Ad

புதன், 18 நவம்பர், 2020

ரவி வர்மா ரெஃபரன்ஸ், சில்க் காட்டன் மெட்டீரியல்... `மூக்குத்தி அம்மன்' நயன் காஸ்ட்யூம் சீக்ரெட்ஸ்!

திரையில் ஆண் நடிகர்களுக்கு இணையாக நடிப்பில் கெத்து காட்டுபவர் நயன்தாரா. எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும், அந்த கேரக்டராகவே வாழ்பவர். அழகில் மட்டுமன்றி, வேலையில் டெடிகேஷன், தைரியம் ஆகியவை நயன்தாராவை தமிழ்த் திரையுலகில் அடுத்தடுத்த உயரங்களுக்குக் கூட்டிச்சென்றன. ஒரு நடிகையாக 17 வருடங்கள் நிலைத்து நிற்க ஆளுமைத்திறன் மட்டுமல்ல விமர்சனங்களைக் கடந்து செல்லும் துணிச்சலும் வேண்டும். தன் மீது ஆயிரம் விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் தன்னுடைய உழைப்பின் மூலம் தான் யார் என்பதை நிரூபித்து வெற்றியைத் தக்கவைத்துக் கொண்டிருப்பவர். ஐயா படத்தில் செல்வியாக அறிமுகமாகி திரையுலகில் நீண்ட பயணம் செய்து மூக்குத்தி அம்மனாக அவதாரம் எடுத்திருக்கும் நயன்தாரா நேற்று தன்னுடைய 36 வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.

நயன்தாரா

அம்மன் என்றாலே நீள முடி, அடர்ந்த புருவம், கோபம் நிறைந்த கண்களைத் தான் இத்தனை நாள்களாகத் திரையுலகம் நமக்குக் காட்டி வந்தது. ஆனால் சாந்தமான முகம், காட்டன் புடவை, சிம்பிளான நகைகள், கொண்டையைச் சுற்றி மல்லிகைப் பூ என மூக்குத்தி அம்மன் படத்தில், அம்மன் கெட்டப்பிற்கு புது உருவம் கொடுத்திருக்கிறார் நயன்தாரா. மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் நயன்தாரா அணிந்திருந்த புடவைகள் சமூகவலைதளங்கள் பலவற்றிலும் டிரெண்ட் ஆகி வருகின்றன.

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் நயன்தாரவுக்கு காஸ்டியூம் டிசைன் செய்த அனுவர்தனை தொடர்பு கொண்டு பேசினோம். "திரைப்படத்தில் அம்மன் கெட்டப் நல்லா இருந்துச்சா. நிறைய விஷயங்களை மாற்றி அமைச்சிருக்கோம். நிறைய மெனக்கெட்டோம்'' ஆர்வத்துடன் பேசுகிறார் அனு.

மூக்குத்தி அம்மன்

"நயன்தாரா எனக்கு பதினஞ்சு வருஷ ஃபிரெண்ட். எந்தச் சூழலையும் பெரிய அலட்டல் இல்லாமல் இயல்பா கடந்து செல்லும் மனப்பக்குவம் உடையவர். அவங்க மனசுக்கு ஒருத்தரை பிடிச்சுப்போச்சுனா அவங்களுக்காக என்ன வேணா பண்ணுவாங்க. ரொம்ப சாஃப்ட் டைப். ஃபேஷன் பற்றி நிறைய விஷயங்கள் தெரிஞ்சவங்க.

பில்லா 2 படத்தில் முதல் முதலாக நயன் எனக்கு அறிமுகம் ஆனாங்க. அதிலிருந்து நிறைய படங்களுக்கு நான் அவங்களுக்கு காஸ்டியூம் டிசைன் செய்திருக்கேன். படங்களுக்கு மட்டுமல்ல ஸ்டேஜ் ஷோ, ஈவென்ட்ஸ்னு வேற நிகழ்ச்சிகளுக்கும் டிரஸ் டிசைன் செய்திருக்கேன்.

நயன்தாரா

அவங்க ரொம்ப தன்னம்பிக்கை உள்ளவங்க. டிசைனர்களோட ஐடியாக்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பாங்க. பெரும்பாலும் கதையில் அவங்க ரோலைக் கேட்டதும், இந்த மாதிரி காஸ்டியூம்ஸ் இருந்தா நல்லா இருக்கும்னு ஒரு ஐடியா வெச்சுருப்பாங்க.

என்கிட்ட அவங்க ஐடியாவையும் சொல்லுவாங்க. நானும் என்னுடைய ஐடியாக்களை பகிர்ந்துப்பேன். ரெண்டு பேருடைய எண்ணங்களும் பெரும்பாலும் ஒரே மாதிரிதான் இருக்கும். அவங்களுக்கு எப்போதும் நீட் அண்ட் சிம்பிள் லுக் ஆடைகள் தான் பிடிக்கும்.

நயன்தாரா

நயன் ஒரு சாரி லவ்வர். ரெண்டு நிமிஷத்தில் சாரி கட்டி முடிச்சுருவாங்க. அதை அழகா கேரி பண்ணுவாங்க. மூக்குத்தி அம்மன் பட வாய்ப்பு வந்ததும், அந்தப் படத்துக்கு ஆடைகள் டிசைன் பண்ணச் சொல்லி என்னைக் கேட்டாங்க. படத்தில், அம்மன் இயல்பான மனிதர்கள்கூடவே வாழற மாதிரி தான் கதைக்களம் இருந்துச்சு

நானும் நிறைய ரெஃப்ரன்ஸ் எடுத்துப் பார்த்தேன். அது எதுவுமே கதைக்களத்துக்குப் பொருத்தமாக இல்லை. ரவிவர்மாவின் ஓவியத்தை ரெஃபரன்ஸ் எடுத்துட்டு நாங்களே ஒரு அவுட் லுக் ரெடி பண்ணோம். டிரையல் பண்ணோம். அது அம்மன் என்பதைத் தாண்டி மகாலட்சுமி அம்சம் பொருந்துன தோற்றத்தையும் நயனுக்கு கொடுத்துச்சு. அந்த லுக் நயனுக்கு பிடிச்சுப் போகவே அதையே ஃபிக்ஸ் பண்ணிட்டோம்.

படத்தில் அவங்க கட்டியிருந்த ஒவ்வொரு புடவையும் பட்டுப் புடவை டிசைனில் வடிவமைக்கப்பட்ட சில்க் காட்டன் புடவைகள். ரொம்ப லைட் வெயிட்டா இருக்கும். காஞ்சிபுரம் கைத்தறி நெசவாளர்கள்கிட்ட டிசைன்கள் சொல்லி தனித்துவமா நெய்து வாங்கினோம்.

மூக்குத்தி அம்மன்

நகைகளைப் பொறுத்தவரை டிரெடிஷனலான மெட்டல் நகைகள் அணிந்து பார்த்தோம். ஆனால் அது புடவைகளுக்குப் பொருந்தலை. அதனால் வெள்ளியில் டிசைன் பண்ணினோம்.

ஃப்ரீ ஹேர் ஸ்டைல் லுக் ஒன்றும், ஹை பன் போட்டு மல்லிகைப் பூ ஹேர் ஸ்டைல் ஒன்றுமா ரெண்டு ஹேர்ஸடைல் டிரை பண்ணிருக்கோம். மேக்கப் நயனே பண்ணிப்பாங்க. சொன்னா நம்ப மாட்டீங்க காரில் ஏறி உட்கார்ந்து மேக்கப் பண்ண ஆரம்பிப்பாங்க. ஸ்பாட்டுக்கு வர்றதுக்குள்ள மேக்கப் முடிச்சு, பக்காவா ரெடி ஆகிருவாங்க.

மூக்குத்தி அம்மன்

நயனுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். தினமும் காலையில் பூஜை பண்ணிட்டுதான் வீட்டை விட்டே கிளம்புவாங்க. அம்மன் படத்தில் நடிப்பதற்காக நான்வெஜ் சாப்பிடுவதையெல்லாம் நிறுத்தி விரதம் இருந்தாங்க. அவங்க தன் மேல வெச்சிருக்கும் நம்பிக்கை அவங்களை இன்னும் உயரத்துக்குக் கூட்டிட்டுப் போகுது. விஷ் யூ எ வெரி ஹேப்பி பர்த்டே நயன்" - வாழ்த்தி விடைபெறுகிறார் அனுவர்தன்.



source https://cinema.vikatan.com/tamil-cinema/fashion-designer-anu-vardhan-reveals-how-she-designed-mookuthi-amman-nayanthara-costumes

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக