் என்றாலே, யானைகள் ஜாலியாக ஆட்டம்போடும் வீடியோக்களை தான் பார்த்திருப்போம்.

யானை

இந்நிலையில், அதற்கு நேரெதிரான ஒரு சம்பவம் நடந்துள்ளது. யானைகள் முகாமில், ஒரு யானையை 2 பாகன்கள் சரமாரியாகத் தாக்குவதும், வலியில் அந்த யானை கதறுவது போலவும் ஒரு வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், ஜெயமால்யதா யானையை, அதன் பாகன் ராஜா மற்றும் காவடி (உதவியாளர்) குச்சியால் சரமாரியாக தாக்கும் வீடியோவை, முகாமுகக்கு சென்றிருந்தவர்கள் எடுத்துள்ளனர். ``இதுதான் யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் விதமா..? யானையை தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வனவிலங்கு ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

யானையுடன் பாகன் ராஜா
யானையுடன் பாகன் ராஜா

இதுகுறித்து இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது,``எங்கள் பெயரைக் குறிப்பிட வேண்டாம். விசாரித்துவிட்டு. அது உண்மையென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினர்.

யானை பாகன் ராஜாவிடம் கேட்டபோது, ``நான் பரம்பரை யானைக்காரன். யானை என் காலை மிதித்தது. அதற்கு நான் இரண்டு அடி கொடுத்தேன். உடன் இருந்தவர் அடித்தது மிரட்டுவது போலத்தான் இருக்கும். யானையை என் குழந்தை போல பராமரித்து வருகிறேன். என் கைக்காசைப் போட்டு பல செலவுகளை செய்துள்ளேன். ஶ்ரீவில்லிபுத்தூருக்குச் சென்று நீங்களே நேரடியாக விசாரித்துப் பாருங்கள். நான் யானையை கொடுமை செய்பவன் எல்லாம் இல்லை.

யானை

அது அடுத்தமுறை என் காலை மிதிக்கக் கூடாது என்பதற்காகதான் அடித்தேன். சிலர் தங்களை முகாமுக்குள் அனுமதிக்கவில்லை என்பதற்காக இப்படி வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். யானைக்கு ஒரு காயம் கூட இல்லை. யாராவது ஆய்வு செய்து காயத்தை காண்பித்தால், நான் என் வேலையைவிட்டு செல்லவும் தயாராக இருக்கிறேன்” என்றார்.

Also Read: சுழற்றிய கோயில் யானை, பறிபோன பேச்சு, தொண்டையில் டியூப்... பெண்ணின் 20 வருடப் போராட்டம்!

இந்நிலையில், யானையை தாக்கிய பாகன் ராஜாவை சஸ்பெண்ட் செய்து, கைது செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



source https://www.vikatan.com/social-affairs/controversy/mahout-attacks-elephant-in-thekkampatti-camp

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக