Ad

வியாழன், 19 நவம்பர், 2020

சிறையில் சாமி பக்தன்... நிஜத்தில் எம்.ஜி.ஆர் வேடம் - கார்டனையே கதிகலக்கிய விவேக சுதாகரன்!

ஜெயலலிதா உயிரோடு இருந்த வரையில் இரும்புக் கோட்டையாக வர்ணிக்கப்பட்ட போயஸ் கார்டன், இன்று கேட்பாரின்றி தூசு படர்ந்து காணப்படுகிறது. `அம்மா இருக்கும் இடமே கோவில்' என்றெல்லாம் புகழுரைகளை அள்ளித் தெளித்தவர்கள், இன்று அவர் வாழ்ந்த இடம் எப்படி இருக்கிறது என்பதைக் கவனிக்கக் கூட நேரமில்லாத அளவுக்கு துறைரீதியான பணிகளில் மூழ்கிக் கிடக்கிறார்கள். ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டை மையப்படுத்தித்தான் எத்தனை எத்தனை சர்ச்சைகள். அதில், `நான் செய்த மிகப் பெரிய தவறு' என ஜெயலலிதாவே ஒரு நேர்காணலில் ஒப்புக் கொண்ட சம்பவமும் நடந்தது. அது வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணம்.

திருமணம்

உலக சாதனை படைத்த `வளர்ப்பு மகன்' சுதாகரனின் திருமணம், `ஆமாம்.. அது ஆடம்பர திருமணம்தான்' என ஒருகட்டத்தில் ஜெயலலிதாவே ஏற்றுக் கொண்டார். தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் பேசப்பட்ட இந்த ஒரு திருமணமே, 1996 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு பலத்த அடியைக் கொடுத்தது. அதே தேர்தலில், பர்கூரில் சுகவனத்திடம் தோற்றுப் போனார் ஜெயலலிதா. கூடவே, சொத்துக் குவிப்பு வழக்கும் சேர்ந்து கொள்ள, `இனி ஜெயலலிதா மீண்டெழுவாரா?' என அரசியல் கட்சிகள் பேசத் தொடங்கின. அந்தளவுக்கு வளர்ப்பு மகன் திருமணம் அவரைப் பாடாய்ப்படுத்தி எடுத்தது.

விளைவு, 2001-ல் அ.தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு அதே வளர்ப்பு மகன் மீது ஹெராயின் வழக்கும் கைத்துப்பாக்கி வைத்திருந்த வழக்கும் பாய்ந்தது தனிக்கதை.

யார் இந்த சுதாகரன்?

ஜெயலலிதாவின் தோழியான சசிகலா உடன் பிறந்தவர்கள் சுந்தரவதனன், வினோதகன், ஜெயராமன், வனிதாமணி, திவாகரன் என ஐந்து பேர். இவர்கள் திருத்துறைப்பூண்டியில் பிறந்து வளர்ந்தாலும், ஒருகட்டத்தில் மன்னார்குடிக்கு குடிபெயர்ந்தனர். இதில், சசிகலாவின் அக்கா வனிதாமணியின் கடைசி மகன்தான் சுதாகரன். அவரைத் தன் வளர்ப்பு மகனாகத் தத்தெடுத்தார் ஜெயலலிதா. இவர், தினகரன், பாஸ்கரனுக்கு அடுத்துப் பிறந்தவர். இவரை வளர்ப்பு மகன் என அறிவித்தாலும், முறைப்படி தத்தெடுக்கும் வேலையை ஜெயலலிதா மேற்கொள்ளவில்லை.

நீதிமன்றத்தில் சுதாகரன்

காரணம், இந்து தத்தெடுப்புச் சட்டப்படி உள்ள பல்வேறு நிபந்தனைகள்தான். இதன்பிறகு அடுத்த சில வாரங்களில் சிவாஜி கணேசனின் பேத்தியோடு, சுதாகரனுக்குத் திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. சினிமா கலை இயக்குநர் தோட்டா தரணியின் கைவண்ணத்தில் 70,000 சதுர அடி பரப்பில் பந்தல் பணிகளும் 25,000 பேர் அமரும் அளவுக்கான உணவருந்தும் அரங்கும் அமைக்கப்பட்டன.

இந்தத் திருமணத்தில் பங்கேற்க வருகை தந்த விருந்தினர்களுக்காகவே பிரபல ஓட்டல்களில் மொத்தமாக அறைகள் புக் செய்யப்பட்டன. தாம்பூலப் பைகள், ஏ.ஆர்.ரகுமானின் இசைக்கச்சேரி, வாணவேடிக்கைகள் என சென்னையே குலுங்கியது. தலைமைச் செயலகத்தில் உள்ள உயர் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் என மொத்தமாகக் களமிறக்கப்பட்டனர். இந்தத் திருமணத்தில் விலை உயர்ந்த ஆபரணங்களை அணிந்து கொண்டு ஜெயலலிதாவும் சசிகலாவும் நடந்து வந்த புகைப்படங்கள், மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இத்தனைக்கும் அப்போது மாதம் ஒரு ரூபாய் மட்டுமே சம்பளமாக வாங்கிக் கொண்டிருந்தார் ஜெயலலிதா.

ஜெயலலிதாவால் வளர்ப்பு மகன் என அறிவிக்கப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்புதான் போயஸ் கார்டன் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தார் ஜெ.தீபா. `அவருக்கு எந்தக் காலத்திலும் முக்கியத்துவம் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே சுதாகரனை முன்னிறுத்தினார் சசிகலா' எனவும் சொல்லப்படுவதுண்டு. பின்னாளில், சொத்துக் குவிப்பு வழக்கின் நீதிமன்ற வாதத்தின்போது, `வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்துக்கு ஆன மொத்த செலவில் 75 சதவிகிதம் நடிகர் சிவாஜி கணேசன் குடும்பத்தினரால் செய்யப்பட்டது. அ.தி.மு.க கட்சியின் தொண்டர்கள் தாங்களாக முன் வந்து சில செலவுகளை ஏற்றுக் கொண்டனர். அந்த திருமணத்துக்கு மொத்தம் ரூ.6 கோடியே 49 லட்சம் செலவு செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. ஆனால், 1.5 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. அதிலும், 27 லட்ச ரூபாயைத்தான் ஜெயலலிதா செலவழித்தார்' என அவரது தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். ஆனால், திருமணத்துக்கு வந்த பரிசுப் பொருளே 100 கோடி ரூபாயைத் தாண்டும் என அன்றைக்கு செய்திகள் வெளியாகின.

சுதாகரன் திருமணம்

இதன்பிறகு, `சின்ன எம்.ஜி.ஆர்' என்கிற அடைமொழியோடு, நற்பணி மன்றங்களைத் திறந்து அதகளப்படுத்திக் கொண்டிருந்தார் சுதாகரன். தனது பெயருக்கு முன்னால் `விவேக' என்ற வார்த்தையையும் சேர்த்துக் கொண்டார். அம்பேத்கர் சிலைக்கு மாலை போடுவது, வயதான பாட்டிகளைக் கொஞ்சுவது, அவர்களுக்கு ரூபாய்களை அள்ளிக் கொடுப்பது என தன்னை எம்.ஜி.ஆராகவே பாவித்து வந்தார். (இதே பாணியை இவரது அண்ணன் பாஸ் என்கிற பாஸ்கரனும் கடைப்பிடித்தது வேறு கதை) இதற்காக மாநிலம் முழுவதும் நற்பணி மன்றங்களையும் திறந்திருந்தார். இது போயஸ் கார்டன் வட்டாரத்தில் எரிச்சலை ஏற்படுத்தியது.

வளர்ப்பு மகன் கேரக்டர் ஒரே ஆண்டில் முடிவுக்கு வந்தாலும், சொத்துக் குவிப்பு வழக்கு என்ற பெயரில் ஜெயலலிதாவைப் பின்தொடர்ந்தே வந்து கொண்டிருந்தார் சுதாகரன். அவரது, நற்பணி மன்றத்தில் இருந்த நிர்வாகிகளும் ஒருகட்டத்தில் சுதாகரனை விட்டு விலகினர். குடும்பத்தினரும், இவரது செயல்பாடுகளை ரசிக்காமல் ஒதுங்கியதாகச் சொல்லப்பட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட அதேநேரம், சுதாகரனும் சிறையில் அடைக்கப்பட்டார். சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணையின்போது நீதிமன்றத்துக்கு அடிக்கடி வந்தாலும், சசிகலா தரப்பினரோடு சுதாகரன் பேசியதில்லை. கடவுள் பக்தி, அமைதி, சாந்தமான முகம் எனத் தோற்றத்தைக் காட்டினாலும், சுதாகரன் என்றாலே மன்னார்குடி உறவுகள் சற்று ஒதுங்கித்தான் போனார்கள்.

Also Read: ஜெ. வைத்த துளசி மாடம்... சுற்றிவந்த சசிகலா... டி.வி பார்க்கும் இளவரசி... மிரட்டும் சுதாகரன்!

தொடர்ந்து, பரப்பன அக்ரஹாரா ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டபோது, மனைவி சத்தியலட்சுமி உள்பட குடும்பத்தினர் யாரும் சுதாகரனைச் சந்திக்க வரவில்லை என்ற தகவல் வெளியானது. மனதளவில் பாதிக்கப்பட்டவரை போன்று சிறையில் காட்சியளித்ததாகவும் கூறப்பட்டது. அவரது நிலையைப் பார்த்துப் பரிதாபப்பட்ட சிறைக் காவலர்கள், சசிகலா உறவுகளுக்குத் தகவல் கொடுத்துள்ளனர். இதன்பின்னரே, அவரது குடும்பத்தினர் வந்து பார்த்ததாகக் கூறப்படுகிறது. பரப்பன அக்ரஹாரா சிறையிலும், விதிகளின்படி தரப்படும் உணவையே அவர் எடுத்துக் கொண்டார். நெற்றி முழுவதும் திருநீறு பூசிக் கொண்டு சாமி படத்தை தனக்கு முன்பாக வைத்துக் கொண்டு வழிபடுவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார். இதனைப் பார்த்து சக கைதிகள் அச்சப்பட்டாலும், அவர்களைச் சிறைக் காவலர்கள் சமாதானப்படுத்தி வந்தனர்.

பரப்பன அக்ரஹாரா சிறை

இந்தநிலையில், பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் கடந்த மாதம் 28-ம் தேதி சுதாகரன் தாக்கல் செய்திருந்த மனுவில், `சொத்துக் குவிப்பு வழக்கில் 1997-ம் ஆண்டு 90 நாள்கள் சிறையில் இருந்துள்ளேன். எனது சிறைக்காலம் முடிவடைந்துவிட்டதால், விடுதலை செய்ய வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. இந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்ட ரூ.10 கோடியை செலுத்துவதற்கான ஆவணங்களைத் தயார்படுத்தும் வேலையில் அவரது வழக்கறிஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சிறை விதிகளின்படி, ஜனவரி மாதம் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் விடுதலையாகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாகவே சுதாகரன் விடுதலையாகலாம் எனவும் தகவல் வெளிவருகிறது. சிறையில் இருந்து வெளிவந்ததும் சுதாகரனின் பயணம் எதை நோக்கி அமையப் போகிறது என்பதை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

`போயஸ் கார்டன், வேதா இல்லத்தில் ஜெயலலிதா இருந்த காலம் வரையில் ஒருவர் உச்சாணிக் கொம்பில் ஏற்றப்படுவதும், அதே நபர் குறுகிய காலகட்டத்தில் காற்று பிடுங்கப்பட்ட பலூனாக சுருங்கிப் போவதும் தொடர்ந்து நடந்து வந்தது. அதற்குத் தொடக்க கால உதாரணமாக இருந்தவர் சுதாகரன்' என்கின்றனர் அ.தி.மு.க சீனியர்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/controversy/article-regarding-jayalalithaas-foster-son-sudhakaran

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக