Ad

ஞாயிறு, 15 நவம்பர், 2020

`ராகுல் காந்தி குறித்து ஒபாமாவின் கருத்து வெறுக்கத்தக்கது!’ - சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்

முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ராகுல் காந்தி குறித்து குறிப்பிடுகையில்,`பதற்றமானவர், பக்குவப்படாமல் இருக்கிறார்!’ என்று தெரிவித்தார். அவரின் அந்த கருத்துக்கு பதிலளித்த சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத், இந்தியாவைப் பற்றிய பராக் ஒபாமாவின் அறிவை கேள்விக்குள்ளாக்கியதோடு, ஒரு வெளிநாட்டு அரசியல்வாதி இந்திய அரசியல் தலைவர்கள் குறித்து இத்தகைய கருத்துக்கள் கூறுவது வெறுக்கத்தக்கது. ட்ரம்பை மோசமாக நாங்கள் சொல்ல மாட்டோம். இந்த தேசத்தைப் பற்றி ஒபாமாவுக்கு எவ்வளவு தெரியும்?" என்று காட்டமாக கேள்வியெழுப்பியுள்ளார்.

அமெரிக்க அதிபராக 2008 முதல் 2016-ம் ஆண்டு வரை பதவி வகித்தவர் பராக் ஒபாமா. அவர், தனது பதவிக் காலத்தில் இரண்டு முறை இந்தியா வந்திருக்கிறார். தற்போது, "எ பிராமிஸ்டு லேண்ட்" என்ற பெயரில் தமது நினைவுகளைப் புத்தகமாக எழுதியிருக்கும் ஒபாமா, அந்தப் புத்தகத்தில் உலகத் தலைவர்கள், அமெரிக்க அதிபர் பதவியில் இருந்தபோது நடந்த சம்பவங்கள், திருமண வாழ்க்கை என பல்வேறு விவகாரங்கள் குறித்து பகிர்ந்திருக்கிறார்.

ஒபாமா

768 பக்கங்கள் கொண்ட ஒபாமா-வின் 'எ பிராமிஸ்டு லேண்ட்' புத்தகம் நவம்பர் 17-ம் தேதி விற்பனைக்கு வர உள்ள நிலையில்., அந்த புத்தகத்தின் விமர்சனக் கட்டுரைகள், ஊடகங்களில் வெளியாகி பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வருகிறது.

ஒபாமாவின் புத்தகத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், அமெரிக்க அதிபராகப் போகும் ஜோ பைடன் ஆகியோர் குறித்து கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குறித்து ஒபாமா குறிப்பிடுகையில், “பதற்றமானவர், பக்குவப்படாமல் இருக்கிறார். மாணவரைப் போல் பாடங்களை நன்றாகப் படித்து, ஆசிரியரை ஈர்க்கும் திறமை படைத்தவர்தான். ஆனால், குறிப்பிட்ட பாடத்தில் ஆழ்ந்த அறிவு பெறக்கூடிய விருப்பமோ அல்லது தகுதியோ ராகுல் காந்திக்கு இல்லை” எனத் தெரிவித்துள்ளார். ஒபாமாவின் இந்த கருத்து இந்திய அரசியல் வட்டாரத்தில் ராகுல் காந்தி ஆதரவாளர்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ராகுல் காந்தி குறித்த விமர்சனத்திற்கு, காங்கிரஸ் கட்சி சார்பில் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை என்று பதிலளிக்கப்பட்டது. இருப்பினும், அந்தக் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் ஒபாமாவுக்குக் கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read: `பதற்றமானவர், பக்குவப்படாமல் இருக்கிறார்!’ - ராகுல் காந்தி குறித்து ஒபாமா

இது குறித்து பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் உதித் ராஜ், ``ஐந்து முதல் 10 நிமிடங்களில் ஒருவரின் குணாதிசயத்தை நம்மால் எப்படி முடிவு செய்யமுடியும். அதைத் தெரிந்துகொள்ள சில நேரங்களில் பல ஆண்டுகள் ஆகும். ராகுல் காந்தி குறித்து நீங்கள் தவறாகக் கணித்திருக்கிறீர்கள். உங்கள் கணிப்பு பொய்யானது என்பது விரைவிலேயே தெரியவரும்’’ என்று காட்டமாகப் பதிலளித்திருந்தார்.

ராகுல் காந்தி

"8-10 ஆண்டுகளுக்கு முன்பு ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாக இந்தியா வந்தபோது. ஒபாமாவும் ராகுல் காந்தியும் சந்தித்திருக்க வேண்டும், சில கூட்டங்களில் ஒருவரை மதிப்பிடுவது கடினம். அப்போதிருந்த ராகுல் காந்தியின் ஆளுமை மாறிவிட்டது, அவர் நிறைய அனுபவங்களைப் பெற்றுள்ளார்” என்று காங்கிரஸ் கட்சியின் தாரிக் அன்வர் கருத்து தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக சிவசேனா கட்சியின் எம்.பி.யும், தலைமைச் செய்தித் தொடர்பாளருமான சஞ்சய் ராவத் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ஒரு வெளிநாட்டு அரசியல் கட்சித் தலைவர், இந்திய அரசியல் கட்சித் தலைவர்கள் குறித்து இதுபோன்று கருத்துகளைக் கூற முடியாது. அவரின் கருத்துகள் வெறுக்கத்தக்கவை. நாங்கள் ஒருபோதும் ட்ரம்ப் மன நலம் பாதிக்கப்பட்டவர் என்று சொல்லமாட்டோம். இந்த தேசத்தைப் பற்றி ஒபாமாவுக்கு எவ்வளவு தெரியும்?” எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும், சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி மகாராஷ்டிராவில் ஒரு கூட்டணி அரசாங்கத்தில் உள்ளன. மகா விகாஸ் அகாடி என்று அழைக்கப்படும் இந்த கூட்டணியின் ஒரு வருட பதவிக்காலம் நிறைவடைந்ததையடுத்து உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசாங்கம் வரும் நான்கு ஆண்டுகளில் மாநிலத்தை பலப்படுத்தும் என்றும் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

``கடந்த ஆண்டு, இதே நேரத்தில், நாங்கள் மகாராஷ்டிராவில் அரசாங்கத்தை அமைக்கும் முனைப்பில் இருந்தோம். ஒரு சிவசேனா தலைவர் இங்கு முதல்வராக வருவார் என்று யாரும் கற்பனை செய்து பார்த்ததில்லை. கடந்த ஒரு வருடத்தில், நாங்கள் பல சவால்களை எதிர்கொண்டோம். நாங்கள் பொறுமையுடன் இருக்கிறோம், எச்சரிக்கையுடன் செயல்படுகிறோம்" என்றார் சஞ்சய் ராவத்.

தொடர்ந்து பேசிய சஞ்சய் ராவத், "வரவிருக்கும் நான்கு ஆண்டுகளில், மகாராஷ்டிராவின் 11 கோடி குடிமக்களுடன் நம்பகமான பிணைப்பை உருவாக்குவதே எங்கள் நோக்கம்" என்றார்.



source https://www.vikatan.com/news/politics/sanjay-raut-about-obama-opinion-against-rahul-gandhi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக