கொரோனா பாதிப்பில் தொடர்ந்து அமெரிக்கா முதலிடத்தில் இருந்தாலும், அதிபர் தேர்தல் களமும் சூடுபிடித்திருக்கிறது. நவம்பர் மாதம், அமெரிக்காவின் அதிபர் மற்றும் துணை அதிபர் பதவிகளுக்கானத் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. இதில், அதிபர் பதவிக்கு குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ட்ரம்ப்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிடுகின்றனர். இதேபோல், துணை அதிபர் பதவிக்கு ட்ரம்ப் கட்சி சார்பில் மைக் பென்ஸ், ஜோ பைடன் கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் ஆகியோரும் போட்டியிடுகின்றனர். அதிபர் வேட்பாளர்களிடையேயான நேரடி விவாதம் முடிந்திருக்கும் நிலையில், துணை அதிபர் வேட்பாளர்கள் இடையிலான நேரடி விவாதம் நடந்தது.
சால்ட்லேக் சிட்டியிலுள்ள உடா பல்கலைக்கழகத்தில் துணை அதிபர்களுக்கான நேருக்கு நேர் விவாதம் தொடங்கியபோது, ``நமது நாட்டின் வரலாற்றில், எந்தவோர் அதிபர் நிர்வாகத்தின்போதும் இல்லாத மிகப்பெரிய தோல்வி என்ன என்பதை அமெரிக்க மக்கள் அறிந்திருப்பார்கள்’’ என்று ட்ரம்ப் கொரோனாவைக் கையாண்டவிதத்தைக் குற்றம்சாட்டிப் பேசினார் கமலா ஹாரிஸ்.
இந்தத் தேர்தலில் துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடும் கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றால், அமெரிக்க வரலாற்றில், `முதல் பெண் துணை அதிபர்' என்ற சாதனையைப் படைப்பார். மேலும், `முதல் இந்திய வம்சாவளிப் பெண் துணை அதிபர்' என்ற பெருமையையும் அவர் பெறுவார். இரண்டு கட்சி வேட்பாளர்களும் அமெரிக்கா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்துவருகின்றனர்.
கடந்த மாதம் ஜனநாயகக் கட்சி துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ், கொரோனா தடுப்பு விவகாரத்தில் ட்ரம்ப் தோற்றுவிட்டதாக விமர்சித்திருந்தார். `அவரிடம் இந்த வைரஸைத் தடுக்க எந்தத் திட்டமும் இல்லை’ எனவும் குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பதிலளிக்கும்விதத்தில் பேசிய ட்ரம்ப், ``அமெரிக்க மக்கள் கமலா ஹாரிஸை விரும்பவில்லை. அமெரிக்காவின் முதல் பெண் அதிபராக நிச்சயம் அவர் தேர்ந்தெடுக்கப்பட மாட்டார். மீறி, அவர் தேர்ந்தெடுக்கப்படுவாரென்றால், அது அமெரிக்காவுக்குப் பெரும் அவமானமாக அமையும். அமெரிக்கர்களால் அவரை ஏற்றுக்கொள்ள முடியாது’’ என்றார்.
Also Read: US Election: `நிறவெறிக்கு எந்தத் தடுப்பூசியும் கிடையாது!’ - ட்ரம்பை விமர்சித்த கமலா ஹாரிஸ்
ட்ரம்ப்பின் இந்தப் பேச்சுக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அமெரிக்க தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. கடந்த மாத இறுதியில் அதிபர் வேட்பாளர்கள் ட்ரம்ப் - ஜோ பைடன் இருவரும் நேரடி விவாதத்தில் பங்கேற்று தங்கள் சாதனைகள், திட்டங்களை எடுத்துரைத்து மக்களிடம் வாக்கு கேட்டனர். இதையடுத்து துணை அதிபர் வேட்பாளர்களுக்கான நேருக்கு நேர் விவாதம் அமெரிககாவின் உடா மாகாணத்தின் சால்ட்லேக் சிட்டியில் நேற்று நடைபெற்றது.
Also Read: ட்ரம்ப்: நீங்கள் ஒன்றும் புத்திசாலி கிடையாது - ஜோ பைடன்: நீங்கள் ஒரு கோமாளி!
அப்போது பேசிய கமலா ஹாரிஸ், ``அதிபருக்கும் துணை அதிபருக்கும் கொரோனா பரவல் தொடர்பாக ஜனவரி மாதமே தெரிவிக்கப்பட்டிருந்தும், அவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. நடப்பதை மூடி மறைக்கத்தான் முற்பட்டனர். `கொரோனா பரவல் என்பது ஒரு வதந்தி’ என்றும் அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார். காரணம், ட்ரம்ப்பிடம் கொரோனாவை எதிர்கொள்ளச் சரியான செயல்திட்டம் இல்லை. அமெரிக்க நிர்வாக வரலாற்றில் கொரோனாவைக் கையாண்டதில் ட்ரம்ப் அரசு பெருந்தோல்வி அடைந்திருக்கிறது'' என்று குற்றம்சாட்டினார்.
மேலும், ``கொரோனா பரவும் காலத்தில் மக்களின் காப்பீடு வசதி பறிக்கப்பட்டிருக்கிறது. கொரோனா தொற்று பற்றி வெள்ளை மாளிகை உண்மையான தகவல்களை வெளியிடுவதாக அதிபர் ட்ரம்ப் கூறுகிறார். ஆனால், அது உண்மையில்லை. அமெரிக்க மக்களை மதிப்பதாக இருந்தால் நீங்கள் அவர்களிடம் உண்மையைச் சொல்லியிருக்க வேண்டும்" என்றார் கமலா ஹாரிஸ்.
கமலா ஹாரிஸ் வாதத்துக்கு எதிர்வாதத்தை முன்வைத்த குடியரசுக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் மைக் பென்ஸ், சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு விமானப் போக்குவரத்து உள்ளிட்ட மக்கள் வருவதற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது மிக முக்கியமான முடிவு. இதன் மூலம், கொரோனா உயிரிழப்புகளைக் குறைத்திருப்பதாகத் தெரிவித்தார்.
மேலும், ``அமெரிக்க மக்களின் ஆரோக்கியம்தான் முக்கியம் என்று முதல் நாள் முதலே அதிபர் செயல்பட்டுவருகிறார். இந்த வருட இறுதிக்குள் கொரோனா நோய் தடுப்பு மருந்து உற்பத்தி செய்யப்படும்’’ என்றார்.
இதற்கிடையில், ``ட்ரம்ப் அரசின் மோசமான முடிவுகளால் பொருளாதாரம் சரிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது’’ என்று கமலா ஹாரிஸ் குறுக்கிட்டுப் பேசியதை மறுத்த பென்ஸ், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கியிருப்பதாக விளக்கம் அளித்தார்.
சீனாவுடனான சமீபத்திய வர்த்தகப் போரை ட்ரம்ப் நிர்வாகத்தின் சாதனைகளில் ஒன்றாக பென்ஸ் குறிப்பிட்டதை ஹாரிஸ் விமர்சனம் செய்ததோடு, வர்த்தகப் போரில் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
சீனாவுடனான வர்த்தகப் போர், அமெரிக்காவின் உற்பத்திப் பணிகளை இழந்து நாட்டின் விவசாயிகளுக்குத் தீங்கு விளைவித்ததாகவும் குற்றம்சாட்டிய கமலா ஹாரிஸ்,``எனது தாய் 19 வயதில் அமெரிக்காவுக்கு வந்தார். அவரது 25-வது வயதில் நான் பிறந்தேன். நான் இங்கு இருப்பது கண்டிப்பாக அவரைப் பெருமைப்படுத்தத்தான். மக்களின் வாழ்வாதாரத்தை உயரத்துவதுதான் எனது பணியாக இருக்கும்" என்று பேசி, தனது வாதத்தை நிறைவு செய்தார்.
source https://www.vikatan.com/government-and-politics/international/kamala-harris-slams-trump-administration-in-us-vice-presidential-debate
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக