Ad

ஞாயிறு, 15 நவம்பர், 2020

விவசாயி முதல் ஸ்டெர்லைட் விவகாரம் வரை ; எடப்பாடி Vs ஸ்டாலின்...யாருடைய வாதம் மக்களிடம் எடுபடுகிறது?

'பச்சைப்பொய் சொல்கிறார், உளறுகிறார், நாவடக்கம் தேவை, எத்தர், போலி விவசாயி!' என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது வார்த்தைகளால் வசை பாடுகிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். பதிலுக்கு பழனிசாமியும் 'வேலை வெட்டி இல்லாதவர், 'விரக்தியின் விளிம்பில் இருக்கிறார், விவசாயி சான்றிதழை எனக்கு ஸ்டாலின் தர வேண்டியதில்லை' என்று சரமாரியாக போட்டுத் தாக்குகிறார்.

எடப்பாடி பழனிசாமி - ஸ்டாலின்

ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி இடையிலான இந்த வார்த்தைப் போர் அரசியலில், 'யாருடைய வாதம் தமிழக மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது' என்ற கேள்வியை அரசியல் விமர்சகரான கணபதியிடம் கேட்டபோது,

''பொதுவாக எந்தக் கட்சி ஆட்சிப் பொறுப்பில் இருந்துவந்தாலும் அந்தக் கட்சி மீது மக்களுக்கு அதிருப்தி நிலவும். அந்தவகையில், கடந்த 10 ஆண்டுகளாகவே அ.தி.மு.க ஆட்சிப் பொறுப்பில் இருந்துவருவதால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் குறித்து என்ன விமர்சனம் வைத்தாலும் அது மக்களிடையே பெரிதாக எடுபட வாய்ப்பில்லை

அடுத்து, ஆளுங்கட்சி என்ன நடவடிக்கை எடுத்தாலும் எதிர்க்கட்சி அதை விமர்சனம் செய்யத்தான் செய்யும். உதாரணமாக, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த காவல்துறை கடுமை காட்டினால், 'மக்களை வதைக்கிறார்கள்' என்று எதிர்க்கட்சி குரல் எழுப்பும். அதுவே, கெடுபிடிகளைத் தளர்த்தினால், 'கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டனர்' என்ற விமர்சனமும் பாயும். ஆக, எப்படிப் பார்த்தாலும் ஆளுங்கட்சிக்கு சிக்கல்தான். அந்தவகையில், எதிர்க்கட்சியான தி.மு.க முன்வைக்கிற வாதங்கள் அனைத்துமே மக்களிடம் எளிதாக எடுபட்டுவிடும் என்பது என் கணிப்பு. கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயேகூட, தி.மு.க கூட்டணிக்கு கிடைத்த இமாலய வெற்றி என்பது, ஸ்டாலின் தலைமைக்குக் கிடைத்த வெற்றிதான்.

எடப்பாடி பழனிசாமி - ஸ்டாலின்

'ஜெயலலிதா போன்ற உறுதிமிக்கத் தலைமை அ.தி.மு.க-வில் தற்போது இல்லை தற்போதைய அ.தி.மு.க அரசு, மத்திய பா.ஜ.க அரசின் அடிமை அரசாக இருக்கிறது' என்ற வாதம் ஏற்கெனவே மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. இந்த நிலையில், பா.ஜ.க வேல் யாத்திரை விஷயத்தில், தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்காமல் இருப்பது இந்த வாதத்தை மேலும் மக்களிடையே உறுதிப்படுத்தத்தான் செய்யும்.

பள்ளிக் கல்வித்துறை விஷயத்திலும் இந்த வருடத்தில் 10-ம் வகுப்பு தேர்வு அறிவிப்பிலிருந்து, தற்போதைய பள்ளிக்கூட திறப்பு அறிவிப்புவரை அனைத்தையுமே அவசரமாக அறிவித்துவிட்டு, தடாலடியாக பின்வாங்கியும் விட்டார்கள். இந்த நிலையில், தன்னை சக்தி மிக்கத் தலைவராக காட்டிக்கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'முதல்வர் வேட்பாளர்' என்று அறிவிக்கிறார்.... ஸ்டாலினுக்கு தொடர்ச்சியாக பதிலடியும் கொடுத்துவருகிறார். ஆனாலும்கூட அவர் ஆளுங்கட்சித் தரப்பிலான தலைவர் என்பதால், மக்கள் மத்தியில் அவருடைய வாதங்கள் எடுபடாது என்பதே என் கணிப்பு'' என்றார் அவர்.

கணபதி - ரவீந்திரன் துரைசாமி

இதையடுத்து முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இடையிலான மோதல் அரசியலில், தமிழக மக்களிடம் செல்வாக்கு பெறுபவர் யார்... என்ற கேள்விக்கு பதில் கேட்டு அரசியல் விமர்சகர் ரவீந்திரனிடம் பேசினோம்.

''தற்போதைக்கு மக்கள் வெறும் பார்வையாளர்களாகத்தான் இருந்து வருகிறார்கள். மற்றபடி இவர்கள் இருவரது அரசியலும் அவர்களிடம் எடுபடுகிறதா, இல்லையா என்பதை அவர்கள் வாக்களிக்கும்போதுதான் தெரியவரும். ஏனெனில், மக்கள் தங்கள் முடிவைச் சொல்வதற்கு இன்னும் பல நிகழ்வுகளும் தரவுகளும் தேவைப்படுகின்றன.

Also Read: `துப்பாக்கி முனையில் ரௌடி ஜானி கைது!’ - பெங்களூருவில் மடக்கியது வேலூர் தனிப்படை

எடப்பாடி பழனிசாமி, தமிழக முதல்வராக பொறுப்பேற்றபோது, 'இவர் நிலையான ஆட்சியைத் தருவாரா...' என்ற சந்தேகம் பரவலாக எழுந்தது. ஆனால், எல்லோருடைய கேள்விகளுக்கும் தெளிவான பதிலைத் தரும் விதமாக கடந்த 4 ஆண்டுகளாக நிலையான ஆட்சியைக் கொடுத்து தன்னை நிரூபித்துவிட்டார் அவர். அடுத்ததாக இப்போது, ஜெயலலிதா, கருணாநிதி போன்று பெரிய தலைவராகும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு வருகிறார். தன்னுடைய ராஜதந்திர நடவடிக்கைகளால், அரசியலில் ஒவ்வொரு அடியாக அளந்து எடுத்துவைக்கிறார்.
அதேசமயம் ஸ்டாலினும் தன்னுடைய தனிப்பட்ட வியூகத்தில், 'மோடி எதிர்ப்பு - எடப்பாடி எதிர்ப்பு - ராமதாஸ் எதிர்ப்பு' என தெளிவான பார்வையோடு கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தன்னுடைய அணியைக் கட்டமைத்து, வெற்றியும் பெற்றிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி - ஸ்டாலின்

அதாவது கருணாநிதி தலைவராக இருந்த காலத்திலேயே கடந்த 4 முறையும் நாடாளுமன்றத் தேர்தலில், தி.மு.க-வினால் 20 இடங்களுக்கு மேல் வெல்ல முடியவில்லை. காரணம் பா.ம.க-வைக் கண்டு பயந்தார் அவர். ஆனால், ஸ்டாலின், காமராஜர் வழியில் வன்னிய வாக்குகளைக் கவரத் துணிந்து செயல்பட்டார். அதனால்தான் தி.மு.க 24 இடங்களை வென்று சாதனை படைத்திருக்கிறது. குறிப்பாக பா.ம.க-வை எப்படிக் கையாளவேண்டும் அதன் எதிர்ப்பு ஓட்டுகளை எப்படித் தன்வசப்படுத்த வேண்டும் என்ற அரசியல் வியூகங்களில், கருணாநிதி, ஜெயலலிதாவை எல்லாம் மிஞ்சிவிட்டார் ஸ்டாலின்.
ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி என இருவருமே தங்களை விவசாயிகளுக்கு ஆதரவானவர்களாக காட்டிக்கொள்ள பல்வேறு முயற்சிகளை செய்துவருகின்றனர். இதில், எடப்பாடி இயல்பான விவசாயியாக இருக்கிறார்! இவர்கள் இருவரில் யாருடைய அரசியல் எடுபட்டிருக்கிறது என்ற க்ளைமாக்ஸ்... தேர்தல் நேரத்தில்தான் தெரியவரும்!'' என்கிறார்.

எடப்பாடி Vs ஸ்டாலின்... இதில் யாருடைய வாதம் மக்களிடம் எடுபடுகிறது? உங்கள் கருத்துகளை கமெண்டில் பகிர்க மக்களே...!


source https://www.vikatan.com/government-and-politics/politics/edappadi-vs-stalin-whose-argument-is-accept-by-tn-peoples

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக