விவசாயத்தைப் பொறுத்தவரையில், வாழை, தென்னை, மஞ்சள், வெற்றிலை உள்ளிட்ட வெள்ளாமையில்தான் விவசாயிகள் ஊடுபயிராக மற்றொரு பயிரைப் பயிர் செய்வார்கள். ஆனால், நெல் விவசாயத்தில் ஊடுபயிராக மற்றொரு நெல் ரகத்தைப் பயிரிட்டு, அதிசயிக்க வைக்கிறார் விவசாயி கதிர்வேல். இயற்கை மற்றும் செயற்கை விவசாய முறைகளில், தனித்தனியாக இந்தப் புதிய முயற்சியைச் செய்திருக்கிறார் அவர்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் உள்ள பிள்ளப்பாளையத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல். சொந்த நிலம் ஐந்து ஏக்கர், குத்தகை நிலம் ஐந்து ஏக்கர் என மொத்தம் பத்து ஏக்கரில் வெள்ளாமை செய்கிறார். காவிரி பாசனம் என்பதால், இரண்டரை ஏக்கர் நிலத்தில் வாழையையும் மீதியுள்ள ஏழரை ஏக்கரில் நெல்லையும் சாகுபடி செய்துள்ளார். அந்த ஏழரை ஏக்கரில், 80 சென்ட் நிலத்தில், இப்படி மாப்பிள்ளை சம்பா பயிருக்கு ஊடுபயிராக அறுபதாம் குறுவை என்ற பாரம்பர்ய நெல் ரகத்தைப் பயிரிட்டு, புதிய விவசாய முயற்சிக்கான 'வெள்ளோட்டம்' பார்த்திருக்கிறார்.
Also Read: `இயற்கையை இவங்க புரிஞ்சுக்கணும்!' - மாணவர்களுக்கு களத்திலேயே பாடம் எடுக்கும் ஆசிரியை
இதுகுறித்துப் பேச தனது வயலில் வேலையாக இருந்த கதிர்வேலை சந்தித்தோம்.
"எங்களுக்கு பூர்வீகத் தொழிலே விவசாயம்தான். ஆனா, நான் டிப்ளமோ கோர்ஸ் முடிச்சுட்டு, ஒரு என்.ஜி.ஓவுல வேலை பார்த்தேன். கடந்த 10 வருஷத்துக்கு முன்னாடி, அந்த வேலையை விட்டுட்டு, தீவிர விவசாயத்துல இறங்கினேன். ஆரம்பத்துல செயற்கை விவசாயம் செய்தாலும், கடந்த ஆறு வருஷத்துக்கு முன்னால இருந்து இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பிச்சுட்டேன். அதுக்கு பசுமை விகடனும் ஒரு காரணம். ஜீரோ பட்ஜெட் பிதாமகர் 'சுபாஷ் பாலேக்கர்'கிட்ட மூணு பயிற்சிகள்ல கலந்துகிட்டு, பயிற்சி எடுத்துகிட்டேன்.
காய்கறிகள், வாழை, ஆந்திரா பொன்னி, கோ 43 ன்னு பயிர் செஞ்சுகிட்டு வந்தேன். நேரடி நெல் விதைப்பு, திருந்திய நெல் சாகுபடினு பலமுறைகள்ல, இயற்கை விவசாயம் பண்ணினேன். திருந்திய நெல் சாகுபடி முறையில, அதிகப்பட்சமா ஏக்கருக்கு 55 மூட்டைகள் வரை எடுத்து காண்பிச்சேன். பக்கத்து வயல்கள்ல செயற்கை விவசாயம் பண்ணுனவங்களெல்லாம், ஏக்கருக்கு அதிகபட்சம் 45 மூட்டைகள் வரைதான் எடுத்தாங்க. இதனால், எனக்கு இயற்கை விவசாயத்து மேல பெரிய பிடிப்பு வந்துச்சு. சுபாஷ் பாலேக்கர் அடிக்கடி ஒரு விசயத்தை சொல்லுவார்.
'முதன்மை பயிரின் செலவை, ஊடுபயிரின் விளைச்சல் நிவர்த்தி பண்ணனும். அதுதான், ஜீரோ பட்ஜெட்' என்பார். ஆனால் அவரே, 'டிரை லேன்டுல நெல்லுக்கு ஊடுபயிரா உளுந்தை மட்டும் பயிர் பண்ணலாம். ஆனா, காவிரி பாசனம் உள்ள டெல்டா பகுயியில், நெல்லில் ஊடுபயிர் செய்ய முடியாது' என்று சொல்லுவார். ஆனா, 'காவிரி பாசனப் பகுதியில் நெல்லில் ஊடுபயிர் பண்ணி பார்த்தா என்ன?'னு எனக்கு தோணுச்சு.
ஆனா, அதுக்கான காலம் கணியாமல் இருந்துச்சு. இந்த நிலையில்தான், கொரோனா வந்து, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 'இப்போ நெல்லில் ஊடுபயிர் பண்ண முயற்சி பண்ணினால் என்ன'னு தோணுச்சு. உடனே களத்தில் இறங்கிட்டேன். 160 நாள் பயிர் செய்யக்கூடிய பாரம்பர்ய ரகமான மாப்பிள்ளை சம்பாவை முதன்மை பயிராகவும், அதில் ஊடுபயிராக 60 நாள் பாரம்பர்ய பயிரான அறுபதாம் குறுவையையும் பயிர் செய்ய முடிவு பண்ணினேன். மொத்தம் 80 சென்ட் நிலத்தில், இயற்கை மற்றும் செயற்கை இன இரண்டு வகைகளிலும் வெள்ளாமை பண்ண முடிவு செஞ்சேன்.
அதாவது, 40 சென்ட் நிலத்தில இயற்கை விவசாய முறையிலும் மற்றொரு 40 சென்ட் நிலத்தில் செயற்கை விவசாய முறையிலும் பயிர் செய்ய முடிவெடுத்தேன். 1:2 ங்கிற வகையில் மாப்பிள்ளை சம்பாவையும் அறுபதாம் குறுவையையும் விதைச்சேன். ட்ரம்சீடர்ங்கிற நேரடி நெல் விதைக்கும் கருவி மூலம் விதையை விதைச்சேன். அந்த மெஷின் மூலம், முதல் வரிசையில அறுபதாம் குறுவை விதைநெல்லையும் இரண்டாம் வரிசையில் அறுபதாம் குறுவை மற்றும் மாப்பிள்ளை சம்பா விதைநெல்லையும் கலந்து விதைச்சேன்.
அதேபோல், மூன்றாம் வரிசையில் அறுபதாம் குறுவை, நான்காம் வரிசையில் அறுபதாம் குறுவை + மாப்பிள்ளை சம்பா விதைகள் கலந்துன்னு மாறி மாறி விதைகளை விதைச்சேன். இப்படி இதே வகையில் வரிசைகள் மாறி மாறி போகும். ஒரு வரிசைக்கும், மற்றொரு வரிசைக்கும் 20 சென்டிமீட்டர் இடைவெளி விட்டேன். இயற்கை முறையில் 40 சென்ட் நிலத்துல செஞ்ச வெள்ளாமைக்கு, சாண எரு மட்டும் பயன்படுத்தினேன். செயற்கை விவசாயம் முறையில் செய்யப்பட்ட மற்றொரு 40 சென்ட் நிலத்தில், செயற்கை உரங்களையும் களைக்கொல்லி மருந்தையும் பயன்படுத்தினேன்.
இதில், இயற்கை, செயற்கை என்று எந்த விவசாய முறையில் அதிக ஈல்ட் வருதுனு பார்க்கத்தான், இரண்டு முறைகளிலும் வெள்ளாமை பண்ணினேன். இரண்டு விவசாயத்துலயும் பயிர் நல்லா வந்திருக்கு. ஒரே வயல்ல, இரண்டு மாசத்துல ஓர் அறுவடை, அஞ்சரை மாசத்துல ஓர் அறுவடை என்பதுதான் இந்த முயற்சியின் நோக்கம். அறுபதாம் குறுவையை இன்னும் 10 நாள்ல அறுவடை பண்ணிடலாம். ஆள் வைத்து மட்டுமே அறுவடை செய்ய முடியும்.
அறுபதாம் குறுவையை அறுக்கும்போதே, பக்கத்தில் இருக்கிற மாப்பிள்ளை சம்பா பயிர்களையும் அறுத்துவிடணும். அதன்பிறகு, அறுபதாம் குறுவை பயிர் தட்டைகள் மேலும் வளராது. ஆனா, மாப்பிள்ளை சம்பா தட்டைகள் தொடர்ந்து வளர்ந்து, விளைச்சலை கொடுக்கும். அதன் உண்மையான உயரத்தைவிட, இதனால் கொஞ்சம் உயரம் கம்மியா வளரும். பிறகு, அதை தனியாக அறுவடை பண்ணனும். அறுபதாம் குறுவையில், 80 சென்ட் நிலத்திலும் சேர்த்து, மொத்தம் 800 கிலோ வரை கிடைக்கும்னு நினைக்கிறேன். அதேபோல், மாப்பிள்ளை சம்பாவுல 1,300 கிலோவரை மகசூல் வரும்னு எதிர்பார்க்கிறேன்.
அதை விற்றால், ஒரு லட்சம் வரை கிடைக்கும். செலவுகள்னு பார்த்தா, உரம், களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி மருந்துகள், ஆள்களுக்கு அறுவடை கூலினு மொத்தம் பத்தாயிரம் வரை செலவாகும். ஒரு லட்சத்தில் பத்தாயிரத்தைக் கழித்தால், 80 சென்ட் நிலத்தில், ஆறு மாதத்தில் ரூ. 90,000 வரை வருமானம் கிடைக்கும். இந்த முறை வெற்றியடைஞ்சா, தொடர்ந்து இதுபோல் விவசாயம் செய்வேன். தண்ணீர் புழக்கம் அதிகம் உள்ள இதுபோன்ற நிலத்தில், நெல்லுக்கு ஊடுபயிராக நெல்லை விளைவித்த முதல் விவசாயி நானாகதான் இருப்பேன். இந்த முறையை மத்த விவசாயிகள்கிட்டயும் கொண்டு சேர்ப்பேன்" என்றார் உற்சாகமாக!
ஒரே வயலில் இப்படி இரண்டு நெல்ரக சாகுபடி சாத்தியமா, இதனால் இனக்கலப்பு எதுவும் ஏற்படுமா என்றெல்லாம், தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அறச்சலூர் செல்வத்திடம் கேட்டோம்.
"இதனால், கண்டிப்பாக இனக்கலப்பு ஏற்படாது. ஏனென்றால், இரண்டையும் ஒரேகால பயிராகப் பயிரிட்டால்தான், இனக்கலப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. காரணம், ஒரே நேரத்தில் இரண்டு பயிர்களும் பூத்தால்தான், இனக்கலப்பு பிரச்னை எற்படும். ஆனால், பிள்ளாபாளையம் கதிர்வேல், 60 நாள்களில் விளையக்கூடிய அறுபதாம் குறுவையையும், 160 நாள்களில் விளையக்கூடிய மாப்பிள்ளை சம்பாவையும் விளைவித்துள்ளதால், இனக்கலப்பு கண்டிப்பாக ஏற்படாது. அறுபதாம் குறுவை பயிரை அறுவடை செய்யும்போது, அதில் உள்ள நெல்மணிகள் கீழே சிந்தி, மாப்பிள்ளை சம்பா அறுவடையின்போது, மேனுவலாக இரண்டு நெல்ரகங்களும் கலக்க வாய்ப்பிருப்பதாகக்கூட நினைக்கலாம்.
ஆனால், இரண்டு பயிர்களுக்கு இடையிலும் உள்ள காலஇடைவெளி அதிகம் என்பதால், அதற்கான வாய்ப்பும் கம்மிதான். எல்லாவற்றையும்விட, ஒரு நீண்டகால நெல்ரக பயிருக்கு ஊடுபயிராக குறுகிய கால பயிர் ரகத்தை விதைப்பது, நம் முன்னோர்கள் செய்த பாரம்பர்ய விஷயம்தான். அதனால், கண்டிப்பாக இந்த முயற்சி வெற்றியடையும். முற்றிலும் அருகிவிட்ட நமது பாரம்பர்ய விவசாய முறையை கதிர்வேல் இப்போது செயல்படுத்தி பார்க்கிறார். நல்ல முயற்சி" என்றார்.
source https://www.vikatan.com/news/agriculture/karur-farmer-cultivating-two-variety-of-paddy-in-inter-cropping
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக