விவசாயம் செய்யணும்ங்கிறது நிறைய பேருக்குள்ள ஆசை. சில வருஷத்துக்கு முன்ன, `விவசாயம் செய்யணும்'ங்கிற ஏக்கம் பெரும்பாலான நகரவாசிகள் மனசுல ஆழமா வேரூன்றி இருந்துச்சு. `விவசாயம் செய்யச் சொந்த நிலம் வேண்டுமே என்ன செய்றது?'ங்கிற கேள்வியோட பல பேர்... `நமக்குக் கிராமத்தில ஏக்கர் கணக்குல நிலம் இருந்தும், நகரத்தில விவசாயம் செய்ய முடியலையே'ங்கிற ஏக்கத்தில சில பேருன்னு... வாழ்க்கை வண்டி ஓடிகிட்டு இருந்துச்சு.
`கவலைப்படாதீங்கப்பா... உங்களுக்கு விவசாயம்தான செய்யணும். காய்கறி, பழங்களை விளைய வைக்கணும். அவ்வளவுதான செஞ்சுட்டாப் போச்சு'னு இவங்க எல்லோருடைய கனவையும் நனவாக்குச்சு வீட்டுல விவசாயம் செய்ற வீட்டுத்தோட்டம் முறை. வீடுகள்ல பயிர்களை வளர்ப்பது நம்ம ஊருக்குப் புதுசு இல்லை. 30 வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் பெரும்பாலான வீடுகள்ல தோட்டம் இருந்துச்சு. `வாழை, கறிவேப்பிலை, மா, கொய்யா, மாதுளை, எலுமிச்சை'னு ஏதாவது ஒரு பயிர் வீட்டுக்கு முன்னாடியோ, புழக்கடையிலயோ நிச்சயம் இருக்கும். இன்னிக்கு லட்சக்கணக்குல செலவு பண்ணி, கல்தூண், கம்பிகள் அமைச்சு செய்ற பந்தல் விவசாயத்தைக் கூரை மேலயே செஞ்சுப் பார்த்தவன் தமிழன். அந்தந்த சீஸனுக்கு தகுந்த காய்கறி செடிக வீட்டுக்கு நாலு இருக்கும். கிராமத்துல மட்டுமல்ல... டவுன்லயும் வீடுகள்ல தென்னை மரம், பப்பாளி, மா மரங்களை நட்டு வெச்சு வளர்த்தாங்க. அப்ப தனித்தனி வீடுகளா இருந்துச்சு. அது சாத்தியாமாச்சு. மக்கள் தொகை பெருகப் பெருக புலிக்கூண்டு மாதிரி இருந்த வீடுக, எலிக்கூண்டு மாதிரி ஆகிப்போச்சு. அடுக்குமாடி வீடுகள் அதிகமாச்சு. சூழலுக்கு ஏத்த மாதிரிதான வாழணும்.
வாழ்க்கை அமைதியான நீரோட்டமா போயிட்டு இருக்கும்போது, ரொம்ப நேரம் கிடைச்சது. வீட்டுல செடி, கொடிகளை வளர்க்க முடிஞ்சது. ஒரு கட்டத்துல வெள்ளம் வந்த ஆறு கணக்கா ஆகிப்போச்சு வாழ்க்கை. ஏன் ஓடுறோம், எதுக்கு ஓடுறோம்னு தெரியாமயே ஓட ஆரம்பிச்சுட்டாங்க. அன்னைக்கு பொழப்ப பாக்கவே நேரம் இல்லை... இதுல செடி, கொடியை எங்க பார்க்குறது'னு வெள்ளத்துல விழுந்த இலை மாதிரி தண்ணி போற போக்குல போகப் பழகிட்டோம். அதுனால பல வீடுகள்ல பயிர்களே இல்லாமப்போயிடுச்சு. நாட்டு மாட்டு காம்புல பால் குடிச்சவங்க, பாக்கெட் பால் குடிக்க பழகிட்டாங்க. டவுன்ல மட்டும் இல்லை. கிராமங்கள்லயும் இந்தப் பழக்கம் குறைய ஆரம்பிச்சது. ஒண்ணு வேலைக்காக ரொம்ப பேர் டவுனுக்கு வந்துட்டாங்க. இன்னொன்னு கிராமங்கள்லயும் டவுன் மாதிரி காலி இடமே இல்லாம வீடுகளைக் கட்ட ஆரம்பிச்சாங்க. அதுனால கழுதை தேஞ்சு கட்டெறும்பு ஆனக் கதையாகிப் போச்சு. ஆனால், அந்த வேகமான உலகத்துலயும் செடி, கொடிகளை விடாம பராமரிச்சாங்க சில பேர். 90-களுக்கு மேல ஓட ஆரம்பிச்சவங்க, ஓடிகிட்டே இருந்தாங்க. 10 வருஷம் ஆச்சு. அப்பதான் அதுல சில பேர் யோசிக்க ஆரம்பிச்சாங்க.
`ஆமா, நாம எதுக்கு இப்படி ஓடிக்கிட்டே இருக்கோம்'னு யோசிக்கும்போது, அவங்களுக்குள்ள ஒரு அலுப்பு உருவாச்சு. அப்பத்தான் எதை எதை விட்டுட்டு ஓடிட்டு இருக்கோம்னு யோசிச்சாங்க. மறந்துப்போன பல பழக்க வழக்கங்கள் மேல கவனம் திரும்புச்சு. அதுல வீட்டுல பயிர் வளர்க்குறதும் ஒன்னு. 2000-ம் வருஷத்துக்குப் பிறகு, சில பேர் வீட்டுத்தோட்ட விவசாயியா மாறுனாங்க. ஆனா, அவங்களுக்கு காலி இடம் இல்லை. `பரவாயில்லை. நிலத்துல இல்லைன்னா... என்ன... மொட்டை மாடி சும்மாதான இருக்கு. அங்க செடிகளை நட்டுப் பார்ப்போம்'னு ஆரம்பிச்சாங்க.
நம்ம ஆளுங்களுக்கு ஒரு பழக்கம் இருக்கு. வழக்கமான ஒண்ணையே வித்தியாசமா செஞ்சா, அதுக்கு மேல ஆர்வம் வந்திடும். வீட்டுத்தோட்டத்திலயும் அதுதான் நடந்துச்சு. வீட்டுக்கு முன்பக்கம், புழக்கடை பகுதியில காலியாக இருந்த இடங்கள்ல செடி, கொடிகளை வளர்த்து பழக்கப்பட்டவங்களை ஈர்த்துச்சு, மாடித்தோட்டம். `ஆகா, இதைத்தான எதிர்பார்த்தோம். இனிமே பயிர் செய்ய நிலம் தேவையில்ல. நம்ம வீட்டு மொட்டைமாடியேப் போதும்' ங்கிற எண்ணம் பலருக்குள்ள ஆர்வத்தை விதைச்சது. அங்கொன்னும் இங்கொன்னுமா மாடித்தோட்ட விவசாயிகள் உருவாக ஆரம்பிச்சாங்க.
அதுநாள் வரையில தரையில விளைஞ்ச வாழை, முருங்கை மரங்க, மாடியில வளர்றதை ஆச்சர்யமா பார்த்தவங்க, `நாமளும் செஞ்சுப் பார்க்கலாமே'னு களத்துல இறங்கிட்டாங்க. மக்கள் ஆர்வம் அதிகமாக அதிகமாகத் மாடித்தோட்டம் முறை பரவ ஆரம்பிச்சது. 2010-ம் வருஷத்துக்கு மேல ரொம்ப வீடுகள்ல மாடித்தோட்டம் வந்திடுச்சு. ஆரம்பத்துல, பழைய சிமென்ட் சாக்கு, தகர டப்பா, பிளாஸ்டிக் டப்பாக்கள்லதான் மாடித்தோட்டத்துல பயிர்களை விளைய வெச்சாங்க. மாற்றம் ஒன்றுதானே மாறாதது. அதன்படி அதுல சின்னச் சின்ன மாற்றங்கள் பண்ணிப் பார்க்க ஆரம்பிச்சாங்க. சிமென்ட் தொட்டி, கூடைகள், உபயோகமில்லாத பழைய பொருள்கள்'னு செடி வளர்ற மீடியம் மாறுச்சு. இப்படி பல ஆராய்ச்சிகள் ஒவ்வொரு மாடித்தோட்டதிலயும் நடந்துகிட்டே இருந்துச்சு. அங்க வீட்டுக்காரங்கதான் விஞ்ஞானிகள். மரக்கட்டை, குழாய், பழைய ஷூ இப்படி பலகட்ட ஆராய்ச்சிகள் முனைப்பா நடந்துகிட்டு இருந்த நேரத்துலதான் `குரோபேக்'ங்கிற பேர்ல பச்சைக்கலர் பை அறிமுகமாச்சு.
அதுவரைக்கும் ஆமை வேகத்துல போயிட்டு இருந்த மாடித்தோட்ட விவசாயம், முயல் வேகம் எடுத்துடுச்சு. `இது ஈசியா இருக்கே'னு சோதனை முயற்சியில ரொம்ப பேர் இறங்குனாங்க. `மொட்டை மாடியில மட்டும்தான் செடிகளை வளர்க்கணுமா என்ன? இந்தக் காம்பவுன்ட் சுவர், பால்கனி, ஜன்னல்னு வளர்த்தா ஆகாதா?'னு `பெட்ரமாக்ஸ் லைட்டேதான் வேணுமா?'னு கவுண்டமணி கேக்குற மாதிரி யோசிக்க ஆரம்பிச்சாங்க. எங்க எங்க கொஞ்ச இடமும், சூரிய ஒளியும் கிடைக்குதோ அங்கயெல்லாம் செடிகளை வெச்சு வளர்த்தாங்க. அதுங்களும் நல்லா வளர்ந்தன. இப்படி மாடித்தோட்ட விவசாயம் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமா வளர்ந்துகிட்டு இருக்கும்போதுதான் அழையா விருந்தாளியா வந்துச்சு உலகத்தையே அலற வெச்சுகிட்டு இருக்க கொரோனா.
உலகமே வீட்டுக்குள்ள முடங்கிப்போச்சு. ஊரடங்குனு வீட்டுலயே சிறை வெச்சுடுச்சு காலம். அத்தியாவசிய பொருளை வாங்கக்கூட வெளியே போக முடியல. மொத்தமா காய்கறிகளை வாங்கிட்டு வந்து வீட்டுல இருப்பு வெச்சுக்கலாம்னு ஒருநாள் எல்லோரும் சந்தைகள்ல கூடுனாங்க. அதுவரைக்கும் கொஞ்சம் விலகி நின்ன, கொரோனா கூட்டத்தைப் பார்த்ததும் பேயாட்டம் ஆடிட்டுப் போயிட்டுச்சு. அப்பத்தான் தற்சார்பு பற்றி யோசிக்க ஆரம்பிச்சாங்க நம்ம ஆளுங்க.
`காய்கறி வாங்கப் போய் கொரோனா வாங்கிட்டு வந்துட்டோமே... நம்ம வீட்டுல நாலு செடி இருந்தா, இந்த இம்சை தேவையில்லையே'னு யோசிக்க ஆரம்பிச்சாங்க. புத்தருக்குப் போதிமரம் ஞானத்தைக் கொடுத்த மாதிரி, கொரோனாவும் லாக்டௌனும் ரொம்ப பேருக்கு ஞானத்தைக் கொடுத்திச்சு. `நீங்க ஓடுனது போதும்... ஓனரா இருந்தாலும் ஓரமா உக்காரு'னு கொரோனா சொன்னது பலபேரை அசைச்சு பார்த்திடுச்சு. எதையுமே சகஜமா எடுத்திக்கிற மிஸ்டர் பொது ஜனங்கள்ல பலபேர், இயற்கை நமக்குக் கொடுத்திருக்க ஓய்வுதான் இந்தக் கொரோனா'னு `பாசிடிவ்'(!)வா எடுத்துக்க ஆரம்பிச்சுட்டாங்க.
ஊரடங்கு நேரத்தை வீணாக்காம என்ன செய்யலாம்னு யோசிச்சப்ப பலபேருக்கும் தோணுனது வீட்டுத்தோட்டம் அமைக்கிறதுதான். சினிமாக்காரங்க, அரசியல்வாதிங்க, தொழிலதிபர்கள்னு வி.வி.ஐ.பிக்கள்ல இருந்து சாமானியர்கள் வரைக்கும் வீட்டுத்தோட்டம் அமைக்குற வேலையில இறங்கிட்டாங்க. `தோட்டம் போட்டாச்சு. இன்னும் என்ன செய்றது. பொழுதுபோகணுமே'னு அவங்க தோட்டத்தை, தோட்ட அனுபவத்தைச் சமூக வலைதளங்கள்ல பெருமையோட பகிர்ந்துகிட்டாங்க. ஒரு கட்டத்துல இது பேஷனாகிப் போச்சு. அறிவிக்கப்படாத ஒரு இயக்கமாகவே வீட்டுத்தோட்டம் அமைக்குற எண்ணம் உருவாகிடுச்சு. வழக்கத்தைவிட, கொரோனா காலத்திலதான் அதிகமான வீட்டுத்தோட்டங்கள் உருவாகியிருக்கு. வீட்டுத்தோட்டம் அமைக்குறதுல இப்ப குட்டீஸ்களும் ஆர்வமா ஈடுபடுறாங்க. இத்தனை மாற்றங்களுக்குப் பிறகு, இன்னிக்கு காய்கறி, கீரைகளா வீட்டுக்கு வீடு சிரிக்குது விவசாயம்.
இந்த நிலையில வீட்டுத்தோட்டம் அமைக்குறதுல ஆரம்பநிலையில இருக்காங்க பல பேர். ரொம்ப பேர் ஆர்வத்தோட இருக்காங்க. அவர்களுக்காகவும், ஏற்கெனவே வீட்டுத்தோட்டம் அமைச்சு, பராமரிச்சுட்டு வர்றவங்களுக்கும் சில ஆலோசனைகளைச் சொல்றதுக்குதான் இந்தத் தொடர். குறிப்பா, என்ன செய்யணும்ங்கிறதை விட, எதைச் செய்யக் கூடாதுனு தெரிஞ்சுக்குறதுலதான் வெற்றி இருக்குன்னு சொல்லுவாங்க. அந்த வகையில வீட்டுத்தோட்டத்துல செய்ய வேண்டியவதைவிட, செய்யக் கூடாதது என்னென்ன?னு இந்தத் தொடர் சொல்லும்.
விவசாயத்துறை விஞ்ஞானிகள், தோட்டக்கலைத்துறை பேராசிரியர்கள், இயற்கை விவசாயிகள், அரசு அலுவலர்கள், பூச்சியியல் வல்லுநர்கள், நீர் மேலாண்மை வல்லுநர்கள், இயற்கை விவசாயிகள், முன்னோடி வீட்டுத்தோட்ட விவசாயிகள்'னு பல தரப்புல இருந்தும், அவங்க கருத்துகள், அனுபவங்களைப் பகிர்ந்துக்கப் போறாங்க. `அனுபவமே சிறந்த ஆசான்'னு சொல்லுவாங்க. அந்த விதத்தில இவர்களோட அனுபவம் உங்களுக்கு வழிகாட்டும்னு நம்புறோம். தொடரை வாசிக்கும்போது உங்களுக்கு ஏதாவது சந்தேகம், கேள்விகள் தோன்றும். அதைக் கீழே கமென்ட் பண்ணுங்க... விளக்கம் உங்களைத் தேடி வந்திடும். விளக்கம் போதும்னு நினைக்குறேன். விஷயத்துக்குள்ள போயிடுவோம்.
வீட்டுத்தோட்டம் அமைக்கும்போது எப்படி அமைக்கணும். எதுல கவனமா இருக்கணும்னு அடுத்த பதிவுல பார்ப்போம். என்ன ஆரம்பிக்கலாங்களா?
இனி வாரந்தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் `வீட்டுக்குள் விவசாயம் - DIYTerraceGarden' தொடர் விகடன் இணையதளத்தில் வெளிவரவுள்ளது. தொடர்ந்து இணைந்திருங்கள்..!
- வளரும்
source https://www.vikatan.com/news/agriculture/a-new-digital-series-on-guidance-to-set-up-home-garden-and-terrace-garden
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக