Ad

ஞாயிறு, 26 செப்டம்பர், 2021

போலி மதுபாட்டில்கள் விற்பனை; கூட்டாளியைக் கொலை செய்த 6 பேர் கைது!

திண்டுக்கல் மாவட்டம் அனுமந்தராயன்கோட்டையைச் சேர்ந்தவர் ஸ்டீபன்(38). இவர் செப்டம்பர் 22-ம் தேதி மாலை தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். மாவட்ட எஸ்பி சீனிவாசன் உத்தரவின்பேரில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வந்தனர். இதற்கிடையில், திண்டுக்கல் சிந்தலகுண்டு அருகே சாமியார்பட்டி மன்மதன்(32), கார்த்திகேயன்(17), மருதீஸ்வரன்(30), தேனியைச் சேர்ந்த மணிகண்டராஜன்(23), உத்தமபாளையத்தைச் சேர்ந்த ராம்குமார்(25), அய்யங்கோட்டையைச் சேர்ந்த சங்கரபாண்டி(26) ஆகியோரைத் தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளன

ஸ்டீபன்

Also Read: பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய பெண் தலை துண்டித்துக் கொலை! - திண்டுக்கல்லில் அதிர்ச்சி

ஸ்டீபன் கொலை செய்யப்பட்ட அன்று அவரது உறவினர்கள், திமுக பிரமுகர் இன்பராஜ்தான் கொலைக்குக் காரணம் எனப் போலீஸாரிடம் வாய்மொழியாகப் புகாரளித்தனர். அதனடிப்படையிலும் போலீஸார் விசாரித்து வந்தனர். தற்போது கைது செய்தவர்களிடம் நடத்திய விசாரணையில், திமுக பிரமுகர் இன்பராஜ் தரப்பினருக்காகத்தான் இந்தக் கொலை நடத்தப்பட்டுள்ளது என்பதைப் போலீஸார் உறுதி செய்துள்ளனர்.

அனுமந்தராயன்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர்தான் இன்பராஜ். இவர் அனுமந்தராயன்கோட்டை ஊராட்சிமன்றத்தின் முன்னாள் தலைவராக இருந்தவர். தற்போது திமுக கிளைச் செயலாளராக உள்ளார். இவர் போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளார். இவருடன் சேர்ந்து ஸ்டீபன் போலி மதுவிற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் இன்பராஜூக்கு தெரியாமல் அதிக லாபம் எடுக்கும் நோக்கில் ஸ்டீபன் மதுவிற்பனை செய்துள்ளார். இதையறிந்த இன்பராஜ், இந்தத்தொழிலில் இருந்து ஸ்டீபனை 2 மாதங்களுக்கு முன் வெளியேற்றியுள்ளார். இதனைத்தொடர்ந்து செப்டம்பர் 22 ஆம் தேதி காலை திண்டுக்கல் தாலுகா போலீஸார் அனுமந்தராயன்கோட்டை அருகே தருமத்துப்பட்டி சாலையில் உள்ள இன்பராஜூக்கு சொந்தமான தோட்டத்து வீட்டில் சோதனை நடத்தினர். இதில் 11 ஆயிரம் போலி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இன்பராஜ் உள்ளிட்ட 6 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.

கொலை

இதற்கிடையே போலி மதுபாட்டில்கள் விற்பனை தொடர்பாக ஸ்டீபன்தான் போலீஸாரிடம் போட்டுக்கொடுத்ததாக இன்பராஜ் தரப்பினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த இன்பராஜ் தரப்பினர், ஸ்டீபனை கொலைசெய்யத் திட்டமிட்டு அவரை அழைத்துச்சென்று மது குடித்துள்ளனர். ஸ்டீபனுக்கு போதை ஏறியவுடன் அனுமந்தராயன்கோட்டை பஸ் ஸ்டாப்பில் வைத்து தலையை மட்டும் வெட்டிப் போட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.

மன்மதனுக்கு காலில் கட்டு

குற்றவாளிகள் தேனி மாவட்டம் உத்தமபாளையம் நீதிமன்றத்தில் சரணடையப்போவதாகப் போலீஸாருக்கு தகவல் கிடைத்து. அதனடிப்படையில் தனிப்படை போலீஸார் தேனியில் சல்லடைப் போட்டு தேடுதல் வேட்டையைத் தொடர்ந்தனர். குற்றவாளிகளில் மணிகண்டராஜன், ராம்குமார் ஆகியோர் தேனியைச் சேர்ந்தவர்கள் என்பதால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றி வந்துள்ளனர். இருப்பினும் அவர்களை போலீஸார் சுற்றிவளைத்து பிடித்துள்ளனர்.

அப்போது மன்மதனைப் போலீஸார் பிடிக்க முயன்றபோது அவர் பாலத்தில் இருந்து தப்பிக்க குதித்ததால் காலில் முறிவு ஏற்பட்டது. அதனால் அவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு காலில் கட்டு போட்டுள்ளார். இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.



source https://www.vikatan.com/news/crime/in-dindigul-police-arrested-6-people-under-murder-case

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக