``பிற மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் பணி வழங்கிவரும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் பிற மாநிலத்தவர்கள் அதிக எண்ணிக்கையில் அரசுப் பணிகளில் நியமிக்கப்படுவது ஏன்?''
இப்படியொரு கேள்வியை எழுப்பியிருப்பது தமிழர் உரிமை சார்ந்து போராடும் இயக்கங்களோ, மாநில சுயாட்சி பேசும் அரசியல் கட்சிகளோ அல்ல...சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள்தான் இப்படியொரு கேள்வியை தமிழக அரசை நோக்கி எழுப்பியிருக்கிறார்கள்.
எப்போது, ஏன்?
ஊட்டி ஆயுதத் தொழிற்சாலையில், கெமிக்கல் பிராசஸிங் பிரிவில் 140 பணியிடங்களை நிரப்ப 2015-ல் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. அந்தப் பணிக்கான எழுத்துத் தேர்வில் ஓட்டப்பிடாரத்தைச் சேர்ந்த சரவணன் 40 மதிப்பெண்கள் பெற்றார். ஆனால், அவரைவிடக் குறைவான மதிப்பெண் பெற்ற வெளிமாநிலங்களைச் சேர்ந்த ஆறு பேருக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது. அந்த ஆறு பேரின் பணி நியமனத்தை ரத்துசெய்யக் கோரியும், தனக்குப் பணி வழங்கக் கோரியும் சரவணன், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அவருக்குப் பணி வழங்க உத்தரவிட்டார். ஆனால், நீதிபதியின் ஆணையை ரத்துசெய்யக் கோரி ஆயுதத் தொழிற்சாலை சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போதுதான் நீதிபதிகள், இப்படியொரு கேள்வியைத் தமிழக அரசை நோக்கி எழுப்பியிருக்கின்றனர்.
`தமிழ்நாட்டு வேலைகளில் தமிழர்களுக்கு அல்லது தமிழ்நாட்டு மக்களுக்குத்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும்' என்று தமிழ்நாட்டில் தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க, விடுதலைச் சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தமிழ்த் தேசியப் பேரியக்கம், திராவிடர் கழகம் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் கோரிக்கையை முன்வைத்து வந்தநிலையில், தற்போது உயர் நீதிமன்றமும் இப்படியொரு கேள்வியை தமிழக அரசை நோக்கி எழுப்பியிருப்பது மிகப்பெரிய விவாதமாகியிருக்கிறது.
இந்தநிலையில், தமிழ்நாட்டில் பல வருடங்களாக இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களையும் மாநாடுகளையும் நடத்திவரும் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசனிடம் பேசினோம்.
``உயர் நீதிமன்ற நீதிபதிகளின் விமர்சனங்களையும் கேள்விகளையும் எங்கள் அமைப்பின் சார்பாக 2005-ம் ஆண்டிலிருந்து தமிழ்நாடு அரசை நோக்கிக் கேட்டுவருகிறோம். கடந்த 2018 பிப்ரவரி 3-ம் தேதி, சென்னை, சேப்பாக்கம் அண்ணா அரங்கத்தில் இதற்காகவே `தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே...’ என்ற தலைப்பில் பெரும் மாநாடு ஒன்றை நடத்தி, அதில் தீர்மானம் போட்டு, மற்ற மாநிலங்களிலுள்ள மண்ணின் மக்கள் வேலை உரிமைக்கான சட்டங்களைத் தொகுத்து நூலாக வெளியிட்டோம். அந்தத் தீர்மானத்தையும், அந்த நூலையும் 2018, பிப்ரவரி மாதமே தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் நேரில் கொடுத்தோம். ஆனால், தமிழ்நாடு அரசு தமிழர்களின் வேலை வாய்ப்பு பறிபோவதைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் அயல் மாநிலத்தவர்களின் ஆக்கிரமிப்புக்கு ஆதரவாகவே செயல்பட்டுவருகிறது. அதை உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
மண்ணின் மக்களுக்கான வேலை உரிமைக்கு கர்நாடகம், குஜராத், மகாராஷ்டிரா போன்ற மற்ற மாநிலங்களில் சட்டம் இருப்பதைப்போல், தமிழ்நாட்டுக்கும் சட்டம் வேண்டும். தமிழ்நாடு அரசுப் பணிகளில் 100 விழுக்காடு தமிழர்களுக்கு வழங்க வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசுத் துறைகளில் 90 விழுக்காடு வேலைகளை தமிழர்களுக்கு வழங்க வேண்டும். அவற்றில் 10 விழுக்காட்டுக்கு மேலுள்ள வெளியாரை வெளியேற்ற வேண்டும். தமிழ்நாட்டு தனியார்துறை வேலைகளில் 90 விழுக்காடு தமிழர்களுக்கே வழங்கப்பட வேண்டும். நாங்கள் நவம்பர் 1-ம் தேதி முதல் இதற்காக போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம்’’ என்றார் அவர்.
இந்த வழக்கின் விசாரணையில் மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுப்பையா ``ஆயுதத் தொழிற்சாலை பணியில் 140 பணியிடங்களில் 50 சதவிகிதம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்” என்று கூற, அப்போது உடனடியாகக் குறிக்கிட்ட நீதிபதி என். கிருபாகரன், ``தமிழ்நாட்டுக்கு என்ன பிச்சை போடுகிறீர்களா?’’ என்று மிகக் காட்டமாகக் கேட்டிருக்கிறார்.
நீதிபதிகள் இந்த விஷயத்தில் இவ்வளவு தீவிரமாகக் கருத்து தெரிவிக்கக் காரணம் என்ன?
வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் நாராயணனிடம் பேசினோம்.
``வட மாநில இளைஞர்கள், அரசுத் தேர்வுகளில் இந்தியில் ஃபெயிலாவதும், தமிழில் அதிக மதிப்பெண்கள் எடுத்து பாஸாவதும் இயல்பாகவே இந்தத் தேர்வு முறைகளிலுள்ள முறைகேடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டிவிடுகின்றன. இங்கு இருக்கும் அரசுத்துறைகளில் வெளிமாநிலங்களிலிருந்து வருபவர்களை உள்நுழைத்துவிடுகின்றனர். இந்த முறைகேடுகள் அரசியல் காரணங்களுக்காகவும் நடைபெறுகின்றன. தவிர, பிற மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் இது போன்ற முறைகேடுகளுக்குத் துணைபோகின்றனர்.
Also Read: ``பிரிவினை பேசும் சீமான், மணியரசன் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்?''- சி.பி.ராதாகிருஷ்ணன்
தபால்துறை, எஸ்.பி.ஐ வங்கித் தேர்வுகளில் நடந்த முறைகேடுகள்கூட பட்டவர்த்தனமாக வெளிப்பட்டன. நீதிபதிகளும் இவற்றையெல்லாம் கவனித்துதான், தற்போது அரசை நோக்கிக் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். இது வரவேற்கக்கூடியது.
அரசு வேலைகளில் மண்ணின் மக்களுக்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பாக சட்டம் இயற்றப்பட்டுவிட்டால், இது போன்ற முறைகேடுகளில் ஈடுபவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும். மண்ணின் மைந்தர்களின் வேலைவாய்ப்பும் உறுதி செய்யப்படும். அதனால், தமிழக அரசு உடனடியாக, சட்டமியற்றுவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும்'' என்றார்.
`தற்போது இதற்காகக் குரல் கொடுத்துவரும் தி.மு.க., ஏற்கெனவே ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருப்பதுபோல சட்டமியற்றத் தவறிவிட்டது’ எனச் சிலர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து, தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணனிடம் கேட்டோம்.
``குற்றச்சாட்டுகளை முன்வைப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால், இந்தி எதிர்ப்பு, காவிரி உரிமை என ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு பிரச்னை முதன்மையானதாக இருக்கும். அந்தவகையில், தற்போதுதான் இந்த விவகாரம் முதன்மையான விவகாரமாக மாறியிருக்கிறது. அதனால், தமிழக மக்களின் நலனுக்காக, மாநில சுயாட்சிக்காகப் போராடும் அனைவரும் இணைந்து போராட வேண்டிய காலகட்டம் இது. தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் நிச்சயமாக இது சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார் அவர்.
நீதிபதிகள் தமிழக அரசை நோக்கி எழுப்பியிருக்கும் கேள்விகள் குறித்து, அ.தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வனிடம் பேசினோம்.
``மத்திய அரசு வேலைவாய்ப்புகளில், தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்கான கோரிக்கைகளை முன்வைக்க இருக்கிறோம். அது குறித்து சட்டமியற்றவும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன’’ என்றார் அவர்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/madras-hc-raises-question-over-preference-for-tamils-in-government-jobs
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக