கங்கைக்கு நிகரான மாரி அர்ச்சுனா, வைப்பாறு ஆகிய இரு தீர்த்தங்கள் இருங்கன்குடி மாரியம்மன் கோயிலில் உள்ளன. இந்த இரண்டு தீர்த்தங்களின் கரையில் அம்மன் வீற்றிருப்பதால் `இருகங்கைகுடி மாரியம்மன்’ என்று பெயர்பெற்று, அதுவே பின் இருக்கன்குடி மாரியம்மனாக மருவியிதாகச் சொல்லப்படுகிறது. இருக்கன்குடி முத்துமாரியம்மன் கோயில் முறைகேடுகளை விசாரிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,பக்தர்களுக்குரிய வசதிகளை செய்து கொடுக்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார் அதில்,``விருதுநகர் சாத்தூரை அடுத்த இருக்கன்குடியில் அமைந்திருக்கும் முத்துமாரியம்மன் கோயில் பழமையானது. புகழ்பெற்ற இக்கோயிலில் நடைபெறும் ஆடித் திருவிழாவில் லட்சகணக்கான பக்தர்கள் பங்கேற்பர். ஆனால், இங்கு வரும் பக்தர்களுக்குரியப் போதுமான வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. மேலும் அங்கு சட்டத்துக்குப் புறம்பாக பல்வேறு விதிமீறல்கள் நடக்கின்றன.
Also Read: மதுரை: சட்ட விரோதமாக ஆப் மூலம் கடன்! - ஆர்.பி.ஐ ஆளுநர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு
கோயிலில் சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. பாதுகாப்பு அறையைக் கடந்த 4 ஆண்டுகளாகத் திறக்கவில்லை. அங்குள்ள வணிக வளாகம் மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. காவல்துறையின் அவுட்போஸ்டுக்கு கோயில் மின்சாரம்தான் பயன்படுத்தப்படுகிறது. இதனால், கோயிலுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் நடந்த முடி காணிக்கை திருட்டு வழக்கில் உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே, கோயில் நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்குரிய வசதிகளை முறைப்படுத்தி சிறப்பாக செயல்பட கலெக்டர் தலைமையில் குழு அமைக்கவும், இக்குழு ஆலோசித்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் சிரமத்தைப் போக்கி, தேவையான வசதிகளை செய்யவும், கோயில் சொத்துக்களை பாதுகாக்கவும் உத்தரவிட வேண்டும்" என தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர் மனு குறித்து அறநிலையத்துறை கமிஷனர், விருதுநகர் கலெக்டர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும், விசாரணையை வரும் மார்ச் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
source https://www.vikatan.com/government-and-politics/judiciary/madurai-hc-issues-notice-to-virudhunagar-collector-hrce-over-irukkankudi-temple-issue
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக