Ad

ஞாயிறு, 15 நவம்பர், 2020

``கேன்சர் அப்பவும் கேமராவை விடல!" - கேமரா வுமன் அனிதா சத்யமின் நம்பிக்கை மெசேஜ்

``சில புகைப்படங்களோட தாக்கம், நம்ம உயிர் உள்ளவரை நம்மைத் தாக்கும். அதிலிருந்து வெளிவருவது கடினம். அப்படியான புகைப்படங்களையே எடுக்க விரும்புறேன்'' என்கிறார் சென்னையைச் சேர்ந்த ஆவணப் புகைப்படக்கலைஞர் அனிதா சத்யம்.

Anitha sathiam's clicks

புனேவில் பிறந்து வளர்ந்த அனிதாவுக்கு, அவருடைய புகைப்படக்கலை பிரியத்தை ஊக்கப்படுத்த அவர் அப்பா கொடுத்த திருமணப் பரிசு, கேமரா. அது, அவரை உலகை மூன்றாவது கண் வழியே பார்க்க வைத்தது. இயற்கை, குழந்தைகள், பெண்கள் எனப் புகைப்படங்கள் எடுக்கத் தொடங்கினார். இப்படி பொழுதுபோக்குக்காகக் கையில் கேமராவை எடுத்த அனிதாவின் லென்ஸ் பயணத்தை, வாழ்வில் அவர் சந்தித்த இடி ஒன்று திசை மாற்றியது.

``எளிமையாவும் அமைதியாவும் போயிட்டிருந்துச்சு வாழ்க்கை. உடல்நலக் குறைவால மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டேன். புற்றுநோய்னு டாக்டர் சொன்னாங்க. சிகிச்சை தொடங்கியது. அதுக்கு சில நாள்கள் முன்னர்தான், `365 நாள்கள், 365 புகைப்படங்கள்'னு ஒரு கான்சப்ட்ல போட்டோஸ் எடுக்க ஆரம்பிச்சிருந்தேன்.

Anitha sathiam's clicks

சிகிச்சை தந்த உடல், மன வேதனைகளின்போதெல்லாம், `இதையெல்லாம் முடிச்சிட்டு போய் போட்டோ எடுக்கணும்'னு அதையே என்னை மீட்கிறதுக்கான நம்பிக்கை மருந்தாக்கினேன். மருத்துவமனையில புற்றுநோய் சிகிச்சைக்காகத் தங்கியிருந்த மாதங்களில்கூட புகைப்படங்கள் எடுத்தேன்'' என்பவர்,

``புற்றுநோயைப் பொறுத்தவரை அதை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டுபிடிச்சுட்டா குணப்படுத்திட முடியும். அப்படித்தான் நான் குணமடைந்தேன். புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை என்னோட போட்டோஸ் மூலமா ஏற்படுத்தணும்னு முடிவெடுத்தேன். பல மருத்துவமனைகளுக்கும் சென்று புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களைப் புகைப்படம் எடுக்கத் தொடங்கினேன்'' என்பவருக்கு, இதில் ஒரு சேவை அனுபவமும் கிடைத்திருக்கிறது.

``புற்றுநோயால பாதிக்கப்பட்டவங்களுக்கு அவங்க உடல்நிலையைப் பொறுத்து கீமோ சிகிச்சை பரிந்துரைக்கப்படும். ஒருமுறை கீமோ சிகிச்சை செய்ய சுமார் 30,000 ரூபாய் பணமும், மன உறுதியும் தேவைப்படும். புற்றுநோயால பாதிக்கப்பட்ட பல ஏழை, எளிய மக்கள் கீமோ செய்ய பணம் இல்லாம சிகிச்சையைக் கைவிட்டுடுவாங்க.

அப்படி பணப் பற்றாக்குறை காரணமா சிகிச்சை மேற்கொள்ள முடியாம இருந்த பெண்ணை போட்டோஸ் எடுத்து, அதை என் நண்பர்களுக்கு அனுப்பிவெச்சு சிகிச்சைக்கு உதவி கேட்டேன். பின்னர் அந்தப் பெண்ணின் வாழ்க்கையை புகைப்படங்களா பதிவு செய்து, ஒரு தனியார் தொலைக்காட்சி மூலமா அவங்க மருத்துவ செலவுக்கும், அவங்க குழந்தையின் கல்வி செலவுக்கும் நிரந்தரத் தீர்வை என் புகைப்படங்கள் மூலமா பெற்றுக்கொடுத்தேன்.

அனிதா சத்யம்

இந்த கொரோனா காலத்தில், அந்தப் பெண்கிட்ட நான் பேசின வீடியோ கால்தான் எங்களோட கடைசி உரையாடலா இருக்கும்னு நான் நினைக்கலை. லாக்டௌன் அசௌகர்யங்களால சரியான இடைவேளையில கீமோ சிகிச்சை செய்ய முடியாததால, புற்றுநோய் தீவிரமடைந்து அவங்க உலகிடமிருந்து விடைபெற்றுட்டாங்க'' - கலங்குகிறார் அனிதா சத்யம்.

குலசை தசரா, குஸ்தி, ஜல்லிக்கட்டு எனப் பல முக்கிய நிகழ்வுகளுக்கும் சென்று அவற்றை ஆவணப்படுத்தி வரும் அனிதா, இந்த லாக்டௌன் காலத்திலும் பல இடங்களுக்குச் சென்று புகைப்படங்கள் எடுத்திருக்கிறார். ``என்கிட்ட இருக்கிறதுலேயே நல்ல பழக்கம் என்னனா, `ஒரு போட்டோ எடுத்துப் பாக்கட்டுமா..?'னு யார் என் கேமராவை கேட்டாலும் கொடுத்துடுவேன்.

Anitha Sathiam's album
Anitha Sathiam's album
Anitha Sathiam's album
Anitha Sathiam's album
Anitha Sathiam's album
Anitha Sathiam's album
Anitha Sathiam's album
Anitha Sathiam's album
Anitha Sathiam's album

பல இடங்கள், பல மனிதர்களைச் சந்திச்சிருக்கிற என் கேமரா, வாங்காத அடி இல்லை. நான் படம் எடுக்கப் போற இடத்துல இருக்கிற ஊர்மக்கள், விவசாயிகள், குழந்தைகள்னு எல்லார்கிட்டயும் கேமராவைக் கொடுத்து, போட்டோ எடுத்துப் பார்க்கச் சொல்வேன். அப்போ எனக்குக் கிடைக்கிற சந்தோஷம் வேற மாதிரி இருக்கும்'' என்று பூரிப்புடன் சொன்ன அனிதா சத்யம்,

Anitha sathiam's clicks

Also Read: கொரோனா: `பாதிப்படைந்த தாயை ஜன்னல் வழியே பார்க்கும் மகன்!’ - மனதை உருக்கும் புகைப்படம்

``புகைப்படங்களை ஓர் ஆர்வத்துக்காக எடுக்கிறவங்க, அதையே ஏதாவது ஒரு விஷயத்தில் சமூகத்துக்கு விழிப்புணர்வு கொடுக்கும் கருவியா பயன்படுத்த நினைச்சீங்கனா, உங்க கலைக்கான மரியாதை கூடும். அப்படித்தான் என் கேமரா மூலம் நான் இந்தச் சமூகத்துக்கு என்னாலான உதவிகளைச் செய்யணும்னு நினைக்கிறேன்'' என்கிறார் அக்கறையுடன்.

க்ளிக்குகளால் கிடைக்கட்டும் வெளிச்சம்!

- ஸ்ரீ லோகநாதன் வேல்முருகன்


source https://www.vikatan.com/lifestyle/miscellaneous/woman-photographer-and-cancer-survivor-anitha-sathyam-shares-her-inspirational-story

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக