தீபாவளி அன்று தங்கள் குடும்பத்தை மறந்து மக்களை காக்க கடமையாற்றி உயிர் விட்ட தீயணப்பு வீரர்களை நினைத்து கண்ணீர் விடுகிறார்கள் மதுரை மக்கள். அதே நேரம் இதுபோன்ற சம்பவங்கள் நடக்க காரணமான விதி மீறிய கட்டடங்களை செயல்பட அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் புகாரும் எழுப்பி வருகிறார்கள்.
துணிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தை அணைக்க சென்ற சிவராஜன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கட்டடம் இடிந்து விழுந்து மரணமடைந்தும், கல்யாணகுமார், சின்னகருப்பு ஆகியோர் பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சையில் உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
என்ன நடந்தது...?
மதுரையில் தீபாவளியை முன்னிட்டு நள்ளிரவு வியாபாரம் தீவிரமாக நடந்து கொண்டிருந்த 13-ம் தேதி இரவில் தெற்குமாசி வீதி விளக்கத்தூன் அருகில் நவபத்கானா தெருவில் பாபுலால் என்பவருக்கு சொந்தமான சஞ்சய் டெக்ஸ்டைல்ஸ் என்ற துணிக்கடையை அடைத்து விட்டு சென்ற சிறிது நேரத்தில் அக்கடையில் தீப்பிடித்துள்ளது. இதை கவனித்த அருகிலுள்ள கடைக்காரர்கள் தீயணைப்பு துறைக்கு போன் செய்தார்கள்.
அதற்குள் அந்த துணிக்கடை யாரும் அருகில் நெருங்கி வர முடியாத அளவில் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. அருகிலுள்ள 3 தீயணைப்பு நிலையங்களை சேர்ந்த மீட்புப்படையினர் விரைந்து வந்து தீயை அணைக்க முயற்சித்தனர்.
தீயை அணைக்க தீவிரமாக செயல்பட்ட சிவராஜன், கல்யாணகுமார், கிருஷ்ணமூர்த்தி, சின்னக்கருப்பு ஆகியோர் கட்டடத்துக்குள் சிக்கிக் கொண்டனர். உள்ளே மாட்டிக்கொண்டதை சிவராஜன் சக ஊழியர்களுக்கு போன் செய்து தெரிவித்துள்ளார். ஆனாலும் அவர்களை மீட்க உடனே உள்ளே செல்ல முடியாத அளவில் தீ எரிந்து கொண்டிருந்தது. கட்டடத்தின் முதல் தளமும் இடிந்து விழுந்து கொண்டிருந்தது. ஒருவழியாக இடிபாடுகளில் சிக்கிய கல்யாணகுமார், சின்னக்கருப்பை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிறந்தநாளில் சோகம்
அதிகாலை நேரத்தில் உள்ளே இறந்துகிடந்த வீரர்கள் சிவராஜன், கிருஷ்ணமூர்த்தி உடல்களை மீட்டனர். தீயை அணைக்க உயிரை துச்சமாக நினைத்து செயல்பட்ட இரண்டு இளம் வயது வீரர்கள் பலியானது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. தகவல் தெரிந்து இருவரின் குடும்பத்தினரும் கதறினார்கள். இதில் பலியான திருப்புவனத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்திக்கு அன்றைய தினம் பிறந்த நாள் என்பது கூடுதல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோக சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ 25,00,000-மும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இவர்களுக்கு அஞ்சலில் செலுத்த தீயணைப்புத்துறை இயக்குனர் ஜாபர் சேட் உட்பட அதிகாரிகள், மதுரை கலெக்டர் வந்திருந்தனர். துப்பாக்கி குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி நடந்தது.
''சம்பவம் நடந்த நவபத்கானா தெரு மிகவும் குறுகிய பகுதியாகும், இதில் சிறிய-பெரிய துணிக்கடைகள் அதிகமாக உள்ளன. சென்னை தி.நகர் போல சாதாரண நாட்களிலேயே வந்து செல்லும் ஆயிரக்கணக்கான மக்களால் இப்பகுதி நெருக்கடிக்கு உள்ளாகும். தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் சொல்லவே வேண்டியதில்லை.
சின்ன விபத்து ஏற்பட்டால் கூட ஒதுங்க இடம் இல்லை. இப்பகுதியில் நான்கு மாடிகொண்ட பிரபலமான மிகப்பெரிய துணிக்கடையும் உள்ளது. ஆபத்து காலங்களில் பொதுமக்களை பாதுகாக்க எந்த ஏற்பாடும் இல்லாத நிலையில் புதிது புதிதாக துணிக்கடைகள் திறக்க அதிகாரிகள் அனுமதி கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.'' என்று பொதுமக்கள் கூறுகிறார்கள்.
மதுரையில் விதிகளை மீறிய கட்டடங்கள் கட்ட அனுமதிக்க கூடாது, கட்டியவைகளை அகற்ற வேண்டும் என்று சட்டப்போராட்டம் நடத்தி வரும் வழக்கறிஞர் அன்புநிதியிடம் பேசினோம், ''மதுரையில் கட்டப்பட்டுள்ள பெரும் வணிக வளாகங்கள், மற்றும் நிறுவன கட்டடங்களில் பெரும்பாலானவை விதி மீறப்பட்டு கட்டப்பட்டுள்ளன. இவைகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய நகர் ஊரமைப்புத்துறையும், மாநகராட்சி நிர்வாகமும் பெயருக்கு ஒரு நோட்டீசை மட்டும் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கிவிட்டு, அதன் பின்பு அந்த விதி மீறல் கட்டடத்திற்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு மற்றும் கழிவுநீர் செல்லும் வசதிகளை லஞ்சம் வாங்கிவிட்டு மாநகராட்சி அதிகாரிகள் அனுமதிக்கிறார்கள்.
இதுபோன்ற விதி மீறல் கட்டடங்கள் 100-க்கும் மேல் உள்ளது. அனுமதி அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது சம்பந்தமாக நான் ஏற்கனவே தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் உள்ளது. இரண்டு வீரர்கள் பலியாக காரணமான அந்த துணிக்கடைக்கு முறையான அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா, நெருக்கடியான அப்பகுதியில் உள்ள மற்ற கடைகளில் பாதுகாப்பு வசதிகள் உள்ளதா என்பதை அதிகாரிகள் நேர்மையாக விசாரிக்க வேண்டும், அப்போதுதான் இதுபோன்ற மோசமான சம்பவங்கள் இனி நிகழாது'' என்றார்.
மின்கசிவால் தீவிபத்து ஏற்பட்டுள்ளது என்று காவல்துறை வட்டாரத்தில் தெரிவித்தாலும், விதி மீறல்களை கண்டுகொள்ளாத அதிகாரிகள்தான் இதற்கு முக்கிய காரணம் என்கிறார்கள் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும். இது குறித்து நேர்மையான தீவிர விசாரணையை தமிழக அரசு நடத்த வேண்டும் என்பதே மதுரை மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
source https://www.vikatan.com/news/accident/fire-accident-in-madurai-on-diwali-festival-day
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக