Ad

ஞாயிறு, 15 நவம்பர், 2020

`ராஜேந்திர பாலாஜிக்கு தீபாவளி பரிசு?; ஆச்சர்ய சந்திப்புகள்’ - விருதுநகர் அதிமுக-வில் என்ன நடக்கிறது

அதிரடியாக பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் விருதுநகர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து அதில் ஒரு மாவட்டத்துக்கு செயலாளராக அறிவித்துள்ளது அவருக்கு அதிர்ச்சியையும், எதிர் கோஷ்டியினருக்கு மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஓ.பி.எஸ்ஸை சந்தித்த ராஜேந்திர பாலாஜி

கட்சி கட்டுப்பாட்டையும் மீறி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அ.தி.மு.க-வுக்கு சங்கடத்தை உண்டாக்கும் வகையில் பல கருத்துகளை வெளியிட்டு வந்தார். இதன் எதிரொலியாக கடந்த நாடாளுமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில் அ.தி.மு.க பின்னடைவை சந்தித்தது. அதிலும் ராஜேந்திரபாலாஜியின் சிவகாசித் தொகுதியில் அ.தி.மு.க வாக்கு சதவிகிதம் மிகவும் குறைந்தது.

இதற்கிடையே அவருடன் இருந்த சாத்தூர் எம்.எல்.ஏ ராஜவர்மன் தனி கோஷ்டியை உருவக்கி, விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை, சிவகாசி பகுதியில் ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக அரசியல் நடத்த ஆரம்பித்தார். இரண்டு தரப்பும் மோதலில் ஈடுபடும் அளவுக்கு பிரச்னை சென்றது. இந்த நிலையில்தான் ராஜேந்திர பாலாஜியின் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. இதனால் அப்செட்டாகி இருந்தவரை உற்சாகப்படுத்தும் வகையில் சில நாட்கள் கழித்து மாவட்ட பொறுப்பாளர் என அறிவிக்கப்பட்டார்.

ராஜேந்திர பாலாஜிக்கு ராஜவர்மன் வாழ்த்து

இதற்கிடையே சமீபத்தில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற பிரச்னை அ.தி.மு.க-வில் எழுந்தபோது, எடப்பாடிக்கு ஆதரவாக கருத்து சொன்னதால் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் ராஜேந்திர பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்துயும், மாவட்ட பொறுப்பாளர் பதவியிலிருந்தும் நீக்க வேண்டும் என்று கொந்தளித்தார்கள்.

அதைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் அமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மன் உட்பட பல ஒன்றிய செயலாளர்கள், நகரச்செயலாளர்கள் புறக்கணிக்கும் சூழல் ஏற்பட்டது. இது சாதி ரீதியாகவும் மாவட்டத்துக்குள் பிளவை ஏற்படுத்தி பதற்றத்தை ஏற்படுத்தியது.

ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான உட்கட்சி பிரச்னை வளர்ந்து வருவது, வரும் சட்டமன்ற தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில் அ.தி.மு.க-வுக்கு சிக்கலை உண்டாக்கும் என்று உளவுத்துறை, முதலமைச்சருக்கு அறிக்கை அனுப்பியது.

ராஜேந்திர பாலாஜி

இந்த நிலையில்தான் கடந்த 13-ம் தேதி விருதுநகர் மாவட்டம் 2 ஆக பிரிக்கப்பட்டு விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் சட்டமன்ற தொகுதிகள் அடைங்கிய மேற்கு மாவட்டத்துக்கு ராஜேந்திர பாலாஜியும், அருப்புக்கோட்டை, திருச்சுழி, சாத்தூர் சட்டமன்றத் தொகுதிகள் அடங்கிய கிழக்கு மாவட்டத்துக்கு முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் உறவினரும், வெம்பக்கோட்டை முன்னாள் ஒன்றிய செயலாளருமான ரவிச்சந்திரனும் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் அதிகார எல்லை குறைக்கப்பட்டதில் ரொம்பவும் நொந்து போன ராஜேந்திர பாலாஜியின் ஆதரவாளர்கள், `அண்ணனின் எதிரிகள் நினைப்பது போலவே எடப்பாடி நடந்து கொள்கிறார், இதுதான் அவர் கொடுத்த தீபாவளிப் பரிசா...? இது இப்படியே போனால், அவர்கள் சொல்லி வருவது போல் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அண்ணனுக்கு சீட் கொடுப்பதிலும் பிரச்னை செய்வார்கள்?" என்று கவலைப்படுகிறார்கள்.

ராஜேந்திர பாலாஜிக்கு ராஜவர்மன் வாழ்த்து

இதற்கிடையே ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக அரசியல் செய்து வரும் சாத்தூர் எம்.எல்.ஏ ராஜவர்மன், அவருக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்துள்ளதும், கோபத்தில் இருந்த ஓ.பி.எஸ்ஸை சந்தித்து ராஜேந்திர பாலாஜி மரியாதை செய்ததும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/news/politics/story-about-virudhunagar-admk-group-politics

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக