Ad

ஞாயிறு, 15 நவம்பர், 2020

கமலையே கடுப்பேற்றிய அனிதா; தாவரத்தாய் ரம்யா; குட்டை குழப்பி நிஷா! பிக்பாஸ் – நாள் 42

‘'மயிலிறகால் தடவி விசாரணையை மேற்கொள்கிறார் கமல்’' என்று நேற்றைய கட்டுரையில் எழுதியிருந்ததை சிறிது வாபஸ் வாங்க வேண்டியிருக்கிறது. ஆம். இன்று கையில் பிரம்பை எடுத்தார் கமல். ஆனால் அது மூர்க்கமான காவல்துறை அதிகாரியின் கையில் கிடைத்த பிரம்பு அல்ல. அம்மாவின் கையில் கிடைத்த பிரம்பு.

சற்று தூரத்தில் சேட்டையில் இறங்கிக் கொண்டிருக்கும் குழந்தையை நோக்கி, பிரம்பைத் தரையில் சற்று ஓங்கித் தட்டி எச்சரிப்பார் அம்மா. குழந்தை திகைத்து முகம் சுருக்கி அழுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும். அதற்குள் அம்மாவின் மனம் தாங்காது. ‘இல்லடா... இல்லடா’ என்று விரைந்து சென்று குழந்தையை கட்டியணைத்துக் கொள்வார். கமலின் விசாரணை முறையும் பொதுவாக இதுதான்.

போட்டியாளர்களின் சறுக்கல்களை அவர்களின் மனம் வலிக்காமல் சுட்டிக் காட்டுவார். அவர்கள் தங்களின் பிழையை உணர்ந்து சரணாகதி அடைந்தால் விட்டு விடுவார். மாறாக தொடர்ந்து வாக்குவாதம் செய்தால் நக்கலாகவோ அல்லது சற்று கடுமையைக் கூட்டியோ உபதேசம் செய்வார்.

பிக்பாஸ் – நாள் 42

இன்றைக்கு அனிதாவிற்கு கிடைத்ததும் அப்படியொரு அதிர்ச்சி வைத்தியம். கமலும் சரி, அங்குள்ள போட்டியாளர்களும் சரி, எத்தனையோ முறை அனிதாவின் அடிப்படையான குணாதிசயத்தைச் சுட்டிக் காட்டியும் அவர் மாறுவது போல் இல்லை. ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து இன்று கமல் மீதே தன் வழக்கமான புகாரை வைத்து விட்டார். ‘'என்னைப் பேசவே விட மாட்டேன்றார்’'... பிக்பாஸே உள்ளுக்குள் சற்று திகைத்துப் போயிருப்பார்.

அனிதாவின் அடுத்த டார்கெட் ஆடியன்ஸோ என்று தோன்றுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சமயத்தில், அதிலும் அனிதா ஏதேனும் பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில், நான் வீட்டில் உள்ள எவரிடமாவது பேசி விட்டால் அதற்கும் அனிதா கோபித்துக் கொள்வாரோ என்று கலவரமாக இருக்கிறது. நிலைமை அப்படி போய்க் கொண்டிருக்கிறது.

கமலின் இன்றைய விசாரணை சபையில் ‘சுள்’ளென்று காரத்தை உணர்த்துகிற காரக்குழம்பும் இருந்தது. வழக்கம் போல ‘வழவழ’வென்று போகிற வெண்டைக்காய் பொறியலும் நிறைய இருந்தது.

42-ம் நாளில் என்ன நடந்ததென்று பார்ப்போம்.

சுற்றுச்சூழலில் நிகழும் ஆபத்துக்களைப் பற்றி பேசத் தொடங்கியவர், "‘ஆரம்பிச்சிட்டான்யா இந்த ஆளு’ –ன்னு நெனச்சிப்பீங்க..." என்று சுயபகடி செய்து கொண்டு ''நாளைய தலைமுறைக்கு இயற்கை வளங்களை விட்டுச் செல்வது நம் கடமை'’ என்பது போல சொன்னது முக்கியமானது.

''ஒரு கஜானாவை காலியாக்கி செல்வது போல முந்தைய தலைமுறை இயற்கையின் அத்தனை வளங்களையும் சுரண்டிச் சென்றிருந்தால் இன்று நம் கதி என்ன? இன்றைய கதையைப் பார்ப்போம் என்கிற நோக்கில் எல்லாவற்றையும் சுருட்டிக் கொண்டேயிருந்தால் என்னதான் மிச்சமிருக்கும்?'’ என்று சுற்றுச்சூழல் வல்லுநர்களும் ஆர்வலர்களும் நெடுங்காலமாக கவலைப்படுகிறார்கள். இது போன்ற ஆரோக்கியமான பரப்புரையை கமல் தொடர்வது சிறந்ததே.

பிக்பாஸ் – நாள் 42

அகம் டிவி வழியாக உள்ளே வந்த கமல், யாரும் எதிர்பாராதவிதமாக வளர்ப்புச் செடிகளைப் பற்றி விசாரித்தார். '‘அது செத்துப் போச்சுங்க’' என்றார் பாலாஜி, எந்தவொரு கவலையும் இல்லாமல். சிறிது நேரத்திற்குப் பிறகு கமலுக்கு என்ன தோன்றிற்றோ தெரியவில்லை... '‘செடிங்களை எடுத்துட்டு வர்றீங்களா. பார்க்கணும்” என்று கேட்டு விட்டார். '‘ஹோம்ஒர்க் எழுதிட்டோம் சார்'’ என்று முன்பு கோரஸாக சொன்ன மாணவர்கள், பின்பு ஒவ்வொருவரின் நோட்டையும் ஆசிரியர் பிரித்துப் பார்க்கும் போது உதறல் அடைவதைப் போல ஒவ்வொருவரும் உதறலோடு அவரவர்களின் செடியை எடுத்து வந்தார்கள்.

“குத்துமதிப்பா எடுத்து வந்தீங்களா?'’ என்று கிண்டலடித்த கமல் "யார் செடி யார்துன்னு தெரியுமா” என்று கேட்க சிலருக்கு மட்டுமே அது தெரிந்தது. கேபி, அனிதா, ஆஜித் போன்றவர்கள் ‘'என் செடி எதுன்னு தெரியல சார்’' என்றார்கள். சண்டை போட அத்தனை நேரம் இருக்கும் போது ஒரு செடியைப் பார்த்துக் கொள்ள நேரம் இருக்காதா என்ன?

நம் வீடுகளிலும் இதுதான் நடக்கும். பிள்ளைகளோ அல்லது பெரியவர்களோ ஓர் உற்சாகத்தில் ஒரு செடியைக் கொண்டு வந்து வளர்க்க ஆரம்பிப்பார்கள். பின்னர் அது முறையாக பராமரிக்கப்படாமல் அல்லது முறையான வழிகளைப் பின்பற்றத் தெரியாமல் சீக்கிரம் வாடி குப்பைக்குச் சென்று விடும்.

சற்று அகம்பாவமாக தெரிந்தாலும், ‘'என் செடி செத்துப் போச்சு'’ என்று தன் வாக்குமூலத்தை பாலாஜி சுருக்கமாகத் தந்துவிட்டார். ஆனால் இதே விஷயத்தை ஆரி சுற்றிச் சுற்றி சொன்னார். அப்போது பலரின் மனதில் ஓடிக் கொண்டிருந்தது ரமேஷின் முகத்தில் வெளிப்படையாக தெரிந்தது போல. எனவே அவரை இதில் கோத்து விட்டார் கமல்.

"இல்ல இங்கயே இப்படி இருக்கறாரே. வீட்டில் என்னத்த வளர்க்கப் போறாரோ" என்பது போல் ரமேஷ் கிண்டல் செய்ய "நான் கின்னஸ் சாதனைலாம் செஞ்சிருக்கேன்" என்று விறைப்பாக சொன்னார் ஆரி. (அதெல்லாம் சரி தம்பி. செடிக்கு தண்ணி ஊத்தினியா?) சொல் வேறு செயல் வேறாக ஆரி இருக்கிறார் என்பது மக்களின் பொதுவான புகாராக இருந்தது. இப்போது அது நிரூபணம் ஆகி விட்டது. சுற்றுச்சூழல் பற்றி மிக ஆர்வம் கொண்டிருக்கும் ஆரி மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.

பிக்பாஸ் – நாள் 42
ஆனால், இந்த விவகாரத்தில் ஒன்று மட்டும் புரிந்தது. மற்றவர்கள் அலட்சியமாக விட்டுச் சென்றாலும் ரம்யா மட்டுமே அனைத்துச் செடிகளையும் தன் குழந்தைகளாக பார்த்துக் கொண்டு போஷித்து அதனுடன் அன்பாகப் பேசி வளர்த்திருக்கிறார். அதற்கான வழிமுறைகளையும் அறிந்து வைத்திருக்கிறார். '‘ரம்யா பார்த்துக்குவாங்க சார்'’ என்று பலரும் சொன்னார்கள். ''நான் செடிக்கு உரமா டீத்தூள் மட்டும் தவறாம தந்துடுவேன்'' என்றது சில நல்ல(!!!) உள்ளங்கள். இது இன்று வெளிப்பட்ட ரம்யாவின் இன்னொரு பரிமாணம். நாளாக நாளாக அம்மணியின் கிராஃப் மேலே சென்று கொண்டே இருக்கிறது. (என் ஸ்வப்னா… அதேதான்).

செடி மேட்டருக்கு முன்னால் நடந்தவை இவை. "சுச்சி... இந்த வீட்ல உணவுப்பாகுபாடு இன்னமும் இருக்கா?” என்று நிகழ்ச்சியின் துவக்கத்தில் கேட்டார் கமல். ‘திருடிடறாங்க, பதுக்கிடறாங்க’ என்றெல்லாம் கடுமையான குற்றச்சாட்டுகளை கேமராவின் முன்பு வைத்த சுச்சி, இப்போதோ ‘'அதெல்லாம் சால்வ் ஆயிடுச்சு’' என்றார் கூலாக. சுச்சி மட்டுமல்ல, பலரும் சபையில் இப்படித்தான் மென்று முழுங்கி விடுகிறார்கள். (சண்டையா... நாங்க பார்க்கலையே?!)

அடுத்ததாக சாப்பாடு குப்பையில் கொட்டப்பட்ட விஷயம். இதற்கு, ‘'மக்கள்... பசி... கொரோனா... நடந்தது என்ன'’ என்று ஆரி நீண்ட விளக்கம் அளிக்க முற்பட்ட போது ‘'மக்கள் அந்த எபிஸோடை ஏற்கெனவே பார்த்திருப்பாங்க...’' என்று கமல் இடைமறித்தார். '‘நானா இருக்கலாம்’' என்று சனம் சொன்ன வாக்குமூலத்தை ‘'என்னம்மா... இப்படிப் பண்றீங்களேம்மா?” என்பது போல் கிண்டலடித்தார் கமல். ‘'கடவுள் இல்லைன்னு சொல்லல... இருந்தா நல்லாயிருக்கும்னுதான் சொல்றேன்’' என்கிற பிரபல வசன பாணியிலிருந்து சனம் இன்ஸ்பயர் ஆகியிருக்கலாம். "சாப்பாட்டை நான் கொட்டலை. நானாவும் இருக்கலாம்” என்றார்.

பாலாஜியை மகனாக ஏற்க முடியாத சனத்தின் தத்தளிப்பு அடுத்து விசாரணைக்கு வந்தது. "என்னமோ தெரியல... அன்னிக்கு மூட்லயே இல்லை... சாரி" என்று நேரடி சரணாகதி அடைந்தார் சனம்.

பிக்பாஸ் – நாள் 42

"கலைஞர்கள் மாறி மாறி நடிப்பாங்க... சிவாஜியும் சாவித்திரியும் அண்ணன் தங்கச்சியா 'பாசமலர்கள்'ல நடிச்சாங்க. அதுக்கப்புறம் 'நவராத்திரி'ல அவங்களை காதலர்களாக பார்க்கும் போது ஏத்துக்கவே முடியல" என்றார் கமல். ‘மாறி மாறி நடிக்கலாம் என்கிறாரா... கூடாது என்கிறாரா... ஒரே குழப்பம். ஆனால், பாசமலருக்குப் பிறகு சிவாஜியும் சாவித்திரியும் காதலர்களாக நடித்த ஒரு திரைப்படம் தோல்வியடைந்தது. அவர்களை ஜோடியாகப் பார்க்க மக்கள் விரும்பவில்லை. பாசமலரின் தாக்கம் அப்படி!

‘பாசமலர்கள்’ என்ற விஷயம் வந்தவுடன் அதன் இடையில் பாலாஜியையும் ஷிவானியையும் சந்தடி சாக்கில் ஜாடையாக கிண்டலடித்தார் கமல்.

அடுத்ததாக ‘ஆப்பரேஷன் பாட்டி’ தோல்வியடைந்த விவகாரம். ‘'அதான் லக்ஷுரி பொருட்கள் கொடுத்துட்டாங்களே’' என்று பாலாஜி மிக அலட்சியமாக பதில் சொல்ல ஆரம்பித்தார். இந்த சீஸனின் மிக முக்கியமான போட்டியாளர் பாலாஜி. உடல் பலம் ஒரு பக்கம் இருந்தாலும் அறிவுக்கூர்மையும் சமயோசிதமும் கூடவே உள்ளவர். ஆனால் மிதமிஞ்சிய தன்னம்பிக்கையே அவரது வீழ்ச்சிக்குக் காரணமாக அமையலாம். ‘'தீபாவளி வாரமா இல்லாம மட்டும் போயிருந்தா தெரிஞ்சிருக்கும் சேதி.. உங்களுக்கு பாசிப்பருப்பு சாம்பார்தான்'’ என்பது போல் கமல் சற்று சூடானவுடன் "டாஸ்க் புரியாம சொதப்பிட்டேன் சார்... சாரி" என்று இறங்கி வந்தார் பாலாஜி.

கமல் எது சொன்னாலும், இதில் ஏதாவது உள்ளர்த்தம் இருக்குமோ? என்பது மாதிரியே பல சமயங்களில் சங்கடப்பட்டு நடுங்குகிறார் ரியோ. ‘'நீங்க கூட டாஸ்க்கை மத்தவங்களுக்கு விளக்கிச் சொன்னீங்க'’ என்று கமல் பாராட்டாக இவரை நோக்கிச் சொல்ல ‘'நானா?'’ என்று பேக்பென்ச் மாணவன் மாதிரி திகைத்துப் பார்த்தார் ரியோ. "சென்ராயன்... இதுக்கு நீங்க மூஞ்சை மகிழ்ச்சியா வெச்சுக்கணும். எதுக்கு பேய் படம் பார்க்கற எபெக்ட் தர்றீங்க... சிரிங்க” என்பது போல் கமல் கிண்டலடித்தவுடன் ‘ஹிஹி’ மோடிற்கு மாறி அசடு வழிந்தார் ரியோ.

அடுத்ததாக ஹானஸ்ட் ராஜ் விவகாரம். ‘'வெளில என்ன நடந்துதுன்னு எனக்குத் தெரியுமே?'’ என்று தோளை ஜாலியாக குலுக்கிக் கொண்டே கமல் சொல்ல சபை வெடித்து சிரித்தது. (உட்கார்ந்த சேரினாலா, சாய்ந்திருந்த நிலையினாலா அல்லது அணிந்திருந்த கோட்டினாலா... என்ன காரணம் என்று தெரியவில்லை. கமல் தலை ஏதோ மார்.ஃபிங் செய்து ஒட்ட வைக்கப்பட்டது போலவே ஒரு காட்சிப்பிழை).

பிக்பாஸ் – நாள் 42

கமலின் கிண்டலுக்கு பாலாஜியும் ஷிவானியும் திருதிருவென விழிக்க ஆரம்பித்தார்கள். பாலாஜியை எதை எதையோ சொல்லி சமாளிக்க முயல ‘யாரு பொழிப்புரை சொன்னாங்க?’ என்று வண்டியை மீண்டும் சரியான திசைக்குத் திருப்பினார் கமல். அப்போதும் பாலாஜிக்குப் புரியவில்லை அல்லது புரியாதது போல் பாவனை செய்தார். ‘இதனால் அறியப்படும் நீதி யாது?’ என்று கமல் ஹிண்ட் கொடுத்தாலும் ஷிவானியை காட்டிக் கொடுக்க பாலாஜிக்கு மனம் வரவில்லை. ‘கோபத்தைக் கண்ட்ரோல் பண்ணிக்கணும்’ என்றே சமாளித்துக் கொண்டிருந்தார். ‘பிறரின் தூண்டுதலின் பேரில் நாம் ஏவப்பட்ட ஆயுதமாக மாறி விடக்கூடாது' என்பதே இதன் தாத்பர்யம்.

இந்த விவகாரத்தில் ‘ஹானஸ்ட்’ என்கிற வார்த்தையை முதலில் பாலாஜி உபயோகப்படுத்தியதை கமல் நினைவுப்படுத்தினார். (இதே விஷயத்தை சம்பந்தப்பட்ட நாளின் கட்டுரையில் நாமும் தெரிவித்திருந்தோம்). ‘நானா சொன்னேன்’ என்பது போல் தாழ்ந்த குரலில் ஷிவானியிடம் பாலாஜியிடம் கேட்க, அவரோ ‘இருடா... சார் பார்த்துட்டே இருக்காரு’ என்கிற பின்பெஞ்ச் மாணவன் போல் உஷாராக இருந்தார்.

“முதல்ல திருடினவங்களை விட்டுட்டு எங்களை மட்டும் ஹானஸ்ட்–ன்ற வார்த்தையை உபயோகப்படுத்தி பேசினாங்க. எங்க பேரும் வந்தது சார். அதனாலதான்" என்று ஷிவானி விளக்கம் அளித்ததில் சுயநலம் மட்டுமே இருந்தது. அதாவது அவர் பெயர் சம்பந்தப்படவில்லையெனில் வழக்கம் போல் மெளனமாக இருந்திருப்பாரா... என்ன?

அந்தச் சமயத்தில் பாலாஜிக்காக ‘ஓவர் ரியாக்ட்’ செய்த சுச்சிக்கு தன் தவறு இப்போது தெரிந்து விட்டது. அதை சபையில் மிக நேர்மையாக ஒப்புக் கொண்டார். சுச்சி மீது சில விமர்சனங்கள் இருந்தாலும் சமயங்களில் வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்கிறார். பாலாஜியும் இதே அலைவரிசையில் இயங்குவதால் - பாலாஜியின் புறக்கணிப்பையும் தாண்டி - பாலாஜியை இவருக்குப் பிடித்திருக்கிறது போல. இந்த உரையாடலில் சுச்சி உபயோகித்த ‘டிரிக்கர்’ என்கிற வார்த்தைதான் தீர்ப்பின் திறவுகோல். பாலாஜிக்குப் புரிய வேண்டிய மேட்டர்.

பிக்பாஸ் – நாள் 42
அடுத்ததாக வண்டி ஆரியின் பக்கம் திரும்பியது. "‘ஒவ்வொருத்தரோட தப்பையும் நெத்தியில அடிச்ச மாதிரி சொல்லுவேன்’ என்று வீரமுழக்கம் எழுப்பிய ஆரியின் தலைமை எப்படி இருந்தது?" என்பது கமலின் கேள்வி.

‘அவன் குள்ளமாவும் இருப்பான்... உயரமாவும் இருப்பான்’ என்கிற மாதிரியே இதற்கு பலரும் சாட்சி சொன்னார்கள். “அவர் இந்த வாரம் யாருக்கும் அட்வைஸ் பண்ணாம இருந்தார் சார். அதுவே எனக்கு நிம்மதியா இருந்தது" என்று சர்காஸ்டிக்காக சொன்னார் பாலாஜி. "தமிழை வளர்க்கப் பாடுபட்ட அதே சமயத்தில் அன்பை சம்பாதிக்க ஜாக்கிரதையாகவும் இருந்தார்" என்று அனிதா பட்டும் படாமலும் போட்டுக் கொடுத்தார்.

சம்யுக்தாவின் குற்றச்சாட்டு நேரடியாக இருந்தது. "கிச்சன் டீம்ல பல வேடிக்கைகள் நடந்தன. அந்த அணிக்குள்ளேயே ஒற்றுமை இல்லை. சாப்பாடு லேட்டாக வந்தது" என்று குற்றம் சாட்டுவதின் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்தார். ஒன்று ஆரியின் மீதான பழிவாங்கல். இரண்டு ‘கடந்த வாரத்தில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம்’ என்கிற பெருமை.

‘அனிதாவை கிச்சன் பக்கம் அதிகம் காணோம்’ என்கிற சாமின் புகாருக்கு விளக்கம் சொல்ல ஆரம்பித்த சனம் "அனிதாவிற்கு டீ போடத் தெரியாது... நான்தான் போட்டேன்.. அதனால அப்படித் தெரிஞ்சிருக்கலாம்" என்று அனிதாவிற்கு சப்போர்ட் செய்தவர் டக்கென்று ‘சுச்சி – ரமேஷ்’ சண்டையை இடையில் நைசாக சபையில் போட்டுக் கொடுத்தார். ‘ஏம்மா இதை இழுக்கறீங்க..? என்று ஜெர்க் ஆன ரமேஷ் ‘பாத்ரூம் கழுவுறதில நான்தான் சார் சீனியர்’ என்று வெள்ளந்தியாக சொல்ல சபையே விழுந்து விழுந்து சிரித்தது.

ஆரியின் தலைமை தொடர்பாக கலந்து கட்டி பல கருத்துகள் வெளிப்பட்டாலும் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது அவருடைய தலைமை சிறப்பாகவே இருந்தது. அவர் களத்தில் இறங்கி பல பணிகளைச் செய்திருக்கிறார். இது தொடர்பாக சுச்சியின் வாக்குமூலம் ஆரிக்கு சாதகமாக அழுத்தமாக அமைந்தது. எனவே ‘நீங்கள் சிறப்பாகவே செயல்பட்டீர்கள்’ என்று கமல் சொன்னவுடன்தான் ஆரியின் முகத்தில் சற்று சாந்தம் வந்தது. அதுவரை டென்ஷனாகவே இருந்தார்.

பிக்பாஸ் – நாள் 42

‘ஒரு தலைமையாளர் ஆக்ரோஷமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அன்பினாலும் சாதிக்கலாம்’ என்று கமல் சொன்னது சிறப்பு. "ஒவ்வொரு டீம்லயும் கேப்டன் இருந்தாலும்... அவங்களுக்குள்ள பேசத் தயங்கி என்னையே எல்லாத்துக்கும் கூப்பிட்டாங்க" என்று ஆரி சொன்னது முக்கியமான விஷயம். ஆனால் இந்த விஷயத்தில் அவர் அர்ச்சனாவை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஹவுஸ் கீப்பிங் பிரச்னை வந்த போது தான் இறங்காமல் சம்பந்தப்பட்ட கேப்டனை (வேல்முருகன்) களத்தில் முதலில் இறக்கி வேடிக்கை பார்த்தார்.

ஏறத்தாழ இந்த விவகாரம் முடிவிற்கு வரும் நேரத்தில் "சார்... நான் ஒண்ணு சொல்லணும்" என்று அனிதா ஆரம்பிக்க கமலின் முகத்தில் சிறிய டென்ஷன் தெரிந்தது. “எங்க அணில நாங்க ஒத்துமையா யோசிக்கலைன்னு சொல்றாங்க... அப்படி இருக்க அவசியமில்லை" என்று அனிதா தனது விளக்கத்தை இழுத்துக் கொண்டே போக “இந்த விஷயத்தை நீங்க ஏற்கெனவே சொல்லிட்டீங்க. எனக்குப் புரிஞ்சுடுச்சு... மத்தவங்களுக்குப் புரியலைன்னா அவங்க கிட்ட நீங்க அப்புறமா பேசிடுங்க" என்று சொன்ன கமல், 'என்னை விடுங்க’ என்று முகத்தில் சற்று கடுமையைக் காட்டியவுடன் அனிதாவின் முகம் சுருங்கியது.

‘உங்க டைமை வேஸ்ட் பண்ண விரும்பலை’ என்று சொல்லி தன் வாதத்தை நேற்று அனிதா நிறுத்திக் கொண்டதற்கு கமலின் பழிக்குப் பழி போல் இன்று அமைந்து விட்டது. ‘என் டைமை வேஸ்ட் பண்ணாதீங்க’ என்று அனிதாவிற்கு சொல்லாமல் சொன்னார் கமல்.

கமல் எழுந்து சென்றவுடன் ‘டேய் பாருடா... என்னை பேசவே விடலைடா...’ என்று சனத்திடம் அனிதா அனத்திய போது உலகமே ஒரு கணம் திகைத்து நின்றிருக்கும். தொடர்ந்து இத்தனை முறை பலர் சொல்லியும் அனிதாவிற்கு ஏன் தன்னுடைய குறை புரியவேயில்லை? (அய்யோ இருங்கப்பா... நானும் நிறுத்திக்கறேன். அனிதா எங்கிருந்தோ என்னை முறைச்சுப் பார்க்கற மாதிரியே இருக்கு.)

‘'விஜயதசமி மேட்டர்ல கூட உன்னைத்தானே கமல் சார் ஆதரிச்சு பேசினாரு... உன் கிட்ட குறை இருக்குன்னு நெனக்கறாரு போல'’ என்று சனம் விதம் விதமாக அனிதாவை ஆறுதல் செய்ய முயன்றும் அனிதாவின் அனத்தல் குறையவில்லை.

பிக்பாஸ் – நாள் 42
‘ஸ்ட்ரிக்ட் ஆஃபிஸர் ஆரிக்கே இந்த நிலைமைன்னா... நம்ம கதி என்னாவாகப் போவுதோ?’ என்று உள்ளுக்குள் நடுங்கி அமர்ந்திருந்த ஆஜித்திற்கு தைரியம் சொல்லி அவருக்கு மேலும் பீதியைக் கிளப்பினார் கமல்.

பிக்பாஸ் விட்டுட்டாலும் நான் விடமாட்டேன். இந்த வாரம் 'boring performer’ யாரு?’ என்று கமல் அடுத்த விவகாரத்தை ஆரம்பித்தவுடன் ‘'சாமி... என்னை மன்னிக்கணும்'’ என்று முழு சரணாகதி அடைந்து விட்டார் சனம்.

இந்தச் சமயத்தில்தான் ஓர் அதிசயம் நடந்தது. பாலாஜியை போட்டுக் கொடுக்க ரமேஷ் முயன்றார். 'ஏண்டாப்பா... இந்த சீஸன் முழுக்க அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட் போல பின்னாடியே உலவிட்டு... ஹீரோவான என்னை போட்டுக் கொடுக்கறியா. காலக்கொடுமைடா இதெல்லாம்...’ என்பது போன்ற முகபாவத்துடன் இருந்த பாலாஜி எழுந்து பேசத் துவங்கினார். "சார்... இந்த வாரம் நடந்த பல டாஸ்க்ல நான்தான் வின்னர். லக்ஸரி பட்ஜெட்ல மட்டும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா கிரியேட்டிவிட்டியைப் போட்டேன். அது தப்பாயிடுச்சு” என்று பாலாஜி சொன்ன விளக்கத்தை கமல் ஏற்றுக் கொண்டார்.

அகம்பாவம், மிதமிஞ்சிய தன்னம்பிக்கை போன்றவற்றை கழித்து விட்டுப் பார்த்தால் பாலாஜியின் இருப்பு என்பது பிக்பாஸ் வீட்டிற்கு முக்கியமானது. லக்ஷுரி டாஸ்க்கை கூட பாலாஜியை கழித்து விட்டுப் பார்த்தால் பெரும்பாலும் வெறுமைதான் மிஞ்சும். ஒரு கதையில் வில்லன் சிறந்தமுறையில் இயங்கினால்தான் அது வெற்றி பெறும். அந்த வகையில் பிக்பாஸ் வீட்டின் இயக்கத்தை பெரும்பாலான சமயங்களில் – அது சரியோ... தவறோ - பாலாஜிதான் உயிர்ப்பாக வைத்திருக்கிறார்.
பிக்பாஸ் – நாள் 42

ரமேஷ் இவரைக் குறை சொல்ல முயல்வது எப்படியிருக்கிறதென்றால்... ‘சட்னி கூட அதை இட்லி என்று நம்பாது’ என்கிற காமெடிதான்.

சந்தடி சாக்கில் சயன்டிஸ்ட்டின் குடும்பத்தை ‘லூஸூ குடும்பம்’ என்பது போல் ரமேஷ் சொல்லி விட, ரியோவும் நிஷாவும் ஜாலியாக எழுந்து வந்து ஆட்சேபித்தார்கள். "பாலாஜி சொதப்பியது வேற கதை. ஆனா சனம் இதில் கலந்து கொள்ளவேயில்லை" என்கிற காரணத்தை கமல் சொல்ல, சனமும் இதற்கு முழுமனதாக ஒப்புக் கொண்டார்.

The Book of Mirdad

லெபனானைச் சேர்ந்த எழுத்தாளரும் தத்துவியலாளருமான நைமி, உருவகம் சார்ந்து எழுதிய நூல் இது. உலகின் மிக முக்கியமான தத்துவ நூல்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ‘இதயத்தால் படிக்க வேண்டிய நூல். பல்லாயிரம் முறைக்கும் மேல் படிக்க வேண்டிய நூல்’ என்று ஓஷோ இதை மிகவும் பாராட்டியிருக்கிறார். "புவியரசு மிக அற்புதமான மொழிபெயர்ப்பாளர். அவருடைய தீவிர முயற்சியால்தான் ‘ஹேராம்’ திரைப்படத்தின் திரைக்கதை நூலாக வெளிவந்தது" என்கிற தகவலையும் கமல் வெளியிட்டார்.

Also Read: பட்டாசுக் கடையான வீக்கெண்டு பஞ்சாயத்து; கமல் கையில் எடுத்தது பிரம்பா மயிலிறகா? பிக்பாஸ் – நாள் 41

அடுத்து அகம் டிவி வழியாக உள்ளே வந்த கமல், "இந்த வாரம் எவிக்ஷன் இல்லை. இருந்தாலும் நாமினேஷன் நடந்தது. ‘யாரு உங்களை நாமினேட் செய்திருப்பாங்க’ன்னு நெனக்கறீங்க” என்கிற கேள்வியை முன்வைக்க இதை சரியாகப் புரிந்து கொள்ளாத நிஷா, "நான் சனத்தை நாமினேட் பண்ணேன்" என்று வெள்ளந்தியாக வாக்குமூலம் தர ஆரம்பிக்க அவரை ரியோ தடுத்து நிறுத்தினார். காது கேட்காத ஒருவரின் காதில் கவுண்டமணி கத்துவது போல ரியோ ஆரம்பிக்க... 'புரியதுடா... பக்கி’ என்பது போல் அவரை அடக்கினார் நிஷா.

ஆனால் இது வேடிக்கையான விளையாட்டாக இருந்தது. ஒரிஜினல் நாமினேஷன் பட்டியலையும் இப்போது இவர்கள் சொன்ன பெயர்களையும் வைத்து ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த வேடிக்கை நன்கு புரியும். கமல் சொன்ன கேள்வியை நிஷாவால் புரிந்து கொள்ள முடியவில்லையென்றாலும் அவருடைய யூகம் சரியாகவே இருந்தது. அவரை யாரும் நாமினேட் செய்யவில்லை. ‘என் பெயரைத்தான் சொல்லியிருப்பாங்க’ என்று சுச்சியை முன்னிட்டு சொன்ன கேபியின் யூகம் மிகச்சரியானது.

பிக்பாஸ் – நாள் 42

ஒரிஜினல் பட்டியலில் சுச்சி மற்றும் அனிதாவின் பெயர்கள்தான் அதிகம் அடிபட்டிருந்தன. "ஓகே... நாளைக்கு நிச்சயம் நாமினேஷன் இருக்கும். இதை அதுக்கான ரிகர்சலாக வெச்சுக்கங்க. Enjoy your week" என்று கமல் விடைபெறத் துவங்கும் போது, "அதான் குட்டையை நல்லா குழப்பிட்டீங்களே... இனிமே என்னத்த எஞ்சாய் பண்றது" என்று நிஷா அலுத்துக் கொண்டது நல்ல காமெடி.

இந்த நாமினேஷன் விளையாட்டு போட்டியாளர்களுக்குள் மேலும் பல குழப்பங்களை ஏற்படுத்தலாம். இதனால் புதிய விரோதங்கள் மலரலாம். பிக்பாஸிற்கும் அதுதானே வேண்டும்?!


source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/ramya-scores-balaji-surrenders-anitha-accuses-bigg-boss-tamil-season-4-day-42-highlights

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக