Ad

ஞாயிறு, 15 நவம்பர், 2020

`தமிழகம் வரும் அமித் ஷா... அரசியல் மாற்றங்கள் போக போக தெரியும்!’ - எல். முருகன்

கொரோனா பரவலுக்கு பின்னர் நடைபெற்ற பீகார் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்றது. அந்த கூட்டணி சார்பாக விரைவில் நிதிஷ்குமார் முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார். இந்த நிலையில் பா.ஜ.க தலைமையின் கவனம் அடுத்த ஆண்டு தேர்தலை சந்திக்கும் மாநிலங்கள் பக்கம் திரும்பி இருக்கிறது.

பீகார் தேர்தல்

இந்த சூழ்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கட்சி மற்றும் அரசு நிகழ்சிகளில் பங்கேற்க வரும் 21-ம் தேதி தமிழகம் வருகிறார் என்ற தகவல் அரசியல் கவனம் பெற்றதாகவே பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் தற்போது தடையை மீறி பா.ஜ.க சார்பில் வேல் யாத்திரை நடைபெற்று வருகிறது. தமிழக அரசு அதற்கு தடை விதித்திருந்தாலும், யாத்திரையை தொடர்வதும், தடுத்து நிறுத்தி கைது செய்வதும், பின்னர் விடுதலை செய்யப்படுவதும் தொடர் கதை ஆகி உள்ளது.

இந்த சூழலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தமிழக வருகை, அரசியல் களத்தில் உற்று நோக்கப்படுகிறது. இன்று அமித் ஷா வருகை தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பா.ஜ.க தலைவர் எல். முருகன், ``மத்திய அமைச்சர் அமித்ஷா வருகையின்போது விமான நிலையத்திலிருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடம் வரை சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். அந்த வரவேற்பு தனிமனித இடைவெளியை பின்பற்றி அளிக்கப்படும்” என்றார்.

அமித் ஷா

தொடர்ந்து பேசியவர், ``மாநில, மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டமும், அதனைத் தொடர்ந்து, முக்கியக்குழுவின் கூட்டமும் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டங்களில் அமித்ஷா கலந்துகொள்கிறார். அரசு நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்துகொள்வார்.

அமித்ஷாவின் வருகை எங்களுக்கு மிகப்பெரிய ஊக்கத்தைக் கொடுப்பதாக இருக்கும். தைரியம், புத்துணர்வை அளிப்பதாக இருக்கும். அமித்ஷா வருகையால் அரசியலில் ஏற்படும் மாற்றங்கள் போகப்போக தெரியும். அமித்ஷாவின் வருகை எதிர்க்கட்சியினருக்குப் பயத்தைக் கொடுப்பதாக அமையும்” என்றார் எல். முருகன்.

வேல் யாத்திரையில் அமித் ஷா கலந்து கொள்வது குறித்து பேசிய எல். முருகன், ``அமித்ஷா வரும் சமயத்தில் வெற்றிவேல் யாத்திரை கோவையில் நடப்பதால் அவர் கலந்துகொள்ள முடியாது. என்றாலும் வேறு சில மத்திய அமைசர்கள் வருவார்கள். வரும் 22-ல் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, 23-ம் தேதி பழநியில் வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன், நவ.2-ல் மதுரையில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, கர்நாடக செய்தித்தொடர்பாளர் மாளவிகா சுவாமிமலையிலும், தேசிய செய்தித்தொடர்பாளர் புரந்தேஸ்வரி தென்காசியிலும், கன்னியாகுமரியில் தேசிய இளைஞரணி தலைவர் தேஜஸ்வியும் கலந்துகொள்ள உள்ளார்கள்.

வேல் யாத்திரை

இறுதி நிகழ்வுக்கு தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு அழைப்பு விடுத்திருக்கிறோம். அது தொடர்பாக ஒன்றிரண்டு நாட்களில் இறுதி செய்வோம்" என்றார்.



source https://www.vikatan.com/news/politics/l-murugan-talks-about-amit-shahs-tn-visit

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக