நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிமண்டலப் பகுதியான மசினகுடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரிவால்டோ என்ற பெயரில் அழைக்கப்படும் ஆண் காட்டு யானை ஒன்று உலவி வருகிறது.பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த யானையின் துதிக்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக லேசான குறைபாட்டுடன் உள்ளது.
பெரும்பாலும் குடியிருப்பு மற்றும் தங்கும் விடுதிகளைச் சுற்றியே வலம் வரும் இந்த யானைக்குத் தனியார் தங்கும் விடுதி உரிமையாளர்கள் சிலர் சட்டவிரோதமாக உணவளித்து வருகின்றனர்.
மேலும், சுற்றுலாப் பயணிகளை கவரும் நோக்கில் இந்த யானைக்கு உணவளித்து தங்கும் விடுதியின் அருகில் வரச் செய்து காட்சிப் பொருளாக பயன்படுத்தி வருகின்றனர்.
மசினகுடியில் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த தனியார் தங்கும் விடுதி வளாகத்தில் உணவுதேடி வந்த எஸ்.ஐ எனும் ஆண் காட்டு யானையின் மீது தீப்பந்தத்தை தூக்கியெறிந்து கொளுத்தினர். இந்த வீடியோ வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. யானையின் இறப்புக்குக் காரணமான 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து 2 நபர்களைக் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள ஒருவரைத் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், ரிவால்டோ யானைக்கும் ஏதேனும் அச்சுறுத்தல் இருக்கலாம் என்ற அடிப்படையில் இந்த யானையை முதுமலையில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்குக் கொண்டுசென்று பராமரிக்க முடிவு செய்துள்ளனர். இதனால், ரிவால்டோ யானையைப் பிடிக்க வனத்துறையினர் களமிறங்கியுள்ளனர்.
ரிவால்டோ யானையைப் பிடிக்கும் முயற்சி குறித்து நம்மிடம் பேசிய முதுமலை அதிகாரிகள்,``வாழைத்தோட்டம் பகுதியில் உலவி வரும் ரிவால்டோவைக் கண்காணித்து வருகிறோம். இந்த யானைக்கு துதிக்கையில் பாதிப்பு இருப்பதால் மிகுந்த கவனத்துடன் அணுக வேண்டி உள்ளது. கும்கி யானைகள் மற்றும் மயக்க ஊசி எதுவும் இல்லாமல் வனத்துறை ஊழியர்களின் உதவியுடன் நடக்கவைத்தே தெப்பக்காடு முகாமுக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம்" என்றனர்.
source https://www.vikatan.com/government-and-politics/environment/forest-department-plans-to-shift-rivaldo-wild-elephant-to-theppakkadu-camp
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக