Ad

வியாழன், 8 அக்டோபர், 2020

தோனியின் கோல்ஃப் நண்பன்... கேதர் ஜாதவ் ஐபிஎல் சம்பவக் குறிப்புகள்! #KedarJadhav

கேதர் ஜாதவ்... சிஎஸ்கே ரசிகர்கள் மட்டுமல்ல... ஒட்டுமொத்த உலக கிரிக்கெட் ரசிகர்களையும் தன்னைப்பற்றி பேசவைத்துக்கொண்டிருக்கும் தற்போதைய ட்ரெண்டிங் நாயகன். ட்விட்டர், ஃபேஸ்புக்கில் இவரைப்பற்றிய கமென்ட்டுகள் களைகட்டுகின்றன. யூடியூபில் இவரின் 'குறும்பு' வீடியோக்கள் ட்ரெண்ட் ஆகின்றன என கேதாரை ரவுண்டு கட்டி அடிக்கிறார்கள் கிரிக்கெட் ரசிகர்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸின் தொடர் தோல்விகளுக்குப் பல காரணங்கள் இருந்தாலும் அதில் முக்கியமானது கேதர் ஜாதவுக்கு வழங்கப்படும் முக்கியத்துவம். "இதுக்கு 10 பேரோடவே விளையாடலாம்" என்கிற ரேஞ்சில்தான் கேதரின் பங்களிப்புகள் இருக்கின்றன. ஆனால், தொடர்ந்து சென்னையின் எல்லா போட்டிகளிலும் விளையாட வைக்கப்படுகிறார் கேதர்.

Kedar Jadhav

இதுவரையிலான ஆறு போட்டிகளில் நான்கு போட்டிகளில்தான் கேதர் ஜாதவின் பேட்டிங்கை கண்டுகளிக்கும் பாக்கியம் ரசிகர்களுக்கு கிடைத்திருக்கிறது. இந்த நான்கு போட்டிகளில் 59 பந்துகளை சந்தித்து 58 ரன்களைக் குவித்திருக்கிறார்(!!!). தலைவனின் இந்த சீசன் டாப் ஸ்கோர் 21 பந்துகளில் 26 ரன்கள்.

இந்த கேதர் யார் என்பதை நேஷன் மட்டுமல்ல, உலகமே வான்ட்ஸ் டு நோ என கேட்பதால் அவை மட்டும் இங்கே...

கேதர் ஜாதவ் பயணக்குறிப்புகள்!

மஹாராஷ்டிராவின் புனேவில் பிறந்தவர் கேதர் ஜாதவ். டென்னிஸ் பால் ப்ளேயரான ஜாதவுக்கு 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகளில் மஹாராஷ்டிரா அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், இப்போது போலவே அப்போதும் மஹாராஷ்டிராவுக்காகப் பெரிய இன்னிங்ஸ் எதுவும் ஆடாமலேயே, சீனியர் அணிக்குள் இடமும் கிடைக்கிறது. 2012-ல் உத்திரப்பிரதேசத்துக்கு எதிரான ரஞ்சி போட்டியில் 327 ரன்கள் அடிக்கிறார். உத்திரப்பிரதேச அணியில் புவனேஷ்வர் குமார், பியூஷ் சாவ்லா என நல்ல பெளலர்களுக்கு எதிராக அடிக்கப்பட்ட கேதரின் இந்த ஸ்கோர் கவனம் பெறுகிறது.

தோனியுடன் கேதர்
2013/2014 ரஞ்சி சீசனில் விஸ்வரூபம் எடுக்கிறார். ஆறு சதங்கள் விளாசி 1,223 ரன்களைக் குவிக்கிறார்‌. இவருடைய பர்ஃபாமென்ஸால் மட்டுமே 92 ஆண்டுகளுக்குப் பிறகு ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டிக்குள் நுழைகிறது மஹாராஷ்டிரா. கேதர் ஜாதவுக்கு இந்திய அணிக்கான அழைப்பு வருகிறது

தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியை தோனி தலைமையிலான அணியில் 2014, நவம்பரில் இலங்கைக்கு எதிராக ஆடினார். முதல் டி20 போட்டியை, 2015-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக ஆடினார். பின்னர், ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 87 பந்துகளில் 105 ரன்களை அடித்ததுதான் கேதரின் பேர் சொல்லும் சர்வதேச இன்னிங்ஸ். டி20 போட்டிகளில் இப்படி எந்தப் பேர் சொல்லும் இன்னிங்ஸும் இதுவரை விளையாடியது கிடையாது!

ஐபிஎல் டைரி!

ரஞ்சி போட்டிகளில் விளையாடுவதற்கு முன்பாகவே பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸின் இளம் வீரர்களைப் பட்டைத்தீட்டும் பாசறையில் இருந்தார் கேதர். அங்கிருந்துதான் 2010 ஐபிஎல் போட்டிகளில் டெல்லி டேர்டெவில்ஸ் கேதரை ஏலத்தில் எடுத்தது. ஆனால், ப்ளேயிங் லெவனில் கேதரை ஆரம்பத்தில் சேர்க்கவேயில்லை கேப்டன் கெளதம் கம்பீர். முதல் வாய்ப்பு, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸுக்கு எதிராக கம்பீர் விளையாடமுடியாத காரணத்தால் கிடைத்தது. முதல் போட்டியிலேயே 29 பந்துகளில் 50 ரன்கள் அடித்து டெல்லியை வெற்றிபெறவைத்துவிட்டார் கேதர். இந்த ஒரே இன்னிங்ஸை வைத்துக்கொண்டு அடுத்த 5 போட்டிகளிலும் கேதர் ஜாதவ் சொதப்ப, அவரை பென்ச்சில் உட்காரவைத்தார் கம்பீர்.

2011 சீசனில் கொச்சி, கேதர் மீது நேசம் கொண்டது. இந்தத் தொடரில் கேதருக்கு மூன்று வாய்ப்புகளை வழங்கினார் கேப்டன் ஜெயர்வர்தனே. மூன்றிலுமே தலைவன் கேதர் சிங்கிள் டிஜிட்டில் சம்பவங்கள் செய்ய மீண்டும் பென்ச்சுக்குப் போனார். இடையில் ஓர் ஆண்டு வாய்ப்பில்லாமல் இருந்தவரை ரஞ்சி பர்ஃபாமென்ஸ்கள் காராணமாக டெல்லி அணியே மீண்டும் 2013 சீசனுக்கு அணிக்குள் எடுத்துக்கொண்டது. ஆனால், 2013, 2014 என இரண்டு சீசன்களிலுமே கேதருக்கு சம்பவங்கள் செய்ய வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

தோனியுடன்...
2015 சீசனின் முதல் போட்டியிலேயே கேதரை ப்ளேயிங் லெவனுக்குள் சேர்த்துக்கொண்டார் கேப்டன் டுமினி. அந்த சீசன் முழுக்க டெல்லியின் எல்லா போட்டிகளிலுமே விளையாடிவரின் ஒரே இன்னிங்ஸ் மட்டும்தான் குறிப்பிடத்தகுந்தது. ஹைதராபாத் அணிக்கு எதிராக 34 பந்துகளில் 63 ரன்கள் அடித்து கடைசிவரை நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்தார் கேதர். ஆனால், அந்தப் போட்டியிலும், சேஸிங்கில் கடைசி இரண்டு ஓவர்களிலும் கேதர் சிங்கிள்களால் மிரட்ட 6 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி தோல்வியடைந்தது.

Also Read: தோனி, நியாயமாரே... பிராவோவுக்குப் பதில் கேதர் ஜாதவா... தலைவனுக்கு என்னதான் ஆச்சு?! #KKRvCSK #Dhoni

அடுத்து ஆண்டே டெல்லி கழற்றிவிட, 2016 சீசனுக்கு பெங்களூருவுக்குப் போனார் கேதர். பெங்களூருவில் இரண்டு ஆண்டுகள் தாக்குப்பிடித்தார். 2017தான் கேதரின் ஐபிஎல் கரியரில் முக்கியமான ஆண்டு. இந்த சீசனில் தன்னை வெளியேற்றிய டெல்லி அணிக்கு எதிராக 37 பந்துகளில் 69 ரன்கள் அடித்து பெங்களூரு அணியை வெற்றிபெறவைத்தவர், அதன்பிறகு சில இன்னிங்ஸ்களில் 30-40 ரன்கள் அடித்தார். இந்த சீசனில்தான் அதிகபட்சமாக 267 ரன்கள் அடித்தார் கேதர்.

சிஎஸ்கே சம்பங்கள்!

2018-ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இவரின் உண்மையான மதிப்பை உணர்ந்து 7.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. மும்பையுடனான முதல் போட்டியில் காயம் ஏற்பட பெவிலியனுக்குப்போனவர் கடைசி ஓவரில் இறங்கி ஒரு சிக்ஸர் அடித்து சென்னையை வெற்றிபெறவைத்தார். சென்னையை கேதர் வெற்றிபெறவைத்த ஒரே போட்டி இதுதான். அதுவும் கேமியோதான். அந்தப் போட்டியோடு காயம் காரணமாக அந்த சீசன் முழுக்க விளையாடவே இல்லை. கடந்த ஆண்டு சொல்லிக்கொள்ளும்படியாக எந்த பர்ஃபாமென்ஸும் கொடுக்காத கேதரை எப்படி சென்னை அணி தக்கவைத்துக்கொண்டது என்கிற சந்தேகம் இருந்த நிலையில், 2020 சீசனில் அவரைத்தொடர்ந்து 6 போட்டிகளில் விளையாடவைத்து ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார் தோனி.

தோனியுடன் கேதர் ஜாதவ்

கேதர் ஜாதவ் தோனியின் நெருங்கிய நண்பர் என்பது குறிபிடத்தக்கது. கிரிக்கெட் வீரர்களில் ஆர்பி சிங்கும், ஜாதவும் மட்டுமே தோனிக்கு நெருக்கம். தோனியுடன் தொடர்ந்து கோல்ஃப் விளையாடுவது கேதரின் பொழுதுபோக்கு.

கேதரின் திருவிளையாடல்கள் இனியும் தொடருமா என்பது சனிக்கிழமை பெங்களூருவுக்கு எதிரானப் போட்டியில் தெரிந்துவிடும்.


source https://sports.vikatan.com/ipl/ipl-2020-who-is-kedar-jadhav-read-his-career-history

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக