Ad

சனி, 20 பிப்ரவரி, 2021

சென்னை: மறுமணம்; ரூ.3 லட்சம் சம்பளம் -விவாகரத்தான பெண்கள் டார்கெட்... மோசடி நபர் சிக்கியது எப்படி?

சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த 40 வயது பெண், அடையாறு துணை கமிஷனர் விக்ரமனை 7.9.2020-ல் சந்தித்தார். அவர் அளித்த புகாரில், ``எனக்கு திருமணமாகி 13 வயதில் குழந்தை உள்ளது. கடந்த 9-மாதங்களுக்கு முன் கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுவிட்டேன். பின்னர் மறுமணம் செய்ய விரும்பிய நான், பிரபலமான திருமண இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தேன்.

திருமணம்

ஆன்லைன் பதிவைப் பார்த்து மனோகரன் என்பவர் என்னிடம் போனில் பேசினார். அப்போது அவர், ஆந்திராவில் வசிப்பதாகவும் தானும் விவாகரத்து பெற்றுள்ளதாகவும், மாதம் 3 லட்சம் ரூபாய் சம்பாதிப்பதாகவும் கூறினார். அதை நான் நம்பி அவரை மறுமணம் செய்து கொள்ள சம்மதித்தேன். பின்னர், அவருக்கு செல்போன் உள்ளிட்ட சில பொருள்களை பரிசாக வாங்கிக் கொடுத்தேன். ஆந்திரா செல்வதாகக் கூறிய அவர், செல்போனில் என்னிடம் பேசி வந்தார்.

அப்போது திடீரென ஒருநாள், மனோகரன் என்னிடம் போனில் தனக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். அதை உண்மையென நான் நம்பினேன். பின்னர் மனோகரன், தனக்கு பணம் அவசரமாகத் தேவைப்படுவதாகவும் அதை அனுப்பி வைக்கும்படியும் கூறி வங்கிக் கணக்கை எனக்கு தெரிவித்தார். அவர் தெரிவித்த வங்கி கணக்குக்கு மனோகரன் கேட்ட பணத்தை அனுப்பி வைத்தேன். சுமார் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் அனுப்பி வைத்திருப்பேன். பணத்தை வாங்கிக் கொண்ட பிறகு மனோகரன் என்னிடம் போனில் பேசுவதைத் தவிர்த்தார். அதனால் எனக்கு மனோகரன் மீது சந்தேகம் ஏற்பட்டது.

Also Read: சென்னை: `18 வயதானதும் திருமணம் செய்துகொள்கிறேன்!’ - மாணவியை ஏமாற்றிய காதலன் போக்சோவில் கைது

திருமணம்

அதன்பிறகு மனோகரன் என்னிடம் பேசுவதை முற்றிலுமாக நிறுத்திக் கொண்டார். அவர் குறித்த தகவலும் எனக்குத் தெரியவில்லை. எனவே என்னை மறுமணம் செய்து கொள்வதாகக் கூறியதோடு பணத்தையும் ஏமாற்றிய மனோகரன் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டிருந்தார்.

சைதாப்பேட்டை பெண் கொடுத்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்கும்படி அடையாறு துணை கமிஷனர் விக்ரமன், அடையாறு சைபர் க்ரைம் போலீஸாருக்கும் சைதாப்பேட்டை போலீஸாருக்கும் உத்தரவிட்டார். அதன்பேரில் சைதாப்பேட்டை போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்தனர். மனோகரன் குறித்த தகவலைச் சேகரிக்க அடையாறு சைபர் க்ரைம் போலீஸாரின் உதவியை சைதாப்பேட்டை போலீஸார் நாடினார்.

சைபர் க்ரைம் போலீஸார், புகாரளித்த பெண் கொடுத்த ஆதாரங்கள் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கினர். அப்போது மனோகரன் பயன்படுத்திய செல்போன் நம்பர், அவர் கொடுத்த வங்கி விவரங்கள் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீஸாருக்கு அதிர்ச்சித் தகவல்கள் காத்திருந்தது. சைதாப்பேட்டை பெண்ணை மறுமணம் செய்து கொள்வதாகக் கூறிய மனோகரன், ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் பதுங்கியிருப்பதைக் கண்டறிந்த சைபர் க்ரைம் போலீஸார், அவரைப் பிடிக்க நடவடிக்கை எடுத்தனர். சைதாப்பேட்டை போலீஸார், ஆந்திரா சென்று மனோகரனை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவரிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இணையதளம்

இதுகுறித்து சைதாப்பேட்டை போலீஸார் கூறுகையில், ``சைதாப்பேட்டை பெண் அளித்த தகவலின்படி சைபர் க்ரைம் போலீஸார் மனோகரன் குறித்த தகவல்களை எங்களுக்குத் தெரிவித்தனர். அதன்படி மனோகரனை ஆந்திராவுக்குச் சென்று பிடித்து சென்னை அழைத்து வந்தோம். அவரிடம் விசாரித்தபோது, மனோகரன், மறுமணம் செய்ய விரும்பும் பெண்களைக் குறி வைத்து மோசடி செய்தது தெரியவந்தது. சைதாப்பேட்டை பெண் கொடுத்த புகாரின்படி மனோகரன் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.

விசாரணையில், குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்க மனோகரன் திட்டமிட்டது தெரியவந்தது. அதற்காக மறுமணம் செய்து கொள்ள விருப்பமுள்ள பெண்களின் விவரங்களை திருமண இணையதளங்களிலிருந்து மனோகரன் சேகரித்திருக்கிறார். சைதாப்பேட்டையைச் சேர்ந்த பெண், பதிவு செய்திருந்த விவரங்களை இணையதளத்திலிருந்து சேகரித்த மனோகரன், தனக்கு திருமணமாகி விவாகரத்தாகிவிட்டதாகவும் மாதம் 3 லட்சம் ரூபாய் வரை சம்பாதிப்பதாகவும் கூறியிருக்கிறார். மனோகரனின் பேச்சை உண்மையென அந்தப் பெண்ணும் நம்பியிருக்கிறார்.

திருமணம்

இதையடுத்து இருவரும் நேரில் சந்தித்து பேசியிருக்கின்றனர். அப்போது மனோகரன், தன்னைப் பெரும் பணக்காரன் போல அந்தப் பெண்ணிடம் காண்பித்திருக்கிறார். இந்தச் சமயத்தில்தான் மனோகரன் தனக்கு விபத்து ஏற்பட்டதாகக் கூறி அந்தப் பெண்ணிடமிருந்து பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக வாங்கியிருக்கிறார். மனோகரன் கேட்கும் போதெல்லாம் அந்தப் பெண், அவர் குறிப்பிட்ட வங்கி கணக்குக்குப் பணத்தை அனுப்பி வைத்திருக்கிறார். மறுமணம் செய்ய விரும்பும் பெண்களிடம் அன்பாக பேசும் மனோகரன், அவர்களை நம்ப வைக்க அன்பு பரிசைக் கொடுத்து ஆச்சர்யப்படுத்துவார். அதன்பிறகுதான் விபத்து அல்லது வேறு ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி பணத்தை வாங்கி மோசடி செய்திருக்கிறார்.

ஆந்திர மாநிலம், சித்தூரில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் மனோகரன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். குறுகிய வழியில் பணத்தைச் சம்பாதிக்கத் திட்டமிட்ட மனோகரன், மறுமணம் செய்வதாகக் கூறி பணத்தை ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. சைதாப்பேட்டை பெண் அளித்த புகாரின் அடிப்படையில் மனோகரனைக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறோம். மனோகரனால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.



source https://www.vikatan.com/news/crime/man-arrested-for-cheating-women-of-remarriage

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக