Ad

ஞாயிறு, 15 நவம்பர், 2020

தூத்துக்குடி: அதிர்ச்சி கொடுத்த போஸ்டர்; 2 மணி நேரத்தில் வேலை!- முதல்வர் விசிட் ஹைலைட்ஸ்

தூத்துக்குடியில் கொரோனா தடுப்புப் பணிகள் ஆய்வுக் கூட்டம், புதிய திட்டப்பணிகள் அடிக்கல் நாட்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்தது. இந்த நிகழ்வுக்காக மூன்று முறை முதல்வரின் வருகை ரத்துசெய்யப்பட்டு, நான்காவது முறையாக நடந்தது. முதன்முறை பிரதமர் மோடியுடன் அனைத்து மாநில முதல்வர்களுடனான காணொலிக் கூட்ட நிகழ்ச்சியாலும், இரண்டாவது முறை முதல்வரின் தாயாரின் மறைவாலும், மூன்றாவது முறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை காரணமாகவும் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. பல்வேறு துறைகளில் ரூ.22.37 கோடி மதிப்பிலான 16 முடிவுற்ற திட்டங்களைத் திறந்துவைத்தார் முதல்வர். பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.328.66 கோடி மதிப்பிலான 29 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 15,792 பயனாளிகளுக்கு ரூ.37.55 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

பரபரப்பு போஸ்டர்

பரபரப்பைக் கிளப்பிய போஸ்டர்!

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் முதல்வரின் வருகைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நேற்று இரவில் சில இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அந்த போஸ்டரில், ``துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தபோது பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூற வரவில்லை. சாத்தான்குளத்தில் போலீஸாரின் சித்ரவதையால் தந்தை, மகன் உயிரிழந்தபோதும் வரவில்லை. சொக்கன்குடியிருப்பில் படுகொலை செய்யப்பட்ட நபரின் குடும்பத்தின் வாழ்வாதாரத்துக்கு அரசு நிதி அளிப்பதாக வாக்குறுதியளித்து இன்றுவரை நிறைவேற்றவில்லை. எந்த முகத்தை வைத்துக்கொண்டு தூத்துக்குடிக்கு வருகிறீர்கள்?" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இரவில் சில இடங்களில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை இரவோடு இரவாக போலீஸாரே கிழித்ததுடன், மீதி போஸ்டர்களையும் கைப்பற்றி தீயிட்டுக் கொளுத்தினர். இது தொடர்பாக நான்கு பேரை போலீஸார் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். போஸ்டர்கள் கிழிக்கப்பட்டதால் சமூக வலைதளங்களிலும் அதைப் பரப்பினார்கள் உடன்பிறப்புகள்.

மனு கொடுத்த இரண்டு மணி நேரத்தில் மாற்றுத்திறனாளிப் பெண்ணுக்கு வேலை!

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ரூ.16 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டிருக்கும் புற்றுநோய்க் கருவியைத் தொடங்கிவைத்தார் முதல்வர் பழனிசாமி. இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டுத் திரும்பியபோது தெற்கு காவல் நிலையம் அருகில் மாரீஸ்வரி என்னும் மாற்றுத்திறனாளிப் பெண் சாலையோரம் நின்றுகொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் காரை நிறுத்தி அருகில் அழைத்தார் முதல்வர் பழனிச்சாமி. மாரீஸ்வரியின் கணவர் சின்னத்துரை, மாரீஸ்வரியைத் தூக்கிக்கொண்டு முதல்வரின் காரின் அருகில் சென்றார். ``என்னம்மா...” என முதல்வர் கேட்க, ``அய்யா, என்னோட பேரு மாரீஸ்வரி. நான் எம்.ஏ தமிழ், டைப்பிங் ஹையர், லோயர் முடிச்சிருக்கேன். என்னோட கணவர் சின்னத்துரை கூலித் தொழிலாளி. எனக்கு அஞ்சு வயசுல சாலினினு பெண் குழந்தை இருக்கு. ரொம்ப கஷ்டமான சூழ்நிலையிலதான் வாழ்கை நடத்திட்டு வர்றோம். எனக்கு ஏதாவது ஒரு வேலை வேணும்” எனச் சொல்லி கையில் வைத்திருந்த கோரிக்கை மனுவைக் கொடுத்தார்.

மனு கொடுக்கும் மாரீஸ்வரி

அந்த மனுவைப் பெற்ற முதல்வர், ``நீ கலெக்டர் ஆபீஸுக்கு வாம்மா” எனச் சொல்லிவிட்டுக் கிளம்பினார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருந்த மாரீஸ்வரியை அழைத்து சுகாதாரத்துறையின் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வார்டு மேலாளர் பணி நியமன ஆணையை வழங்கினார். ``இந்த வேலையின் மூலம் மாத ஊதியமாக ரூ.15,000 கிடைக்கும். குடும்பத்தை நல்லா பார்த்துக்கோம்மா” என்றார் முதல்வர். பி.ஆர்.ஓ சீனிவாசன், மாரீஸ்வரியை மீடியாக்களிடம் அழைத்துக்கொண்டு மனு கொடுத்த இரண்டு மணி நேரத்தில் வேலை கொடுக்கப்பட்டதை தெரியப்படுத்தினார். இதே மாரீஸ்வரி, வேலை கேட்டு மக்கள் குறைதீர் கூட்டத்திலும், மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டத்திலும் பலமுறை மனு அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நினைவுத்தூணைப் பற்றியெல்லாம் பேசக் கூடாது!

சாத்தான்குளத்தில் போலீஸாரின் தாக்குதலில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இறந்த சம்பவத்தில், ஜெயராஜின் மூத்த மகள் பெர்சிக்கு தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டதைப்போல எங்களின் குடும்பத்தினருக்கும் கல்வித்தகுதியின் அடிப்படையில் பணி வழங்கிட வேண்டும். உயிரிழந்தவர்களின் நினைவாக நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை சம்பந்தமாக முதல்வரைச் சந்திக்க வேண்டும் எனத் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் கோரிக்கை அளித்தனர்.

முதல்வர் பழனிசாமி

ஆனால், அந்தக் கோரிக்கையை ஆட்சியர் ஏற்கவில்லை. இந்நிலையில், முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருடன் இணைந்து ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களும் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். பின்னர், உயிரிழந்த 13 பேரில் தமிழரசன், ரஞ்சித், செல்வசேகர், மணிராஜ் ஆகியோரின் குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே முதல்வரைச் சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதில், வாயில் சுடப்பட்டு உயிரிழந்த 17 வயது மாணவி ஸ்னோலினின் தாயார் வனிதா ஆவேசமாகப் பேசக்கூடியவர் என்பதால் அவர் அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டது. கூட்டத்தில் கலந்துகொண்ட நான்கு பேரிடமும், ``வேலை சம்பந்தமா மட்டும்தான் பேசணும்.

நினைவுத்தூணைப் பற்றி எதுவும் பேசக் கூடாது" என்ற நிபந்தனையுடன் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். கடந்த ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதி வல்லநாடு மலைப்பகுதியில் ரௌடியைப் பிடிக்கச் சென்றபோது, ரௌடியால் வெடிகுண்டு வீசப்பட்டதில் உயிரிழந்த காவலர் சுப்பிரமணியனின் மனைவி புவனேஸ்வரிக்கு, அரசுப்பள்ளியில் உதவியாளருக்கான பணிநியமன ஆணையையும், ரூ.50 லட்சத்துக்கான காசோலையையும் வழங்கினார் முதலவர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், சொக்கன்குடியிருப்பில் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணனின் உதவியால் நிலத் தகராறில் அ.தி.மு.க-வினரால் கொல்லப்பட்ட செல்வனின் மனைவிக்கு அரசுத்தரப்பில் தருவதாக அறிவிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை, அரசு வேலை, பசுமை வீடு உள்ளிட்ட எந்தக் கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை.

பணி நியமன ஆணை பெறும் மறைந்த காவலர் சுப்பிரமணியனின் மனைவி புவனேஸ்வரி

ஸ்டாலின்தான் காரணம்!

ஆய்வுக் கூட்டத்தை முடித்துவிட்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``துப்பாக்கிச்சூட்டைப் பற்றி ஸ்டாலின் பேசுகிறார். ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு அனுமதி கொடுத்ததே தி.மு.க ஆட்சியில்தான். அப்போது தொழிற்துறை அமைச்சராக இருந்தவர் ஸ்டாலின். ஆலை விரிவாக்கத்துக்கு நிலம் அளிப்பது சம்பந்தமாக சட்டசபையில் அவர் பேசியது அவைக்குறிப்பில் இருக்கிறது. ஆலை விரிவாக்கத்துக்கு அனுமதி அளிக்கப்படாமல் இருந்தால் இது போன்ற சம்பவம் நடந்திருக்காது.

என்னை `போலி விவசாயி’ என்று விமர்சனம் செய்கிறார் ஸ்டாலின். நான் அடிப்படையில் ஒரு விவசாயி என்பது எல்லோருக்குமே தெரியும். அரசியல் தவிர்த்து எனக்கு விவசாயம் இருக்கிறது. ஸ்டாலினுக்கு என்ன தெரியும்... அவர் என்ன வேலை செய்துகொண்டிருந்தார்... தூத்துக்குடிக்கு அவர் வந்தபோது பதநீரைக் குடித்துவிட்டு `இனிப்பாக இருக்கிறதே... பதநீரில் சர்க்கரை சேர்ப்பீர்களா?’ எனப் பனைத் தொழிலாளிகளைப் பார்த்துக் கேட்டவர்தான் ஸ்டாலின். நான் ஒரு விவசாயி என்பதால்தான் தமிழகம் முழுவதும் குடிமராமத்துப் பணிகள், பல இடங்களில் தடுப்பணைகளைக் கட்டியிருக்கிறேன். தேசிய அளவில் நீர் மேலாண்மைக்கான விருதும் தமிழகத்துக்குக் கிடைத்திருக்கிறது” என்றார்.



source https://www.vikatan.com/news/politics/posters-pasted-by-dmk-party-shocked-the-chief-minister-in-thoothukudi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக