Ad

புதன், 11 நவம்பர், 2020

நீலகிரி: `வேலைய செஞ்சிட்டோம்.. வருமானம்..?!’ - தோட்ட நிர்வாகங்களுக்கு எதிராக திரண்ட தொழிலாளர்கள்

பல மாதங்களாக ஊதியம் வழங்காத தனியார் தோட்ட நிர்வாகங்களையும், 20 விழுக்காடு போனஸ் தர மறுக்கும் அரசு தோட்ட கழகத்தையும் கண்டித்து ஒருவாரமாக தொழிலாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பணப்பயிரான தேயிலையை நீலகிரியில் ஆங்கிலேயர்கள் அறிமுகம் செய்திருந்தாலும், மாவட்டத்தின் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இன்றைக்கு தேயிலை தொழில் விளங்கி வருகிறது.

தோட்ட தொழிலாளர்களின் போராட்டம்

நீலகிரியில் சுமார் 55 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் தோட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இதில் தேயிலையே அதிகளவில் உள்ளது. 50 ஆயிரத்துக்கும் அதிகமான சிறு குறு விவசாயிகள், 100க்கும் அதிகமான தேயிலை தொழிற்சாலைகள், தனியார் மற்றும் அரசு தேயிலை தோட்டங்கள் உள்ளன. இந்த தோட்டங்களில் மாவட்டம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

மழை, பனி, வனவிலங்கு எதிர்கொள்ளகள் என பல சிக்கல்களை எதிர்கொண்டு மலைச்சரிவுகளில் நாள்முழுக்க பணியாற்றும் இந்த தொழிலாளர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியமே இன்னும் எட்டாக்கனியாக இருப்பதாக செயல்பாட்டாளர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

தோட்ட தொழிலாளர்களின் போராட்டம்

கொரோனா காலத்திலும் பணியாற்றி வரும் இந்த மக்களுக்கு கொரோனவை காரணம் காட்டி கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக ஊதியம் முறையாக வழங்கப்படவில்லை. மேலும் போனஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை என கையை விரித்துவிட்டன. [TANTEA] டேன் டீ எனப்படும் தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகமே நீண்ட இழுபறிக்குப்பின் 10 விழுக்காடு போனஸை அறிவித்துள்ளது. இந்த நிலையில் ஊழியர்கள் 20 விழுக்காடு கேட்டு போராடி வருகின்றனர்.

கூடலூரைச் சேர்ந்த தோட்ட பெண் தொழிலாளர் ஒருவர் நம்மிடம் பேசுகையில், "நாள் முழுக்க இலை பறிச்சாலும், முன்னூறு ரூவாய கண்ணுல பாக்க முடியாது. இத்தன நாள் டீக்கு விலை இல்லன்னு சொன்னாங்க. இப்போ நல்ல ரேட்டுக்கு போகுது. ஆனாலும் அஞ்சி மாசமா சம்பளம் தராம இழுத்தடிக்கிறாங்க. அட்டை கடிக்கும் யானைக்கும் பயந்து இலைய பறிச்சி கொண்டாறோம். புள்ளகுட்டிங்கள வச்சிக்கிட்டு என்ன பண்ணுவோமுன்னு தெரியல. இதுல தீவாளி வேற வருது. வேலைய செஞ்சிட்டு ஒரு வருமானமும் கிடைக்காம ஆயிரக்கணக்கான குடும்பம் காத்துக்கிடக்குறோம் என ஆதங்கத்துடன்" தெரிவித்தார்.

தோட்ட தொழிலாளர்களின் போராட்டம்

இந்த விவகாரம் குறித்து கூடலூர் எம்.எல்.ஏ [தி.மு.க] திராவிட மணியிடம் பேசினோம், "எங்களது ஆட்சியில் அரசு தோட்ட தொழிலாளர்களுக்கு 20 சதவிகிதம் தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது. தற்போது தேயிலைக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. தோட்ட தொழிலாளர்களின் உழைப்பால் லாபம் அடைந்த நிர்வாகம் உரிய போனஸை வழங்க மறுக்கிறது. உரிய போனஸ் வழங்க அழுத்தம் கொடுத்து வருகிறோம்" என்றார்.

"தொழிலாளர்கள் 20 சதவிகித போனஸ் கேட்பது குறித்து அரசுக்கு தெரிவித்துள்ளோம்" என டேன் டீ மேலாண்மை இயக்குனர் ஸ்ரீனிவாஸ் ரெட்டி தெரிவித்துள்ளார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/tea-estate-workers-protest-in-nilgiris

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக